தாமான் பிறை உத்தாமாவில் துப்புரவுப் பணி திட்டத்திற்கு மாணவர்களின் பங்களிப்பு வரவேற்கத்தக்கது

பிறை – பினாங்கு மாநிலத்தில் குறிப்பாக பிறை வட்டாரத்தில் டிங்கி காய்ச்சல் சம்பவத்தைக் குறைக்கும் முயற்சியில் கடந்த நவம்பர்,5-ஆம் நாள் பிறையில் பெரிய அளவிலான துப்புரவுப் பணி திட்டம் ஏற்பாடுச் செய்யப்பட்டது.

இத்திட்டம் பிறை சமூக மேலாண்மை கழகம் (எம்.பி.கே.கே) மற்றும் பிறை சட்டமன்ற சேவை மையம் ஏற்பாட்டிலும் மத்திய செபராங் பிறை COMBI அமைப்பு மற்றும் பினாங்கு செபராங் பிறை மாநகர் கழக இணை ஆதரவிலும் இனிதே நடைபெற்றது.

“பொது மக்கள் பினாங்கு துப்புரவுப் பணியில் பங்குப் பெற்று டிங்கி கொசு பரவுவதைத் தடுக்க முயற்சிக்க வேண்டும். பொதுமக்கள் வீட்டுச் சுற்றுப்புறத்தைத் தூய்மையுடனும் நீர் தேங்குவதைத் தவிர்க்கவும் வேண்டும்.

“மேலும், டிங்கி காய்ச்சல் ஏற்படுவதைத் தவிர்க்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு மிக அவசியமாகும். காய்ச்சல், உடல் சோர்வு, வாந்தி, உடலில் சிவப்பு புள்ளிகள் இருப்பதை அறிந்தால் உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெறுமாறு பொது மக்களுக்கு நினைவுறுத்தப்பட்டது,” என்று எம்.பி.எஸ்.பி கவுன்சிலர் பொன்னுதுரை விக்டர் இத்திட்டத்தை தொடக்கி வைத்து இவ்வாறு கூறினார்.

இத்திட்டத்தில் மத்திய செபராங் பிறை சுகாதார அலுவலகம், பிறை காவல் துறை, ஆரம்பப் பள்ளி மாணவர்கள், COMBI வடக்கு பிறை மற்றும் பல அரசு சாரா அமைப்புகள் இணைந்து தாமான் பிறை உத்தாமா குடியிருப்புப் பகுதியில் துப்புரவுப் பணியை மேற்கொண்டனர்.

“அண்மையில் தாமான் செனாங்கின் குடியிருப்பில் முதன் முதலாக மேற்கொள்ளப்பட்ட வீதித் தத்தெடுப்புத் திட்டம் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது தாமான் பிறை உத்தாமாவிலும் இத்திட்டம் எம்.பி.கே.கே உடன் இணைந்து அக்குடியிருப்புப் பொது மக்களும் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

“இத்திட்டத்தை மக்களிடையே அமல்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு குடிமக்களும் அவர் தம் குடியிருப்புப் பகுதியின் தூய்மையைப் பராமரிக்க முடியும். இதன் மூலம், டிங்கி கொசு பரவலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க முடியும்,” என பிறை எம்.பி.கே.கே தலைவர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.

இந்தத் துப்புரவுப் பணி திட்டத்தில்
மத்திய செபராங் பிறை சுகாதார அலுவலகம் சுகாதார கண்காட்சியை வழிநடத்தினர்.

மேலும், இத்திட்டத்தில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

அடுத்ததாக பிறை எம்.பி.கே.கே ஏற்பாட்டில் உலர்ந்த உணவு மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பட்டறை இரண்டு மாத காலத் தவணையில் பி40 மகளிருக்கு நடத்த இலக்கு கொண்டுள்ளதாக அதன் தலைவர் ஶ்ரீ சங்கர் தெரிவித்தார்.