ஜார்ச்டவுன் – இந்த ஆண்டு தைப்பூசக் கொண்டாட்டத்தின் தங்க இரதம் ஊர்வலம் வேல் ஏந்தி கொண்டு செட்டிபூசம் என்று அழைக்கப்படும் முதல் நாளில் வழக்கம் போலவே காலை 5.30 மணிக்கு முன்னோக்கி செல்லும். வெள்ளி இரதம் முருகனை ஏந்தி கொண்டு பின்னோக்கி வரும்.
எனவே, இரத ஊர்வலம் தொடர்பாக சர்ச்சைகளை கிளப்பும் அவதூறுகளை பரப்ப வேண்டாம் என பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் ஆர்.எஸ்.என் இராயர் கேட்டுக் கொண்டார்.
“பொதுமக்கள் அனைவரும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் அறிவிப்புகளை மட்டுமே அறிந்து கொள்ளுமாறும் பொறுப்பற்ற தரப்பினரின் அவதூறு தகவல்களை புறக்கணிக்குமாறு பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் கோரிக்கையை முன்வைத்தார்.
இதனையடுத்து, பந்தல் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தியர்களின் ஆகம முறைப்படி தண்ணீர்மலை பாலதண்டாயுதபானி ஆலயத்தில் திருகாப்பு இட்டப்பின்னர் தெருக்களில் பாடல் ஒலிப்பது சமயத்திற்கு புறம்பானது என தெளிவாக சூளுரைத்தார்.
ஜாலான் பிரவுனிலிருந்து ஜாலான் கெபுன் பூங்கா வரை சுமார் 1.5 கி.மீ தூரத்திற்கு மையப்படுத்தப்பட்ட ஒலிப்பெருக்கி அமைப்பு நள்ளிரவு வரை சமயம் சார்ந்த இசையை தொடர்ந்து ஒலிபரப்பும்.
மையப்படுத்தப்பட்ட ஒலிப்பெருக்கி அமைப்பு படிப்படியாக அதன் ஒலி அளவைக் குறைத்து நள்ளிரவில் நிறுத்தப்படும்.
“இருப்பினும், இது முக்கியமான மற்றும் அவசர அறிவிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும்,” என்று குமரன் விளக்கமளித்தார்.

தமிழ் கடவுளான முருகனை நினைத்து சமயநெறியுடனும் சமய நம்பிக்கையுடனும் தைப்பூசக் கொண்டாடுவதன் அவசியத்தையும் அவர் குறிப்பிட்டார். இது பிற இனத்தவரிடையே நமது சமயம் பரஸ்பர மரியாதையுடன் தலை உயர்ந்து நிற்கும் நோக்கில் இம்முறை அமல்படுத்தப்படுகிறது. இத்தடை பாடல்களுக்கு மட்டுமே தவிர பொதுமக்கள் வழக்கம் போல கொண்டாட்டத்தை மேற்கொள்ளலாம் என ஆர்.எஸ்.என் இராயர் விளக்கமளித்தார்.
பினாங்கு மாநில அரசு தைப்பூசம் 2026 விழாவை பாதுகாப்பாகவும் சீராகவும் நடத்தும் நோக்கில், பினாங்கு மாநில அரசு தனது அதிகாரப்பூர்வ GPS கண்காணிப்பு இணைய செயலியான ‘Pantau 3.0’ செயலியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. பொது மக்கள் https://pantau.digitalpenang.my வாயிலாக அதனைப் பதிவிரக்கம் செய்யலாம்.
இந்த முன்முயற்சி திட்டம், பினாங்கு டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம், பக்தர்கள், தைப்பூச ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அமலாக்க அமைப்புகள் ஆகியோருக்கு நேரடி தகவல்களை வழங்கி, கூட்ட மேலாண்மை, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பொது பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என இராயர் விளக்கமளித்தார்.
Pantau 3.0 செயலி வாயிலாக சாலை மூடல் தகவல்கள், தைப்பூச அறிவிப்புகள் மற்றும் முக்கிய இட விவரங்கள் போன்ற கூடுதல் அம்சங்களையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இந்தியர்கள் பாதுகாப்பாகவும் சுமூகமாகவும் தைப்பூசத்தை கொண்டாட அனைத்து முயற்சிகளையும் கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.