தேர்தெடுக்கப்பட்ட பொழுதுபோக்கு பூங்காக்கள் வருகின்ற ஜுன்,6 முதல் பயன்பாட்டிற்கு அனுமதி- முதல்வர்

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தின் சில பொழுதுபோக்கு பூங்காக்கள் ஜூன் மாதம் 6-ஆம் தேதி முதல் (சனிக்கிழமை) காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை மீண்டும் திறக்கப்படும்.

மாநில முதல்வர் சாவ் கொன் யாவ், தொடர்புக் கண்காணிப்பு நோக்கங்களுக்காக அனைத்து வருகையாளர்களும் ‘பினாங்கு தொடர்பு ட்ரேசர் (பி.ஜி.கேர்)’ கியூ.ஆர் குறியீடு மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.

” யூத் பார்க், ரெலாவ் மெட்ரோபொலிட்டன் பூங்கா, பினாங்கு தாவரவியல் பூங்கா மற்றும் புக்கிட் ஜம்புல் மலை ஏறும் பகுதி ஆகிய பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

“மேலும், கொடிமலை நிலையத்தின் அடிவாரத்தில் உள்ள பாரம்பரிய சாலையிலிருந்தும் மற்றும், புக்கிட் பெண்டேரா ஜீப் சாலையிலிருந்தும் நடைபயணம் செல்ல அனுமதிக்கப்படுகிறது, ஆனால் பாதசாரிகளுக்கு மட்டுமே பிரத்தியேகமாக இந்த அனுமதி வழங்கப்படுகிறது.

“ஒரே நேரத்தில் 200 பேரை மட்டுமே பூங்காவின் உள்ளே செல்ல அனுமதிக்கப்படும். எனினும், தாமான் மெட்ரோபொலிடன் பூங்காவிற்கு மட்டும் ஒரே நேரத்தில் 50 பேர் மட்டுமே பயன்படுத்த அனுமதி”, என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் முகநூல் நேரலையில் மாநில முதல்வர் சாவ் விவரித்தார்.
பெருநகர பூங்காவைத் தவிர ஒரு நேரத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 200 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.

மேலும் சாவ் கூறுகையில், வனத்துறை அனைத்தும் தாமான் புக்கிட் பஞ்சோர் , தெலுக் பஹாங், செரோக் தொக்குன், ஆயிர் ஈத்தாம் உள்நாட்டு கல்வி வனப்பகுதி மற்றும் புக்கிட் ஜூரு ஆகிய வனப்பகுதிகள் இன்னமும் பொது பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கவில்லை என்று கூறினார்.

“இதற்கிடையில், மீன்வளத் துறையின் மேற்பார்வையில் பினாங்கு தேசிய பூங்கா மற்றும் பினாங்கு நீர் விநியோக வாரியத்தின் (பி.பி.ஏ.பி.பி) கட்டுப்பாட்டில் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் அணைகள் இன்னும் மூடப்பட்டுள்ளன, ”என்று ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ் தெளிவுப்படுத்தினார்.

மேலும், சமூக நலத்துறை (ஜே.கே.எம்) கீழ் செயல்படும் 15 குழந்தை பராமரிப்பு மையங்கள் ஜூன் 1 முதல் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் (எஸ்.ஓ.பி) பின்பற்றி திறக்கப்பட்டுள்ளன. எனினும், பாலர்ப்பள்ளிகள்
மீண்டும் செயல்படுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என கூறினார்.

கோவிட்-19 தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறு தொழில் வர்த்தகர்களுக்கு உதவ, டுரியன் கடைகளும் ஜூன் 4 முதல் கடுமையான எஸ்.ஓ.பி-யுடன் ‘எடுத்துச் செல்லுங்கள்’ எனும் கோட்பாட்டில் விற்க அனுமதிக்கப்பட்டன என மாநில முதல்வர் குறிப்பிட்டார்.

“இதனிடையே, இப்போது ஏழு நாட்கள் செயல்பட்டு வரும் பெனகாவுக்கு அருகிலுள்ள சந்தையில் மீனவர் மீன்பிடி பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை உறுதிச் செய்வதற்காக, பினாங்கு மாநில சுகாதாரத் துறை (ஜே.கே.என்.பி.பி), வட செபராங் பெராய் மாவட்ட அலுவலகம் (எஸ்.பி.யு), மலேசியாவின் மீன்வள மேம்பாட்டு ஆணையம் (எல்.கே.ஐ.எம்) மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் இந்த விவகாரம் குறித்து ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடத்துவார், ”என்றார்.