தற்போது எதிர்நோக்கும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள பங்குகளை விற்க போவதில்லை -முதலமைச்சர்

Admin

ஜார்ச்டவுன் – தற்போதுள்ள தேசிய நிதிச் சந்தையில் அதன் பங்குகளை விற்க மாநில அரசு நிர்வாகம் விரும்பவில்லை, ஏனெனில் அது ஓர் ஆண்டுக்கு சுமார் ரிம50 மில்லியன் ஈவுத்தொகையைக் கொண்டுவருகிறது என மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.

புக்கிட் தெங்கா மாநில சட்டமன்ற உறுப்பினர் கூய் சியாவ்-லியோங் மற்றும் பத்து லஞ்சாங் ஒங் ஆ தியோங்
எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக 15வது பினாங்கு மாநில சட்டமன்றக் கூட்டத்தில் தொகுப்புரை வழங்கும் போது நிதி, பொருளாதாரம், நிலம் மற்றும் தொலைதொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ் கூறினார்.

“இந்த முதலீடு (நிதிச் சந்தையில்) ஒவ்வொரு ஆண்டும் ஈவுத்தொகையைக் கொண்டு வருகிறது. எனவே, மாநில அரசு அதனை விற்கத் திட்டமிடவில்லை. இதன் மூலம் நாங்கள் ரிம362,855,907.82 விற்பனை மதிப்பைப் பெறுவோம்.

முன்னதாக, புர்சா மலேசியாவில் பட்டியலிடப்பட்டுள்ள ‘Petronas Dagangan Bhd, Tenaga Nasional Bhd, Telekom Malaysia Bhd, Axiata Bhd, Malaysia Airport Holdings Bhd, PBA Holdings Bhd மற்றும் Maxis Bhd ஆகிய பல நிறுவனங்களில் மாநில அரசு பங்குகளை வைத்திருப்பதாக கொன் இயோவ் கூறினார்.

அவரது கருத்துப்படி, பங்குகளின் விலை ரிம233,964,073.19 ஆகும், கடந்த நவம்பர்,29 அன்று அதன் மதிப்பு ரிம362,855,907.82 என கணக்கிடப்பட்டு ஏறக்குறைய ரிம128,891,834.63 இலாபத்தை ஈட்டுகிறது.

“தற்போதைய சந்தை விலைக்கு அப்பங்குகள் விற்கப்பட்டால், மாநில அரசு ரிம128,891,834.63 கூடுதல் பணம் அல்லது அதிக லாபத்தைப் பெறும்” என்று அவர் கூறினார். அவரது நிர்வாகம் இப்போது இதனை செயல்படுத்த விரும்பவில்லை என பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் கூறினார்.

வருமானம் மற்றும் பற்றாக்குறை செலவினங்களைக் கணக்கில் கொண்டு, மாநில நிதித் துறை மூலம் தனது நிர்வாகம் நிதிச் சந்தையில்
முதலீடுகளை அதிகரிக்கவும்
நிலையான சேமிப்புகள் மற்றும் பிற பொருத்தமான முதலீடுகளை ஈட்ட எப்போதும் கவனமுடன் செயல்படுவதாக கொன் இயோவ் கூறினார்.

“மாநிலத்தின் வருமான ஆதாரத்தை அதிகரிக்கவும் மேம்படுத்தவும் பினாங்கு மாநில அரசு எப்போதும் உறுதியுடன் உள்ளது,” என்று அவர் கருத்து தெரிவித்தார்.

கடந்த நவம்பர்,24 அன்று பினாங்கின் 2024 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, ​​ரிம1,047.60 மில்லியன் நிர்வாகச் செலவுகளுடன் ஒப்பிடும்போது, ​​மாநில அரசின் வருமானம் ரிம533.08 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது, என்று கொன் இயோவ் கூறினார்.

மாநில அரசாங்கத்தின் 2024 பட்ஜெட் பற்றாக்குறை ரிம514.52 தவிர்க்க முடியாதது, இது பினாங்கின் 2023 பட்ஜெட்டுடன் (ரிம467.12 மில்லியன்) ஒப்பிடுகையில் RM47.40 மில்லியன் பற்றாக்குறையை அதிகரிக்கிறது.