ஐந்து இந்திய சிறார்கள் அடையாள ஆவணங்கள் பெற்றனர்

Admin

பாகான் டாலாம் தொகுதியின் உஜோங் பத்து கிராமப் பகுதியில் வசிக்கும் நாடற்ற  ஐந்து இந்திய சிறார்களுக்கு அடையாள ஆவணங்களைப் பெற்றுக் கொடுத்தார், சட்ட மன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு. தனசேகரன். பிறப்புப் பத்திரம், அடையாள அட்டை ஆகிய அடையாள ஆவணங்கள்  இல்லாமல் இருட்டறையில் வாழ்ந்து கொண்டிருந்த இந்த ஐந்து சிறார்களுக்கு வாழ்வில் விளக்கேற்றியவராக  திரு. தனசேகரன் திகழ்கிறார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தனேந்திரன் த/பெ யுவராஜா (வயது 11), ராஜேஸ்வரி த/பெ யுவராஜா (வயது 10) அதே தொகுதியில் வசிக்கும் மற்றொரு குடும்பத்தைச் சார்ந்த ஐஸ்வரியன் த/பெ செல்வகுமாரன் (வயது 13), துர்கா த/பெ செல்வகுமாரன் (வயது 11), மேலும் சிதார்த்தன்  த/பெ மகேந்திரன் (வயது 13) ஆகியோருக்கு அடையாள ஆவணங்கள் பெற்றுத் தந்தார். இந்தச் சிறார்களில் 13 வயது நிரம்பிய  ஐஸ்வரியனுக்கு அடையாள அட்டையும் பெறுவதற்கும் வழி வகுத்தார் என்பது சாலச் சிறந்தது. மேலும் பெருவிரல் ரேகையில் தெளிவின்மைக் காரணத்தால் அடையாள அட்டைப் பெறுவதில் பல இன்னல்களை எதிர்நோக்கி வந்த சிதார்த்தனுக்கு அடையாள அட்டைப் பெற்றுக் கொடுத்தார்.

கடந்த 25.2.2013-ஆம் நாள் தனது சேவை நிலையத்திற்குச் சம்பந்தப்பட்ட அச்சிறார்களை வரவழைத்த திரு தனசேகரன் தம் உதவிக் கரத்தால் அடையாள ஆவணங்களை வழங்கினார். இந்த அளப்பரிய உதவியால் அந்த ஐந்து சிறார்களும் ஆனந்தக் கடலில் மூழ்கினர். இச்சிறார்களின் பெற்றோர்கள் உரிய தருணத்தில் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அடையாள ஆவணங்களைப் பெறுவதற்கு அக்கறை கொள்ளாததால்தான் இப்பிரச்சனை எழுந்துள்ளது என திரு தனசேகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.