கம்போங் பாரு ஸ்ரீ காளியம்மன் கோவில் தீமிதித் திருவிழா

பினாங்கு மாநிலத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற கோவில்களில் ஒன்றான ஸ்ரீ காளியம்மன் கோவிலின் ஆண்டு விழாவான தீமிதி உற்சவம் கடந்த ஜூன் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு மே 29ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று கோவிலில் காப்பு கட்டி கொடியேற்றம் நடந்தது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு அபிஷேகங்களும் 7.00 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனைகளும் அதன்பின் உபயமும் சிறப்புப் பூஜைகளும் இனிதே நடைபெற்றன. பினாங்கு மாநிலத்தின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் கோவில் உறுப்பினர்களின் தலைமையில் உபயங்கள் சிறப்பாக வழிநடத்தப்பட்டன. மேலும் ஒவ்வொரு நாளும் வண்ண வண்ண மாலைகளைச் சூட்டி மின்னும் ஆபரணங்களை அணிவித்து கலைநயத்துடன் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ காளியம்மா பல்லாக்கில் அமர்ந்து கோவிலைப் பவனி வந்து பக்தர்களை அருள் மழையில் நனைய வைத்தார்.

மரியாதை செய்யப்பட்ட பினாங்கு முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் சிறப்புரையாற்றுகிறார்
மரியாதை செய்யப்பட்ட பினாங்கு முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் சிறப்புரையாற்றுகிறார்

தீமிதித் திருவிழா அன்று பினாங்கு மாநிலத்தின் பல்வேறு வட்டாரங்களில் வாழும் பக்த பெருமக்கள் அதிகாலை 1 மணி முதல் ஸ்ரீ காளியம்மன் கோவிலுக்குப் படையெடுக்கத் தொடங்கினர். பக்த கோடிகள் பால் செம்பு, பால் குடம், காவடி, தீச்சட்டி ஏந்தியும், அடிப்பிரதட்சனை, அங்கப்பிரதட்சனை, ஆணிப்பாத நடை மேற்கொண்டும் தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். அதிகாலையிலேயே ஆத்தாவின் அருளைப் பெற பக்தி பரவசத்துடன் வந்திருந்த பக்தர்கள் கூட்டத்தின் பசியைத் தீர்க்க ஆலயத்தில் காலை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
காலை 6 மணியளவில் அம்மனுக்கு அபிஷேகம் முடிவடைந்ததும் யாகங்களுடன் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. கோவில் கரகப் பூசாரி சிறப்புப் பிரார்த்தனை, பூஜைகளை மேற்கொண்ட பின், விறகுக் கட்டைகளை எரித்துத் தீக்குழியைத் தயார் செய்தார். பின், ஆற்றங்கரையில் சக்தி கரகத்திற்குச் சிறப்பு பூசை மேற்கொள்ளப்பட்டது. அங்கு, கரகப் பூசாரி உடுக்கை அடித்து, ஆத்தாவை அழைத்துப் பாடினார். அருள் வந்து இறங்கியதும் பட்டாக்கத்தியின் மீது ஏறி அருள் வாக்கு கூறி, அங்கிருந்தவர்களுக்கு விபூதி பூசி அருள் வழங்கினார். அதன் பின்னர், கோவிலைச் சார்ந்துள்ள வட்டார மக்களை ஊர்வலமாக வந்து காண அம்மாவின் வண்ணமயமான இரதமும் விநாயகர் மற்றும் முருகனின் இரதமும் தயாரானது.

உபயநாட்களில் பட்டுச் சேலை உடுத்தி, வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டுள்ள ஆத்தாவின் அம்சமான திருவுருவம்
உபயநாட்களில் பட்டுச் சேலை உடுத்தி, வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டுள்ள ஆத்தாவின் அம்சமான திருவுருவம்

இதற்கிடையில், பினாங்கு மாநில முதல்வரும், ஆயர் பூத்தே சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு லிம் குவாங் எங் காலை 9 மணியளவில் ஸ்ரீ காளியம்மன் கோவிலுக்குச் சிறப்பு வருகையளித்தார். அவரைக் கொளரவிக்கும் வண்ணம் ஆலயம் சார்பில் கோவில் பூசாரி அவரின் தலையில் பட்டுத் துணி கட்டி மாலை அணிவித்து மரியாதை செய்தார். மதச் சுதந்திரம் என்பது பினாங்கு மாநிலத்தில் என்றும் காக்கப்படும் என்று முதல்வர் லிம் தம் சிறப்புரையில் வலியுறுத்தினார். தம் ஆட்சியின் கீழ் எந்தக் கோவிலையும் இடிப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று மீண்டும் உறுதியளித்தார். மக்கள் தங்கள் மதத்தைப் பேணுவதற்கும் மதம் சார்ந்த விழாக்களைக் கொண்டாடுவதற்கும் மாநில அரசு என்றும் ஆதரவளிக்கும் என்றும் கூறினார். மேலும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முதல்வர் இவ்வாண்டு 5,000 வெள்ளி நன்கொடையாக வழங்கி ஆதரவளித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினரான மதிப்பிற்குரிய வொன் ஹொன் வாய் அவர்களும் கோவிலுக்கு வருகையளித்திருந்தார். இவர் கோவிலின் தன்னார்வளர்களுக்கான சட்டையின் செலவை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரத முன்னிலையில் கோவில் உறுப்பினர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய வொங் ஹொன் வாய்
இரத முன்னிலையில் கோவில் உறுப்பினர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய வொங் ஹொன் வாய்

காலை 11 மணியளவில் கோவிலிலிருந்து புறப்பட்ட ஸ்ரீ காளியம்மன் கோவிலின் இரு இரதங்களும் பார்லிம், கம்போங் பிசாங், ஆயர் ஈத்தாம், ஆயர் பூத்தே, பாடாங் தெம்பாக், லும்பா கூடா, லா சாலே ஆகிய வட்டாரங்களின் வீதி வழியாக ஊர்வலம் வந்தன. தன் எல்லையில் தன்னைக் காண வரும் பக்தர்களை ஆண்டுக்கு ஒரு முறை அவர்களின் எல்லைக்குச் சென்று மகிழ்விக்க இரதத்தில் ஊர்வலம் வரும் ஆத்தாவை வரவேற்க ஆங்காங்கே பந்தல்கள் போடப்பட்டு அன்னாதானங்கள் வழங்கப்பட்டன.. இரதத்தில் பவனி வந்த காளியாத்தாவிற்குப் பக்த கோடிகள் தேங்காய்கள் உடைத்தும் தீபாராதனைகள் எடுத்தும் அவளின் திருவருளைப் பெற்றனர். ஊர்வலம் வந்த இரதங்கள் இரவு 7.30 மணியளவில் கோவிலை வந்தடைந்தது.
பின், பக்தர்கள் பல்லாக்கில் அமர்ந்திருந்த அம்மன் முன்னிலையில் தீ மிதித்தும் பால் குடங்களை ஏந்தி தீக்குழியைச் சுற்றி வந்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். சிறப்புப் பூஜைகளுக்கும் அர்ச்சனைகளுக்கும் பிறகு கோவிலில் அன்னதானமும் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்த பெருமக்கள் கலந்து கொண்ட ஸ்ரீ காளியம்மன் கோவிலின் தீமிதித் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்று இனிதே முடிவுற்றது. கோவிலின் தலைவர் திரு.திருசந்திரன், துணைத் தலைவர் திரு.பன்னீர்செல்வம், செயலாளர் திரு.கணேசன், துணை செயலாளர் திரு.விஸ்வநாதன், பொருளாளர் திரு.ஆருமுகம் ஆகியோர், திருவிழா சுமூகமாக நடைபெற பக்கபலமாக இருந்த ஏ.எஸ்.பி கருணா தலைமையிலான காவல் துறைக்கும், கோவில் தன்னார்வளர்களுக்கும், மற்றும் எல்லாவகையிலும் ஆதரவாக இருந்த பொதுமக்களுக்கும் தங்களின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);