கொடிமலை மீண்டும் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது – மாநில முதல்வர்

கடந்த நவம்பர் மாதம் பினாங்கில் ஏற்பட்ட வெள்ள பேரிடரில் பினாங்கு கொடிமலை பெருமளவில் பாதிக்கப்பட்டதால் இரயில் சேவை கடந்த இரண்டு மாத காலமாக நிருத்தப்பட்டது. அப்பேரிடரின் போது நிலச்சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் கொடிமலையை நேரில் சென்று பார்வையிட்டார்.(உடன் பினாங்கு மாநகர் கழகத் தலைவர் டத்தோ மைமுனா முகமது சாரிப்)

பினாங்கு கொடிமலை கழகத்தின் முயற்சியில் அனைத்து சேதங்களும் குறுகிய காலத்தில் சீரமைக்கப்பட்டு கடந்த 30 டிசம்பர் அன்று மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது என கொடிமலைக்கு நேரில் சென்று பார்வையிட்ட மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எனினும் பினாங்கு கொடிமலை மலை ஏறும் நடைப்பாதை மற்றும் தாமான் பொத்தானி நான்கு சக்கர பயண பாதை இன்னும் பயன்பாட்டிற்கு மூடப்பட்டுள்ளது. பினாங்கு மாநில அரசின் விண்ணப்பத்திற்கு இணங்க பினாங்கு கொடிமலை சுற்றுலாப்பகுதி முதலில் மறுசீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது என்பது சாலச்சிறந்தது.

இச்சீரமைப்புப் பணிகளுக்கு உதவிப்புரிந்த பினாங்கு பொதுப்பணி துறை, பினாங்கு மாநகர் கழகம், பினாங்கு நீர் விநியோக வாரியம், தெனாகா நேஷனல், தெலெகோம் மலேசியா மற்றும் பினாங்கு ஆயுதப்படையினருக்கும் மாநில முதல்வர் நன்றி மாலை சூட்டினார்.

மேலும், பினாங்கு கொடிமலை பற்றிய வீண் ஆருடங்களை பரப்ப வேண்டாம் என பொறுப்பற்ற தரப்பினரை கடுமையாகச் சாடினார் மாநில முதல்வர். பினாங்கு கொடிமலை தே காடியன் யூ.கெ‘-வின் ஆசியாவின் சிறந்த சுற்றுலாத்தலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்றால் மிகையாகாது.