கோவிட்-19 தடுப்பூசியை பெற்று இத்தொற்றின் சங்கிலியை உடைப்போம் – ஜெக்டிப்

Admin

 

ஜார்ச்டவுன் – வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று கோவிட் -19 தடுப்பூசியின் முதல் ‘டோஸை’ பினாங்கு மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் அவர்களுக்குப்  போட  திட்டமிடப்பட்டுள்ளது.

மாநில உள்ளூர், வீடமைப்பு, நகர்ப்புற மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ கூறுகையில், பினாங்கில் முதன்முதலில் தடுப்பூசி போடுவதற்கு முதல்வர் முன்வந்து இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

“மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களைப் பொறுத்தவரை, இது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இருப்பினும், வாய்ப்புக் கிடைக்கப்பெற்றால் முதல்வருக்கு அடுத்த நிலையில் இந்த தடுப்பூசி பெறுவதற்கு தானும்  முன்வருவதாகக்,” கூறினார்.

“கோவிட் -19 தடுப்பூசி பெறுவதற்குப் பதிவு செய்துள்ளேன்.

ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் ‘மைசெஜாதெரா’ செயலியில் கோவிட்-19 தடுப்பூசிக்கு பதிந்துள்ளார்

“தடுப்பூசி பயனுள்ளது என நிரூபிக்க, தலைமைத்துவ பதவில் இருப்பவர்கள் முன்னிலை வகித்து இதனை போடுவதன் மூலம் பொது மக்களும் இதனை நம்பிக்கையுடன் பின்பற்றுவர்.
“இறுதியில், கோவிட் -19 க்கு எதிரான இந்த போரில் நாம் வெற்றிப்பெற  வேண்டும்.

“தடுப்பூசி தொடர்பான தகவல்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்,” என்று ஜெக்டிப் இன்று கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னணி வரிசை பணியாளர்கள் பட்டியலில் இடம்படுவர்.

கோவிட் -19 பரவுவதைத் தடுக்க நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஓ.பி) தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

நேற்று இரவு 9.00 மணி நிலவரப்படி, 600,000 க்கும் மேற்பட்ட தனிநபர்கள் ‘மைசெஜ்தெரா’ செயலியின் மூலம் கோவிட் -19 தடுப்பூசி பெற பதிவுச் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, பினாங்கு அரசு பினாங்கு மக்கள் உதவித் திட்டம் 1.0, 2.0 மற்றும் 3.0 பல்வேறு துறையைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கு உதவ  ரிம20.44 மில்லியனை ஒதுக்கியுள்ளதாகக் கூறினார்.

பினாங்கு மக்கள் உதவித் திட்டம் 3.0 கீழ் உதவிக்கு விண்ணப்பிக்க தகுதியான வர்த்தகர்கள்  பிப்ரவரி,28-க்குள் விண்ணப்பிக்கலாம். மேல் விபரங்களுக்கு https://elesen.mbpp.gov.my/mppplic/query/info_query.jsp அல்லது http: //bantuanrm500-covid.mbsp.gov.my/penjajafasa3.php. அகப்பக்கத்தை வலம் வரலாம்.

அச்செய்தியாளர் சந்திப்பில் லோரோங் கூலிட் வர்த்தகர்கள் சங்கத்தின் உதவியுடன், டத்தோ கெராமாட்டில் உள்ள வசதிக் குறைந்த மூத்தக் குடிமக்கள் மற்றும் ஊனமுற்ற தரப்பினருக்கு  150 பரிசுக்கூடைகளை டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் வழங்கினார்.