கோவிட்-19 பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே மேலோங்கியுள்ளது – பேராசிரியர்

பிறை – பினாங்கு மாநில பொதுமக்களிடையே கோவிட்-19 தொற்றுக்கிருமி பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாக தாமான் இண்ராவாசே பொது மண்டபத்தில் வசதிக்குறைந்த பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் பேராசிரியர் கூறுகையில், பினாங்கு மாநிலத்தில் கோவிட்-19 தாக்கம் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூடிய விரைவில் இதிலிருந்து விடுப்பட வழிவகுக்கும் என்று விவரித்தார்.

பினாங்கு மாநிலம் பச்சை மண்டலமாக அதாவது கோவிட்-19 அற்ற மாநிலமாகப் பிரகடனம் செய்ய ஏப்ரல் 28 (14 நாட்கள்) வரை காத்திருக்க வேண்டும்.

தொடர்ந்து, பிறை வட்டாரத்தில் வசதிக் குறைந்த குடும்பங்களை அடையாளங்கண்டு அவர்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் போன்றவைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதை பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி குறிப்பிட்டார். மேலும், ‘டைபர்’ போன்ற முக்கிய தேவையான பொருட்கள் வாங்க உதவும் வகையில் சிறு ரொக்கப்பணமும் வழங்க பிறை சட்டமன்ற சேவை மையம் இணக்கம் கொண்டுள்ளது என குறிப்பிட்டார்.

அதே வேளையில், பிறை சேவை மைய பணியாளர்கள், செபராங் பிறை மாநகர் கழக உறுப்பினர்களான டேவிட் மார்ஷல், ஜெசன் இராஜ் மற்றும் கம்போங் நிர்வாக செயல்முறை குழுவினர்களான ஸ்ரீ சங்கர், டத்தோ இங் உய் லாய் ஆகிய அனைவருக்கும் பேராசிரியர் பாராட்டு தெரிவித்தார்.

இதனிடையே, பினாங்கு குறிப்பாக பிறை தொகுதியில் உதவி தேவைப்படுவோர் அதன் சட்டமன்ற சேவை மையத்தை அணுக 043839131-என்ற எண்களில் தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதுவரை பிறை தொகுதியில் 816 மளிகைப் பொருட்கள் பொட்டலமும், பினாங்கின் பிற தொகுதிகளில் 160 மளிகைப் பொருட்கள் பொட்டலமும் மற்றும் வசதிக் குறைந்த பொது மக்களுக்கு ஏறக்குறைய ரிம4,800 ரொக்கப்பணமும் வழங்கப்பட்டது.

ரா.பெரியம்மா, 62 என்ற குடும்ப மாது மாநில அரசு வழங்கும் இந்த உதவித்தொகை மனநிறைவு அளிப்பதாக குறிப்பிட்டார். இந்த கோவிட்-19 தாக்கத்தால் பாதிக்கப்படும் அனைவருக்கும் மளிகை பொருட்கள் வழங்கும் மாநில அரசிற்கு நன்றி நவிழ்ந்தார்.