கெர்னி வார்ஃப் இப்போது அதிகாரப்பூர்வமாக ‘கெர்னி பே’ என அழைக்கப்படும்

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கெர்னி வார்ஃப் திட்டத்திற்கு அதிகாரப்பூர்வமாக ‘கெர்னி பே’ என மறுபெயரிடப்பட்டுள்ளது என இன்று அறிவித்தார்.

முதலமைச்சரின் கூற்றுப்படி, இத்திட்டத்தின் அமைப்பு மற்றும் நோக்கத்திற்கு ஏற்ப இப்பெயர் மாற்றம் அவசியம், என்றார்.

“எனவே, கெர்னி வார்ஃப் திட்டத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக கெர்னி பே என்று மாற்ற முடிவு செய்தோம்,” என ஶ்ரீ பினாங்கு அரங்கத்தில் நடைபெற்ற அரசு ஊழியர்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் சாவ் தனது உரையில் இவ்வாறு கூறினார்.

மேலும், மாநில செயலாளர் டத்தோ முகமட் சாயுதி பாக்கர் மற்றும் முதலாம் துணை முதலமைச்சர் டத்தோ அகமட் ஜாக்கியுடின் அப்துல் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

2016 இல் தொடங்கப்பட்ட கெர்னி பே திட்டம், கெர்னி டிரைவிலிருந்து மீட்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டம் பிரிவு 1 மற்றும் பிரிவு 2 என பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் பிரிவில், குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா, ‘skate’ பூங்கா, கண்காணிப்பு மேல்தட்டுத் தளம் (south vantage point), பொதுக் கழிப்பறைகள், பாதசாரிகளுக்கான நடைபாதை, அங்காடிக் கடைகள், சில்லறைக் கடைகள் மற்றும் பொழுதுபோக்கு பூங்கா, ஹாக்கர் கியோஸ்க்குகள், திறந்த வாகனம் நிறுத்தும் இடம் மற்றும் பல அம்சங்களைக் கொண்டுள்ளது.

இதற்கிடையில், பிரிவு 2 என்பது ஒரு அங்காடி உணவகம், சில்லறை வியாபாரப் பகுதி, பொதுக் கழிப்பறைகள், கண்காணிப்பு மேல்தட்டுத் தளம் (வடக்கு பகுதி),கூடுதல் வியாபாரிகளுக்கான கியோஸ்க்குகள், வாகன நிறுத்தும் கட்டிடம், திறந்த வாகன நிறுத்தும் இடம், , சூராவ், நீர்வழி டாக்சிகளுக்கான ஜெத்தி, மனிதனால் உருவாக்கப்பட்ட கடற்கரை மற்றும் மற்றும் பல இடங்கள் உள்ளடங்கும்.

அதேவேளையில், இத்திட்டத்தின் முதல் பிரிவு இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு திறக்கப்படும் என்றும், இதற்கிடையில் முழுத் திட்டமும் 2025 இல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, பினாங்கு மக்களிடம் இருந்து வலுவான ஆதரவுப் பெற்று, ஆட்சி அமைக்க நேரிட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநில அரசாங்கம் பல முக்கிய கூறுகளுக்கு முன்னுரிமை அளித்து கவனம் செலுத்தும் என்று சாவ் கூறினார்.

“மாநிலத் தேர்தலுக்குப் பிறகு, நடப்பு அரசாங்கத்திற்கு மீண்டும் ஒருமுறை பினாங்கை நிர்வகிப்பதற்கான ஆணையை வழங்கினால், மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கானக் கூடுதல் முயற்சிகளில் நாங்கள் கவனம் செலுத்துவோம்.

“மின் மற்றும் மின்னணுவியல்(E&E) துறையில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், integrated circuit (IC) வடிவமைப்பு, மருத்துவ தொழில்நுட்பம், டிஜிட்டல் முயற்சிகள் மற்றும் புதிய பொருளாதாரம் ஆகியவை இதில் அடங்கும்.

“பினாங்கு தெற்குத் தீவின் (PSI) ஒரு பகுதியாக இருக்கும் ‘சிலிக்கான் தீவு’ திட்டம் மற்றும் பினாங்கு போக்குவரத்து திட்டத்தின் (PTMP) ஒரு பகுதியாக இருக்கும் ஜார்ச்டவுன்-பாயான் லெப்பாஸ் இலகு இரயில் போக்குவரத்து திட்டம் உட்பட மாநிலத்தில் மெகா திட்டங்கள் சீராக செயல்படுத்தப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்.

“இந்த முன்மொழியப்பட்ட எக்ஸ்பிரஸ்வே திட்டம் (உயர்ந்த நெடுஞ்சாலை திட்டம்) ஜூரு முதல் சுங்கை டுவா வரையிலான பகுதியில் போக்குவரத்து நெரிசலை திறம்பட கட்டுப்படுத்த முடியும்,” என நம்பிக்கை தெரிவித்தார்.
மாநில அரசாங்கம் பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனைகளுக்கும் முன்னுரிமை அளிக்கும் என்றும் முதலமைச்சர் மேலும் கூறினார்.

“இதில் தற்போது மேற்கொள்ளப்படும் வெள்ள நிவாரணத் திட்டங்கள், குறைந்த கார்பன் நகரத் திட்டங்கள் மற்றும் மின்சார வாகன (EV) வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

“அது தவிர, சுங்கை டுவா விரைவுச் சாலை திட்டத்திற்கு நிதியளிக்க மத்திய அரசாங்கத்தை வலியுறுத்துவதன் மூலம் நிலப்பரப்பில் போக்குவரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

“மாநிலத்தில் ஏற்படக்கூடிய நீர் நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்காக, நீர் தற்செயல் திட்டம் 2030 (WCP 2030)-ஐ நாங்கள் தொடர்ந்து செயல்படுத்துவோம்.
கடைசியாக, மாநிலத்தில் உள்ள மக்களுக்கு அதிகாரம் அளித்தல், சமூக மேம்பாடு, இளைஞர்கள், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துவோம்,” என்று அவர் கூறினார்.
தனது உரையின் முடிவில், சிறந்த சேவைகளை வழங்குவதில் அரசாங்க ஊழியர்களுக்கு ஆதரவளிப்பதில் பினாங்கு அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை சாவ் வெளிப்படுத்தினார்.

“தேசிய ரீதியில் பிரமிக்கும் குடும்பத்தை மையமாகக் கொண்ட பசுமை மற்றும் விவேக மாநிலத்தை உருவாக்குதல்,” என்ற மாநில அரசாங்கத்தின் பினாங்கு2030 தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப வழங்கப்படும் சேவைகளை உறுதிப்படுத்த இது முக்கியமானது,” என்று அவர் கூறினார்.