‘டேசா ஆமான்’ அடுக்குமாடி வீடமைப்புப் புத்துயிர் பெற்றது.

Admin

கடந்த பத்து ஆண்டுகளாகக் கைவிடப்பட்டிருந்த டேசா ஆமான் அடுக்குமாடி வீடமைப்புப் பகுதி மக்கள் கூட்டணி அரசின் முயற்சியால் மீண்டும் புத்துயிர் பெற்றது. இதன் மூலம், சுமார் 300 வாங்குநர்கள் பயனடையவிருப்பதாக வீடமைப்புத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு வொங் ஹொன் வாய் தெரிவித்தார். இதில் 4% மக்கள் மட்டுமே இவ்வீடுகளை வாங்குவதிலிருந்து பின்வாங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தடைப்பட்ட நிர்மாணிப்புப் பணிகளில் பினாங்கு மாநில அரசு மீட்டெடுத்து நிறைவு செய்த வீடமைப்புத் திட்டங்களில் பண்டார் பாரு ஃபார்லிமமின் தாமான் செமெர்லாங், மௌண்ட் எர்ஸ்கினின் தாமான் ஃபெட்டிஸ், செபெராங் பிறையின் தாமான் தெலொக் ஆயர் தாவார், மத்திய செபெராங் பிறையின் தாமான் குவார் பெராஹு, சிம்பாங் எம்பாட்டின் தாமான் பெகாகா இண்டா மற்றும் இந்த பாயா தெருபோங்கின் டேசா ஆமானும் அடங்கும்.

இந்த 2.4 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள டேசா ஆமான் அடுக்குமாடி வீடமைப்பு A, B என இரண்டு கட்டடங்களைக் கொண்டுள்ளது. A கட்டடத்தில் 266 வீடுகளும் B கட்டடத்தில் 126 வீடுகளும் உள்ளன. 60% நிர்மாணிப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டு வேளையில் இதன் மேம்பாட்டாளர் திவாலானதால் இதன் மேம்பாட்டுப் பணிகள் தடைப்பட்டன என்று திரு வொங் தெரிவித்தார். White Knight, Patsift Construction Sdn Bhd என்னும் புதிய நிறுவனம் தடைப்பட்ட இந்த வீடமைப்பின் நிர்மாணிப்புப் பணியை மேற்கொண்டு நிறைவு செய்துள்ளது.

இந்த அடுக்குமாடி வீடுகளை வாங்கிய தேர்ந்தெடுக்கப்பட்ட வாங்குநர்களுக்கு அண்மையில் கொம்தாரில் வசிப்புச் சான்றிதழ் ‘Occupational Certificate’ வழங்கப்பட்டது. இதனை ஆட்சிக்கு குழு உறுப்பினர் திரு வொங் ஹொன் வாய் வழங்கினர். இதனைப் பெற்றுக் கொண்ட இந்திய மகளிர் சாந்தா சந்தியாகு மற்றும் சரோஜா காளியப்பன் தங்கள் உள்ளக் களிப்பை வெளிபடுத்தினர். வீட்டின் மதிப்பு ரிம50,000 மற்றும் சீரமைப்புச் செய்ய ரிம18,000 மொத்தம் ரிம68,000 பெருமானமுள்ள இந்த வீட்டை வாங்குவதற்கு மக்கள் வங்கியிடமிருந்து கடன் வசதி பெற்று கடந்த 10 ஆண்டுகளாக அதற்கான வட்டிப் பணத்தைச் செலுத்தி வந்ததாகக் கூறினர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். பல ஆண்டுகளாகக் காத்திருந்த இவர்களுக்கு ஒரு நல்ல பலன் கிடைத்துள்ளது.