சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியின் விரிவாக்கத் திட்டம் அடுத்த மாதம் நிறைவடையும்

Admin
barathee

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள சுப்ரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியின் ரிம 3 மில்லியன் விரிவாக்கத் திட்டம் அடுத்த மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 72 ஆண்டுகள் பழமையான இப்பள்ளியில் 15 வகுப்பறைகள் மற்றும் பிற நடவடிக்கை அறைகளும் இடம்பெறும்.

கணினி மையம், பட்டறை, மெய்நிகர் ரியாலிட்டி ஸ்டுடியோ
மற்றும் இசை மற்றும் கலை அறை உள்ளிட்ட புதிய அறைகள் 2024 ஆம் ஆண்டின் மத்தியில் பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும் என்று பள்ளி வாரியத் தலைவர் ஜே. கோவிந்தசாமி தெரிவித்தார்.

“பாலர்ப்பள்ளி மாணவர்களுக்காக பிரத்தியேகமாக சமையலறை மற்றும் சிறிய விளையாட்டு இடத்துடன் கூடிய கூடுதல் அறையும் இதில் அடங்கும்,” என்று அவர் கூறினார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு குளுகோர் பகுதிக்கு இடமாற்றம் கண்ட சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி கட்டிடத்தில் ஒன்பது வகுப்பறைகள் மட்டுமே உள்ளன.

“2015 ஆம் ஆண்டில், இப்பள்ளியில் 208 மாணவர்கள் மட்டுமே பயின்றனர், ஆனால் இந்த ஆண்டு அதன் எண்ணிக்கை 425 என இரு மடங்காக அதிகரித்துள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் இடமளிக்க எங்களுக்கு 15 வகுப்பறைகள் தேவை,” என்று அவர் மேலும் கூறினார்.

இப்பள்ளியின் விரிவாக்கத் திட்டத்திற்கு ரிம3 மில்லியன் தேவைப்பட்ட வேளையில், கல்வி அமைச்சிடம் இருந்து ரிம800,000 ரிங்கிட் பெறப்பட்டது, என்றார். மேலும், ரிம100,000 மானியம் பினாங்கு மாநில அரசிடம் இருந்து பெறப்பட்டது.

“நாங்கள் நிதித் திரட்டும் விருந்தோம்பல் நிகழ்ச்சியின் மூலம் ரிம500,000 மற்றும் மற்றொரு நிகழ்ச்சியில் இருந்து ரிம500,000-ஐ வசூலித்தோம். எங்களுக்கு இன்னும் ரிம1.2 மில்லியன் நிதித் தேவைப்படுகிறது,” என்று கோவிந்தராஜு கூறினார்.

முன்னதாக, இப்பள்ளியின் விரிவாக்கப் பணிகளின் முன்னேற்றத்தை பார்வையிட வருகையளித்த கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக், இப்பள்ளிக்கு மேலும் ரிம100,000 ஒதுக்கீடு வழங்கியுள்ளார்.

மேலும், அத்தினத்தன்று வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜு, எம்.பி.பி.பி மேயர் டத்தோ இராஜேந்திரன், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருகையளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜு, சுப்ரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் மாணவர்களின் அதிகரிப்புக்கு ஏற்ப வகுப்பறைகள் மற்றும் பிற வசதிகளின் விரிவாக்கமும் அவசியம். மாணவர்களின் எண்ணிக்கை இன்னும் வரும் காலங்களிலும் தொடர்ந்து அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

barathee 2

இந்தப் புதிய கட்டிடம் மாணவர்களுக்கு தரமான சிறந்த கற்றல் கற்பித்தல் சூழலை வழங்கும் என அவர் மேலும் கூறினார்.