பட்டர்வொர்த – பாகான் நாடாளுமன்றத் தொகுதியில் சமீபத்தில் நிறைவு செய்யப்பட்ட சாலை மறுசீரமைப்பு பணிகளால் பட்டர்வொர்த், ராஜா உடாவில் உள்ள தாமான் அமான் ஜெயா பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், பாதுகாப்பான மற்றும் வசதியான சாலைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த திட்டம் லோரொங் சேரி 7, லோரொங் சேரி 9, லோரொங் சேரி 10 மற்றும் லோரொங் சேரி 11 ஆகிய சாலைகளை உள்ளடக்கியது. சுமார் ரிம200,000 செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த பணிகள், மொத்தம் 4,400 சதுர மீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது.
பாகான் ஜெர்மல் சட்டமன்ற உறுப்பினர் சீ ஈ கின், லோரொங் சேரி 7 பகுதியில் நடைபெற்ற தளப் பார்வையின் போது இந்த தகவலை பகிர்ந்தார். தாமான் அமான் ஜெயா ஒரு பழமையான குடியிருப்பு பகுதி என்பதால், தொடர்ந்து உட்கட்டமைப்பு மேம்பாடுகள் அவசியம் என அவர் தெரிவித்தார்.
“இந்த திட்டம் செபராங் பிறை மாநகர் கழக் (MBSP) பொறியியல் துறை, முகமட் இஸ்ஹாம் முகமெட் தசூடின் அவர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.
“குடியிருப்பு பகுதியின் தேவைகளுக்கு எப்போதும் கவனம் செலுத்தும் MBSP மற்றும் கிராம சமூக மேலாண்மை குழு (MPKK) ஆகியவற்றுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், தாமான் அமான் ஜெயா நீர் தேக்கக் குளம் மேம்பாட்டு திட்டத்தின் நிறைவு பற்றியும் சீ தெரிவித்தார்.
“இந்த திட்டம், சேதமடைந்த வேலி மற்றும் நீண்ட காலமாக பராமரிப்பு இல்லாமை போன்ற பிரச்சனைகளை சரிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், அதிகமாக வளர்ந்த புல் மற்றும் பராமரிக்கப்படாத நிலையும் அங்கு காணப்பட்டது.
“இந்த பணிகளில் குளம் பழுதுபார்த்தல் மற்றும் மரங்கள் அகற்றுதல் ஆகியவை ரிம50,000 செலவில் மேற்கொள்ளப்படும். மேலும், குளத்தைச் சுற்றி ஏற முடியாத பாதுகாப்பு வேலி அமைப்பதும் ரிம43,000 செலவில் செய்யப்பட்டது,” அவர் தெரிவித்தார்.
சாலை மறுசீரமைப்பு பணிகள் பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 11 ஆம் தேதி நிறைவடைந்தன. நீர் தேக்கக் குளம் மேம்பாட்டு பணிகள் பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி முடிக்கப்பட்டன.
பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், இந்த இரண்டு திட்டங்களும் தாமான் அமான் ஜெயாவில் வசிக்கும் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பயன் அளிக்கும் எனக் குறிப்பிட்டார். மேலும், இந்த திட்டங்களை முன்னெடுத்த சீ-யின் செயல்பாட்டை அவர் பாராட்டினார்.
இந்த தளப் பார்வையில் செனட்டர் Dr RA லிங்கேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டார்.