கடன் பெற வட்டி முதலைகளை அணுகாதீர் – குமரேசன்

Admin
பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் வட்டி முதலைக்கு எதிராக அளிக்கப்பட்ட காவல்துறை புகாரினை பாதிக்கப்பட்ட மாலினியுடன் காண்பிக்கின்றார்.

பத்து உபான் – 41 வயதுடைய மாது ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பரில் வட்டி முதலையிடம் (ஆ லோங்) இருந்து வெறும் 200 ரிங்கிட் மட்டுமே கடனாகப் பெற்றுக் கடன் சுமையில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் அ.குமரேசன் கூறுகையில், மாலினி என்று மட்டுமே அழைக்கப்பட விரும்பும் அந்த பாதிக்கப்பட்ட மாது, முகநூல் மூலம் இக்கடன் திட்டம் பற்றி அறிந்துள்ளார்.

“வேலையை இழந்து பொருளாதார நெருக்கடியில் இருந்ததால், தன் வீட்டுக்கு உணவுப் பொருட்கள் வாங்குவதற்காக ரிம200-ஐ கடனாக வாங்க முடிவுச் செய்துள்ளார்.

“பின்னர், ஒரு வாரத்திற்குள் வட்டியுடன் சேர்த்து ரிம400-ஆக கடனைத் திரும்பச் செலுத்தும்படி அவரிடம் கோரப்பட்டது.

“இருப்பினும், மாலினியால் முழுத் தொகையையும் செலுத்த முடியவில்லை, அதனால் அவர் ரிம200 மட்டுமே கொடுத்தார். முன்னதாக வட்டி விகிதம் வாரத்திற்கு ரிம200 என்று அவருக்கு தெரிவிக்கவில்லை.

“அன்று முதல், ஒவ்வொரு முறையும் பணம் செலுத்த தாமதமாகும்போது வட்டி பெற்றவரிடம் ரிம200 வட்டியாக வசூலிக்கப்படுகிறது. இதுவரை அவர் மொத்தம் ரிம4,500 கடன் செலுத்தியுள்ளார்,” என்று குமரேசன் அவரின் சேவை மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

சம்மந்தப்பட்ட வட்டி முதலையிடம் இருந்து மாலினிக்குத் தொடர்ந்து மிரட்டல் குறுச்செய்திகள் மற்றும் அழைப்புகள் வருவதாக குமரேசன் கூறினார், இதனால் தான் வாங்கிய கடனை விட அதிகமாக பணம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

“மாலினி இத்தனை காலம் பயத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார். ஒவ்வொரு முறையும் அவர் அவளை அழைக்கும்போதோ அல்லது குறுஞ்செய்திகளை அனுப்பும்போதோ, அவள் உடனடியாக பணத்தை வட்டி முதலையின் வங்கிக்கணக்குக்கு அனுப்பி விடுவார்.

“கடந்த ஏப்ரல்,27 அன்று அவர் கடைசியாக ரிம3,000-ஐ வங்கியில் செலுத்தினார்.

“முன்னதாக, மாலினி கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன் ஒப்பந்தத்தைப் படிக்கவில்லை. கடன் வாங்கிய தொகை ரிம200 என்பதற்குப் பதிலாக ரிம3,000 என்று குறிப்பிடப்பட்டிருப்பதை இப்போதுதான் அவள் அறிவதாக கூறினார்.

“ஒப்பந்தத்தின்படி அது ரிம3,000 என்றாலும், அவர் இப்போது உண்மையில் அதைவிட அதிகமாகவே கடனைச் செலுத்திவிட்டார்.

“மே,11 அன்று “ஆ லோங்கிற்கு” எதிராக மாலினி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்,” என்று அவர் கூறினார்.

15 முதல் 20 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் வயதான தாயாரைக் கொண்ட மாலினி, தனது குடும்பத்தின் பாதுகாப்புக்குப் பயந்து வட்டி முதலைக்கு பணம் செலுத்தி வந்ததாகக் கூறினார்.

“நானும் என் கணவரும் வேலைக்கு வெளியே செல்லும்போது, எங்கள் குழந்தைகளும் 65 வயதான எனது தாயாரும் வீட்டிலே இருப்பார்கள்.

“எனவே, அவர் என் குடும்பத்திற்கு தீங்கு விளைவிப்பதாக மிரட்டியதால் பயம் கொண்டதாகக் கூறினார்.

“எனது சேமநிதி வாரியப் (KWSP) பணத்தை மீண்டும் பெறுவதை அறிந்த வட்டி முதலை, என்னிடம் அதிக பணம் கேட்டார். இப்போது கூட அவர் என்னை அழைத்து ரிங்கிட் 2,000 வங்கியில் போடச் சொன்னார்,” என்றார்.

இதற்கிடையில், வட்டி முதலையிடம் கடன் வாங்க வேண்டாம் என்று குமரேசன் பொதுமக்களை வலியுறுத்தினார்.

“உங்களுக்கு நிதிப் பிரச்சினை ஏற்பட்டால், தயவுசெய்து கடன் கொடுப்பவரிடம் சென்று மாட்டிக் கொள்ளாதீர்கள். மாறாக எனது சேவை மையம் அல்லது அந்தந்த தொகுதிகளில் உள்ள பிற சேவை மையங்களை நீங்கள் அணுகலாம்.

“உதாரணமாக, பத்து உபான் சேவை மையத்தில் வாரத்திற்கு ஒருமுறை உணவு வங்கி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேவைப்படுபவர்களுக்கு உணவுக் கூடைகளையும் வழங்குகிறோம்,” என்று குமரேசன் குறிப்பிட்டார்.