சுற்றுச்சூழல் பாதிகாப்பது நமது கடமை – சுந்தராஜு

 

பட்டர்வொர்த் – சிறு வயது முதல் தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் அதனைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மனதில் ஆழமாகப் பதிவு செய்ய வேண்டும்.

எனவே, கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி நிறுவனமான அலாம் அலிரான் குவாலித்தி (ம) சென் பெர்ஹாட் நிறுவனம் (Alam Aliran Kualiti (M) Sdn Bhd) தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் பிரத்தியேகமாக தொழில்துறை சுற்றுலா ஏற்பாடுச் செய்தது.

ஓர் உள்ளூர் நிறுவனத்தால் நடத்தப்பட்ட சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது பற்றிய
தொழில்துறை சுற்றுலாவில் பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி, பிறை தமிழ்ப்பள்ளி மற்றும் ஜுரு தோட்டத் தமிழ்ப்பள்ளி என மூன்று பள்ளிகளையும் சேர்ந்த 120 மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

அத்தினத்தன்று சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை கேளிக்கை சார்ந்த நடவடிக்கைகள் மூலம் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

அதன் இயக்குனர் குகூலன் பாலன், இந்நிறுவனத்தின் பயணம் 1994 இல் தொடங்கியது, என்றார்.

“நாங்கள் 1,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் வகையில் முன்னேறி வருகிறோம். கழிவு மேலாண்மை சேவைகள் மற்றும் திட்டமிடப்பட்ட கழிவுகளை அகற்றுவதில் நிபுணத்துவம் பெற்ற நம்பகமான திட்டமிடப்பட்ட கழிவு ஒப்பந்ததாரராக இந்நிறுவனம் நிலைநிறுத்தப்பட்டது.

“கடமையுணர்ச்சி கொண்ட பசுமைப் போர்வீரர்களாக சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை வலுப்படுத்த உறுதி கொள்கிறோம்.

“பள்ளி மாணவர்கள், கல்வி நிறுவனங்கள், பெருநிறுவனங்கள், அரசு அமைப்புகள் மற்றும் பல இடங்களுக்குத் தாவர மாதிரிகளை விநியோகிப்பது உள்ளிட்ட சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வை மேலோங்கச் செய்ய தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.

“சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் சமூகப் பாங்கான பொறுப்புணர்ச்சியை ஏற்படுத்துவதே எங்கள் குறிக்கோளாகும். இதை நோக்கி ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்காக இந்த தொழில்துறை வருகையை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம்.

“இது சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதனைப் பாதுகாக்க ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,” என்றார்.

இந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வருகையளித்த மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு இந்நிறுவனத்தின் முன்முயற்சியைப் பாராட்டினார்.

பின்னர், அவர் மாணவர்களை ஊக்கப்படுத்தவும், கடினமாக உழைக்கத் தூண்டவும் தனது வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.

“சிறு வயதில் கல்வி கற்பது மிகவும் அவசியம். அதேவேளையில், பெரியவரானதும் பணம் சம்பாதிப்பதும் முக்கியம் ஆகும்.

“கழிவுகள் இப்பொழுது ஒரு வணிகமாக மாறியுள்ளது. மறுசுழற்சி செய்வதன் மூலம் பிற பொருள்களாக மாற்றப்படும். இது சுற்றுச்சூழலை ஒரு போதும் பாதிக்காது,” என்று அவர் கூறினார்.

எனவே, சுற்றுச்சூழல் மாசு அடையாமல் எதிர்கால சந்ததியினர் நன்மைப் பெறும் வகையில் அதனைப் பாதுகாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியமாகும்.