கடல் சாகச விளையாட்டுப் பூங்கா அதிகாரப்பூர்வமாகத் திறப்பு விழாக் கண்டது

கடல் சாகச விளையாட்டுப் பூங்கா (WET WORLD WILD ADVENTURE PARK) கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று 25 டிசம்பர் 2013 நாள் அதிகாரப்பூர்வமாகத் திறப்பு விழாக் கண்டது. இந்நிகழ்வினை பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்கள் தமது பொற்கரத்தால் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். இப்பூங்கா பினாங்கு பத்து பிரிங்கி மூன் லைட் பே கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது. இது ஆசியாவிலேயே முதல் திறந்த கடல் விளையாட்டுப் பூங்கா என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த விளையாட்டுப் பூங்கா பினாங்கு மாநிலத்தில் எஸ்கேப் விளையாட்டு தளத்திற்கு அடுத்து நிலையில் திகழ்கிறது.

கடல் சாகச விளையாட்டுப் பூங்கா
கடல் சாகச விளையாட்டுப் பூங்கா

கடல் சாகச விளையாட்டுப் பூங்கா ரிம 3 மில்லியன் செலவில் கட்டப்பட்டது என தமது வரவேற்புரையில் குறிப்பிட்டார் முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்கள். பினாங்கு மாநிலத்தை 2008-ஆம் ஆண்டு மக்கள் கூட்டணி அரசு கைப்பற்றியப் பின் இரண்டு விளையாட்டுத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று பெருமிதமாகக் கூறினார். எதிர்காலத்தில் விளையாட்டுப் பூங்கா கருத்து படிமங்கள் மற்றும் சேவைக்குழுவுடன் இணைந்து அதிகமான விளையாட்டுத் தளங்கள் கட்டப்படவுள்ளன. இதன்வழி, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளின் கவனத்தை வெகுவாகக் கவர முடியும் என சுட்டிக் காட்டினார் மாநில முதல்வர். தொழில் முனைவோர் பினாங்கு மாநிலத்தை எப்பொழுதும் தங்களின் ஆக்கத்திறன் பொருள் தேவையை வழங்க முதன்மை தேர்வாகக் கொள்ளலாம் என மேலும் வலியுறுத்தினார்.

கடல் சாகச விளையாட்டுப் பூங்காவை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் விளையாட்டுப் பூங்கா கருத்து படிமங்கள் மற்றும் சேவை குழுவினர்.
கடல் சாகச விளையாட்டுப் பூங்காவை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் விளையாட்டுப் பூங்கா கருத்து படிமங்கள் மற்றும் சேவை குழுவினர்.

இப்பூங்கா தினமும் காலை மணி 9.00 முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும். இதில் பெரியவர்களுக்கு ரிம 40-ம் சிறியவர்களுக்கு ரிம 30-ம் கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த கடல் சாகச விளையாட்டுப் பூங்காவில்  ஒரு நாளுக்கு சுமார் 800 சுற்றுப்பயணிகள் விளையாடலாம். இத்தளம் 100% ஜெர்மன் தொழில்நுட்பத்துடன், TUV  பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது. சுற்றுப்பயணிகள் பாதுகாப்பு திட்டங்களைப் பின்பற்றுவதோடு பாதுகாப்பு உள்ளாடைகளும் கட்டாயம் அணிய வேண்டும். வருகையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு பாதுகாவலர்கள் விளையாட்டுத் தளத்தைச் சுற்றிலும் நிறுத்தப்படுவர். இப்பூங்கா பருவமழை காலத்தில் மூடப்பட்டிருக்கும், படகு மற்றும் மோட்டார் ஓட்ட தனி இடம்; குறிப்பிட்ட விளையாட்டுக்குச் செல்ல பாலம் அமைக்கப்பட்டுள்ளது; அவசர முதலுதவித் திட்டம், ஜெல்லிமீன் பாதுகாப்பிற்கு வலைகள் 1000 அடி நீளமும் 18 அடி ஆழமும் அமைக்கப்பட்டுள்ளது.  இத்தளம் தனிச் சிறப்புமிக்க பூங்காவாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இம்மாதிரியான கடல் விளையாட்டுத் தளங்கள் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக விடுமுறையைக் கழிக்க நல்ல தளமாக திகழ்கின்றது. அதோடு, இங்கு குடும்பத் தினம், தொழிற்பேட்டைகளின் குழு உருவாக்கம் போன்ற திட்டங்கள் நடத்த பொதுமக்களை வரவேற்கின்றனர்.

இந்நிகழ்வில் டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினரும் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினருமான மதிப்பிற்குரிய திரு ஜெக்டிப் சிங் டியோ அவர்கள், சுங்கை புயு சட்டமன்ற உறுப்பினரும் பொதுநல, சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் சேவைக்குழு உறுப்பினர் பீ புன் போ, விளையாட்டுப் பூங்கா கருத்து படிமங்கள் மற்றும் சேவைக்குழுவின் தலைமை செயல்திட்ட அதிகாரி டத்தின் ஜியன் ஜோ மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ரிச்சட் கோ ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கடல் சாகச விளையாட்டு பூங்காவிற்கு முதல் நாள் வருகை அளித்த பொதுமக்கள்.
கடல் சாகச விளையாட்டு பூங்காவிற்கு முதல் நாள் வருகை அளித்த பொதுமக்கள்.