கோலாலம்பூர் சுக்மாவில் களம் இறங்க அம்பு எய்தல் போட்டிக்கு 16 வீரர்கள்

Admin

 

சுங்கை நிபோங் – கோலாலம்பூரில வருகின்ற செப்டம்பர்,16 முதல் 24 வரை நடைபெறவுள்ள 20வது சுக்மாவிற்கு (மலேசியா விளையாட்டு) பினாங்கு அம்பு ஏய்தல் அணியிலிருந்து இரண்டு தேசிய அம்பு எய்தல் வீரர்களான எம்.கம்பேஸ்வரன் மற்றும் பி.கயல்விழி தலைமையில் களம் இறங்குகின்றனர்.

இந்த இரு அம்பு எய்தல் வீரர்களும் தற்போது மலேசியா அறிவியல் பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர். ஜூலை, 26 முதல் ஆகஸ்ட், 6 வரை தாய்லாந்து, உபோன் ரட்சதானியில் நடைபெறவுள்ள 20வது ஆசியான் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளிலும் மலேசியாவைப் பிரதிநிதித்து செல்வர்.

சமூக அறிவியல் புலத்தில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் கம்பேஸ்வரன், கடந்த 2018-இல் பேராக் மாநிலத்தில் நடந்த சுக்மாவில் சையத் இம்ரான் சையத் இப்ராஹிம் மற்றும் முஹம்மது பாரிஸ் ஜமாலுதீன் ஆகியோருடன் இணைந்து ஆண்களுக்கான குழுப் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றார்.

இந்தப் பல்கலைக்கழகத்தில்
நிர்வாகத் துறையில் முதலாம் ஆண்டு பயிலும் கயல்விழி கடந்த மாதம் ஹனோயில் நடந்த 31வது சீ விளையாட்டுப் போட்டியில், மகளிருக்கான கொம்பாவுன் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

அம்பு எய்தல் பயிற்சியாளர்
ஷாமனி, 36 கூற்றுப்படி, பினாங்கு 16 பேர் கொண்ட அணியை அதாவது எட்டு ஆண்கள் மற்றும் எட்டு பெண்கள் என போட்டியாளர்களை கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 20-வது சுக்மாவிற்கு அனுப்புகிறது.

 

“நாங்கள் ஐந்து மூத்த அம்பு எய்தல் வீரர்களையும், 11 வீரர்கள் முதல் முறையாகவும் சுக்மாவுக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். எனவே, ஒரு தங்கம் என்ற இலக்கை மட்டுமே நிர்ணயித்துள்ளோம். எங்கள் போட்டியாளர்கள் அனைவரும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் அல்லது பள்ளிகளில் படிக்கிறார்கள்.

“எங்கள் 2018 சுக்மா வீரர்களில் சிலருக்கு வயது வரம்பு மீறியதால் இப்போது அவர்கள் மற்ற துறைகளில் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்துள்ளனர்.

“எங்கள் குழுவின் இளம் போட்டியாளரின் வயது 13 மட்டுமே,” என்று முன்னாள் தேசிய அம்பு எய்தல் வீராங்கனையான ஷாமணி, முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் இவ்வாறு கூறினார். செத் ஜார்ஜஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதலாம் படிவம் பயிலும் மாணவியான கிர்த்திகாவை மேற்கோள் காட்டி ஷாமனி இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த சுக்மாவில், பினாங்கு ஒரு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றது.

சுங்கை நிபோங் பெஸ்தா தலத்தில் ஷாமனி (காம்பவுண்ட் பயிற்சியாளர்) மற்றும் சலினா புட்ரியானா (ரிகர்வ் பயிற்சியாளர்) ஆகியோரின் கீழ் தற்போது 20 அம்பு ஏய்தல் வீரர்கள் பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

“நாங்கள் இங்கு சுமார் ஏழு மாதங்களாகப் பயிற்சி செய்து வருகிறோம், ஒவ்வொரு பயிற்சி அமர்வும் மூன்று மணி நேரம் நீடிக்கும். மேலும், போட்டியாளர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் ஜிம் பயிற்சியுடன் வாரத்திற்கு ஐந்து முறை பயிற்சிகள் வழங்குகின்றோம்.

“எங்கள் வழக்கமான பயிற்சி மைதானமான ரெசிடென்சி மைதானத்தில் பயிற்சிப் பெற சமீபத்தில் எங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. ஆயினும், திறந்த வெளியில் காற்றோட்டத்தில் பயிற்சி பெற நாங்கள் விரும்புகிறோம்,” என்று 2020 ஆம் ஆண்டின் மாநில மகளிர் பிரிவுப் பயிற்சியாளருக்கான சிறந்த விருதை வென்ற ஷாமனி கூறினார்.

இதுவரை நடந்த மூன்று சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பினாங்கு சிறந்த அடைவுநிலையைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

சிலாங்கூரில் நடைபெற்ற முதல் தேசிய சுற்றுப் போட்டியில், பினாங்கு ஒரு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்களை வென்றது. பின்னர், சிலாங்கூர் திறந்த போட்டியில், பினாங்கு நான்கு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்களையும், கடந்த வாரம் ஜோகூர் பாருவில் நடந்த இரண்டாவது தேசிய சுற்றுப் போட்டியில், பினாங்கு ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றியது.

மேலும், ஜூலை 20 முதல் 24 வரை ஜோகூர் பாருவில் நடைபெறும் தேசிய இளைஞர் சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்க பினாங்கு ஒரு குழுவை அனுப்பும்.

மாநில அம்பு எய்தல் வீரர்கள் விரைவில் புதிய விளையாட்டு உபகரணங்களைப் பெறலாம் என்று ஷாமனி நம்பிக்கை தெரிவித்தார்.

“சுக்மாவுக்கு குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு முன்பே உபகரணங்களைப் பெறுவோம் என்று எதிர்பார்க்கிறேன். முன்னதாக, வெளிநாட்டிலிருந்து உபகரணங்களைப் பெறுவதற்கு இரண்டு வாரங்கள் அல்லது அதற்கு மேல் ஆகும். ஆனால் கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்திற்குப் பிறகு, இது மிகவும் நீண்ட காலம் (மாதங்கள்)
ஏற்படுவதாகக் கூறினார்.

“உதாரணமாக கம்பேஸ்வரன், ஆறு மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு தான் அமெரிக்காவிலிருந்து தனது உபகரணங்களைப் பெற முடிந்தது,” என்று ஷாமணி கூறினார்.