‘கெலக்சி’ நடனக் குழுவினரின் இரத்த தான முகாம்

பினாங்கு ‘கெலக்சி’ நடனக் குழுவினரும் செபராங் ஜெயா மருத்துவமனையும் இணைந்து இரத்த தான முகாம் ஒன்றினை பிறை மெகா மால் பேரங்காடியில் காலை 10.00 மணி முதல் மதியம் 3.00 வரை கடந்த மே 9-ஆம் திகதி ஏற்பாடுச் செய்தனர். கெலக்சி நடனக் குழுவினர் இரண்டாவது முறையாக இந்த ரத்த தானம் முகாம் ஏற்பாடுச் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதனை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் பினாங்கு இரண்டாம் துணை முதல்வரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள்.

கெலக்சி நடன குழுவினரின் இரத்த தானம் முகாம் ஏற்பாட்டுக் குழுவினருடன் பினாங்கு இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு.
கெலக்சி நடன குழுவினரின் இரத்த தானம் முகாம் ஏற்பாட்டுக் குழுவினருடன் பினாங்கு இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு.

இந்நிகழ்வின் முக்கிய நோக்கம் செபராங் ஜெயா மருத்துவமனையின் இரத்த வங்கியை நிரப்புவதே ஆகும். ஏனெனில், கொண்டாடவிருக்கும் பண்டிகை காலங்களில் அதிகமான சாலை விபத்துகள் நிலவும் என்பதால் இரத்த பயன்பாடு அவசியமாகிறது. இதனை நிவர்த்திச் செய்யும் வகையில் இரத்த தானம் முகாம் நடத்தப்படுவதாக வரவேற்புரையில் கூறினார் மதிப்பிற்குரிய இரண்டாம் துணை முதல்வர் அவர்கள். அதோடு, பொதுமக்கள் இடையே ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை மேலோங்கச் செய்ய இம்மாதிரியான முகாம் வழிவகுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். விழாக் காலங்களில் சாலை விபத்துகள் ஆங்காங்கே அதிகமாக நடைபெறுவதால் மனித உயிர்களைக் காப்பாற்றும் முன் ஏற்பாடாக ரத்த வங்கியை நிரப்பப்படுகிறது எனப் பாராட்டினார்.

இரத்த தானம் முகாமில் இந்தியர், சீனர் மற்றும் மலாய்காரர்கள் என மூவின மக்களின் ஆதரவு தமக்கு மனநிறைவை தருவதாக பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு கூறினார். பல உயிர்களைக் காப்பாற்றும் இரத்த தானத்தை அளிக்க அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அமல்படுத்துவதோடு மட்டுமின்றி வாகனத்தில் பயணிக்கும் பொழுது பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிக அவசியம் என பரிந்துரைத்தார்.

ரத்த தானம் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள்
ரத்த தானம் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள்

இந்நிகழ்வில் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் குமாரி கஸ்தூரி பட்டு, செபராங் பிறை நகராண்மைக் கழக திரு.சத்தீஸ் முனியாண்டி, திரு.டேவிட் மார்ஷல், பிறை சமூக முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டுக் கழகத் தலைவர் ஸ்ரீ சங்கர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.