சுழியக் கழிவு வலையமைப்புத் திட்டம்.

Admin

மாநில அரசு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு ஒரு இலாப நோக்கமற்ற அரசாங்க அமைப்பாகப் பினாங்கு பசுமை கழகத்தை  2011-ஆம் ஆண்டு தோற்றுவித்தது. அன்று முதல் இக்கழகம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பல திட்டங்களை வகுத்து வருகிறது. அவ்வகையில் கடந்த 18-6-2013-ஆம் நாள்  சுழியக் கழிவு வலையமைப்பு எனும் திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தஞ்சோங் சட்ட மன்ற உறுப்பினரும் பினாங்கு பசுமை குழுத் திட்டத் தலைவருமான மதிப்பிற்குரிய இங் வேய் எய்க் அவர்களால் தொடக்க விழா கண்டது.

இந்த வலையமைப்பின் முக்கிய நோக்கமாகப் புலாவ் பூரூங்கில் இருக்கும் குப்பை நிரப்பு நிலத்தில் குப்பைகளின் எண்ணிக்கையைக் குறைத்துப் பினாங்கு மாநிலத்தைப் பசுமை மற்றும் தூய்மை நிறைந்த மாநிலமாகத் திகழச் செய்வதாகும். இந்தச் சுழியக் கழிவு வலையமைப்பானது பொது மக்களுக்கு ஒரு தரவுத் தளத் தேடல் கருவியாகப் பயன்படுத்தப்படும். இவ்வலையமைப்பு சேவையின் மூலம் பொது மக்கள் தங்களின் குடியமைப்புக்கு அருகில் உள்ள மறுசுழற்சி மையங்களை அறிந்து கொள்ளலாம்.

இத்திட்டத்தில்  பினாங்கு மாநிலத்தின் 5 மாவட்டங்களில் 102 மறுசுழற்சி மையங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன. பொது மக்கள் இந்தச் சுழியக் கழிவு வலையமைப்புத் தரவுத் தளத் தேடல் கருவியைப் பயன்படுத்தி மறுச்சுழற்சி மையங்களின் பெயர் பட்டியல், பட்டணம், மாவட்டம் மற்றும் கழிவுப்பொருள்களின் வகைகளும் அதன் செயல்பாடுகளும் மிகத் துள்ளியமாக அறியலாம். இத்திட்டத்தில் மறுசுழற்சி பொருட்கள், மின்னணு கழிவுப்பொருட்கள், உணவுக் கழிவு மற்றும் மறுசுழற்சி மூலப்பொருள்கள் ஆகியவை மறுசுழற்சிக்கு விற்கலாம். இதன் மூலம் வேலை வாய்ப்பு மற்றும் வர்த்தக வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. சுழியக் கழிவு வலையமைப்பின் மூலம் குப்பைகளின் கழிவைக் குறைப்பதோடு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வழி வகுக்கப்படுகிறது.

எனவே பொது மக்கள் மற்றும் மறுசுழற்சி வியாபாரிகள்  தங்களின் மேல் விபரங்களுக்கு pgc.com.my/zerowastenetwork என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம்  இத்திட்டத்தில் பங்கு பெற்று தூய்மை, பசுமை, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு நிறைந்த பினாங்கு மாநிலத்தை உருவாக்குவோம்.

 

படம் 1: டாக்டர் ஜூடி, மதிப்பிற்குரிய யாப் சூ உய், , தஞ்சோங் சட்ட மன்ற உறுப்பினரும் பினாங்கு பசுமை குழுத் திட்டம் தலைவருமான மதிப்பிற்குரிய ங் வேய் ஆய்க், பினாங்கு நகராண்மைக் கழக பிரதிநிதி, செபெராங் பிறை நகராண்மைக் கழக அதிகாரி சீயூ (இடமிருந்து வலம்) .
படம் 1: டாக்டர் ஜூடி, மதிப்பிற்குரிய யாப் சூ உய், , தஞ்சோங் சட்ட மன்ற உறுப்பினரும் பினாங்கு பசுமை குழுத் திட்டம் தலைவருமான மதிப்பிற்குரிய ங் வேய் ஆய்க், பினாங்கு நகராண்மைக் கழக பிரதிநிதி, செபெராங் பிறை நகராண்மைக் கழக அதிகாரி சீயூ (இடமிருந்து வலம்)