கல்வி, சுகாதாரம் & சமூகநலன் முன்னேற்றத்திற்குப் பல திட்டங்கள் அமலாக்கம் காணும்

Admin

இந்துக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு வளர்ச்சியடைந்த ஒரு சமூகமாக உருமாற்றம் காண கல்வி, சுகாதாரம், சமூகநலன் கூறுகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் ஆர்.ஏ லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

“இந்து அறப்பணி வாரியம் ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக விளங்கும் கல்வி வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க இணக்கம் கொள்கிறது. எனவே, கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஒரு முறை வழங்கப்படும் கல்வி உபகாரச்சம்பளம் தொடர்ந்து வழங்கப்படும்.

மேலும், இந்த உபகாரச் சம்பளம் பெற சான்றிதழ், டிப்ளோமா முதல் இளங்கலை வரை மேற்கல்வியைத் தொடரும் இந்து மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வுப் பெற்ற ஒவ்வொரு மாணவரும் அவரவரின் கல்வி தகுதிக்கேற்ப உபகாரச் சம்பளம் பெறுவர்.

ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்து அறப்பணி வாரிய புதிய ஆணையர் குழுவினர்.

ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர் தலைமையில் அமைக்கப்பட்ட புதிய ஆணையர் குழுவினர் இத்திட்டத்தின் கீழ் இம்முறை அதிகமாக இந்து மாணவர்களுக்கு கல்வி உபகாரச்சம்பளம் வழங்க உத்தேசிப்பதாக டாக்டர் லிங்கேஸ்வரன் கூறினார்.

இந்து அறப்பணி வாரியம் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2022 ஆண்டு வரை 2981 மாணவர்களுக்கு கல்வி உபகாரச் சம்பளம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“மேலும், ஆலயம் என்பது மதம் மற்றும் சமயம் சார்ந்த தலமாக மட்டுமே செயல்படாமல் மாணவர்களின் கல்வி நலனுக்காக குருகுலமாக அமைக்கத் திட்டமிடப்படுகிறது. தொடக்கமாக ஒரு மாவட்டத்திற்கு ஒரு குருகுலம் தொடங்கப்படும். குருகூலம் திட்டத்தின் கீழ் பி40 குழுவைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளி முடிந்தவுடன் பள்ளிப் பாடத்திட்ட அடிப்படையிலான பிரத்தியேக வகுப்புகளில் பங்கேற்பர். இந்தப் பிரத்தியேக வகுப்புகள் வழிநடத்த ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.

“இதன் மூலம், மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதோடு தீயச் செயல்களில் இருந்து விலகவும் ஒரு தூண்டுகோளாக அமையும்,” என நம்பிக்கை தெரிவித்தார்.

தற்போது மருத்துவச் செலவுகள் அதிகரித்து வரும் வேளையில் சுகாதாரக் கூறுகளுக்கும் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும். இந்து அறப்பணி வாரியத்தின் கீழ் பினாங்கு மாநில தீவிலும் பெருநிலத்திலும் முறையே ஒரு டயாலிசிஸ் மையம் திறக்கத் திட்டமிடப்படுகிறது.

“முதல் கட்டமாக எனது தலைமையில் மருத்துவக் குழுவினர் மற்றும் அறப்பணி வாரிய ஆணையர்களுடன் இணைந்து ‘Buddhist Tzu Chi’ டயாலிசிஸ் மையத்திற்கு அலுவல் பயணம் மேற்கொண்டோம்.

“இத்திட்டம் செயல்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். ஏனெனில், டயாலிசிஸ் மையம் தொடங்குவதற்கு அதிகமான நிதி ஒதுக்கீடுகள் தேவைப்படும். அதேவேளையில், நிபுணத்துவம் மிக்க மருத்துவர்களின் சேவையும் அவசியம். சிறுநீரகப் பிரச்சனையை எதிர்நோக்கும் பல நோயாளிகள் டயாலிசிஸ் சிகிச்சையின் மருத்துவச் செலவினைக் கட்ட முடியாமல் தவிக்கின்றனர். எனவே, இந்துக்களின் சுகாதாரத்தை மேம்படுத்த டயாலிசிஸ் மையம் அவசியமாகும்,” என முன்னாள் பொது மருத்துவமனை இயக்குநருமான டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

சுகாதார முகாம், சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்துவதன் மூலம் பொது மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். சுகாதார முகாம் மூலம் இலவச மருத்துவப் பரிசோதனை நடத்த இலக்கு கொண்டுள்ளோம். அதேவேளையில், சட்ட ரீதியிலானப் பிரச்சனையை எதிர்நோக்கும் பொது மக்களுக்கும் சட்ட ஆலோசனைகள் வழங்கி உதவிகள் செய்யப்படும். இத்திட்டத்தனை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்த திட்ட்மிட்டுள்ளோம், என்றார்.