குடியுரிமையற்ற பிள்ளைகள் பள்ளியில் கல்வி கற்க அனுமதிக்க வேண்டும் – பேராசிரியர்.

Admin

 

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு குடியுரிமையற்ற மற்றும் தத்தெடுக்கப்பட்டவர்கள் உட்பட்ட பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க அனுமதிக்குமாறு கல்வி அமைச்சிடம்  வலியுறுத்தியது.

பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி கூறுகையில், இந்த ஆண்டு நடைமுறைக்கு வந்த புதிய தீர்மானத்தில் குடியுரிமையற்ற அனைத்து பிள்ளைககளும் அந்தந்த நாடுகளிலிருந்து கடப்பிதழ் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

“சம்பந்தப்பட்ட  நாட்டிலிருந்து கடப்பிதழ் பெற அந்த குழந்தைகளின் ஈன்றெடுத்த தாய் நேரடியாக வர வேண்டும்.

“அப்பிள்ளையின் சொந்த தாய் இருக்கும் இடம் கூட தெரியாத பெற்றோர்கள், எவ்வாறு அந்த ஆவணத்தை பெற முடியும்.

“மேலும், அப்பிள்ளைகள் வேறொரு தம்பதியர்களால் தத்தெடுக்கும் சூழலில் எப்படி கடப்பிதழ் பெறுவது சாத்தியமாகும்.

“பினாங்கில் மட்டுமே, பெற்றோர்களிடமிருந்து 19 வழக்குகள் பெற்றுள்ளன. குடியுரிமை அல்லாத தத்தெடுக்கப்பட்டப் பிள்ளைகள் இந்த ஆண்டு தொடங்கி பள்ளியில் சேருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முந்தைய ஆண்டுகளில், இந்த பிள்ளைகள் பள்ளியில் கல்வியைத் தொடர அனுமதிக்கப்பட்டார்கள். மற்ற மாநிலங்களிலும் இந்த புள்ளிவிவரங்கள் அதிகமாக இருக்கும்  என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“கடந்த ஆண்டு நவம்பர்,13 ஆம் தேதி மாநில கல்வித் துறைக்கு இதன் தொடர்பாக அதிகாரப்பூர்வ கடிதத்தையும்  எழுதியுள்ளேன், ஆனால் இதுவரை அவர்களிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை.

“எனவே, மாநில கல்வித் துறை கல்வி அமைச்சுடன் இணைந்து இந்த விஷயத்தில் விரைவில் ஒரு தீர்வைக் காண வேண்டும்,” என்று பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.ராமசாமி இன்று கொம்தாரில்  தனது அலுவலகத்தில் நடைப்பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்றான முறையான கல்வியைப் பெறுவதற்கு, கல்வி அமைச்சு மறுக்கக் கூடாது
என்று இராமசாமி மத்திய அமைச்சிடம் கோரிக்கையை முன்வைத்தார்.

“இந்த நிலைமை தொடர்ந்தால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

“அவர்கள் எந்த நிதி உதவியையும் நாடவில்லை, மாறாக அவர்கள் பள்ளிக்குச் சென்று முறையான கல்வியைப் பெறவே விரும்புகிறார்கள்.

“மத்திய அரசாங்கத்தில் நம்பிக்கைக் கூட்டணி (பி.எச்) ஆட்சி செய்யும் போது, ​​தத்தெடுக்கப்பட்டவர்கள் உட்பட குடியுரிமை அல்லாத குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களையும், நீதிமன்ற உத்தரவையும் வழங்கினால்  அரசு பள்ளியில் சேர அனுமதிக்கப்பட்டனர். எனவே, தற்போதைய அரசாங்கம் அந்தக் கொள்கையை பின்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

” குறைந்த பட்சம், கடப்பிதழ் பெற காத்திருக்கும் தருணத்தில் அவர்கள் முதலில் பள்ளியில் கல்வியைத் தொடர அனுமதிக்க வேண்டும்.

“அனைத்து பெற்றோர்களாலும் தங்கள் குடியுரிமையற்ற பிள்ளைகளை குறிப்பாக பி40 குழுவைச் சேர்ந்தவர்கள் தனியார் பள்ளிக்கு அனுப்ப இயலாது.  எனவே, இந்த பிரச்சனையை விரைவாக தீர்வுக்கான வேண்டும்,” என்று மனிதவளம், கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆட்சிக்குழு உறுப்பினர் பேராசிரியர் ப.இராமசாமி சம்மந்தப்பட்ட அமைச்சிடம் கோரிக்கை விடுத்தார்.