தீபாவளி பண்டிகையை முதியோர் இல்லங்களில் கொண்டாடுவோம்.

வருகின்ற நவம்பர் 6-ஆம் தேதி உலகெங்கும் கொண்டாடவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதியோர் இல்லம் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் வாழ்பவர்களுடன் மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என பினாங்கு இந்துதர்ம மாமன்றத் தலைவர் நந்தகுமார் கடந்த சனிக்கிழமை அன்று எஸ்பாயர் முதியோர் இல்லத்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஆயர் ஈத்தாம் எஸ்பாயர் நெர்சிங் இல்லத்தில் சுமார் 26 முதியோர்களுக்கு ஆடை, தீபாவளி பதார்த்தங்கள் மற்றும் இரவு உணவும் ஏற்பாடு செய்து அவர்களுடன் குதுகலமாக தீபாவளியை பினாங்கு இந்துதர்ம மாமன்ற உறுப்பினர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். ஒவ்வொரு ஆண்டும் இந்துதர்ம மாமன்றம் தீபாவளி பண்டிகையை முதியோர் இல்லம் மற்றும் ஆதரவற்ற குழந்தை காப்பகத்தில் கொண்டாடுவது பாராட்டக்குறியதாகும்.

இக்கொண்டாட்டத்தில் பினாங்கு இந்துதர்ம மாமன்ற செயலாளர் ந.தனபாலன், மகளிர் அணி பிரிவை சார்ந்த இரா.சின்னமாள் மற்றும் புஸ்பா உடன் பொருளாளர் சுகுமாறனும் கலந்து கொண்டனர்.

சுமார் நான்கு மணி நேரம் எஸ்பாயர் நெர்சிங் இல்லத்தில் முதியோர்களுக்கு உணவளித்து அவர்களுக்கு மகிழ்வளிக்கும் நிகழ்வுகளை வழிநடத்தினர். பொதுமக்கள் இயன்ற உதவிகளை எஸ்பாயர் நெர்சிங் இல்லத்திற்கு வழங்குமாறும் பினாங்கு இந்துதர்ம மாமன்றத் தலைவர் நந்தகுமார்
கேட்டுக்கொண்டார். உதவிக்கரம் நீட்டவிரும்பும் பொதுமக்கள் கோபி (எஸ்பாயர் நெர்சிங் இல்ல நிர்வாகி) 016-4421709 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.

இதனிடையே, இந்துதர்ம மாமன்றமும் இந்த இல்லத்தை சிறப்பாக வழிநடத்த எதிர்வரும் காலங்களில் உதவிக்கரம் நீட்டுவதாக உறுதியளித்தார். இந்துதர்ம மாமன்ற உறுப்பினர்களின் மனிதநேயம் இதன் வழி சித்தரிக்கின்றது.