நீல நிற அடையாள அட்டைக் கோரி போராட்டம்

இம்மலாயா மண்ணில் பிறந்து அதன் வளர்ச்சிக்காக வாழும் இந்திய குடிமக்களுக்குக் இன்னும் மலேசிய குடியுரிமை வழங்கப்படாதது மிகவும் வருத்தமளிக்கிறது. சிவப்பு அடையாள அட்டை, பச்சை நிற அடையாள அட்டை, பிறப்பு ஆவணங்கள் ஆகிய பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் 30-க்கும் மேற்பட்ட பினாங்கு வாழ் மக்கள், பொது மக்கள், தலைவர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் பினாங்கு என்சன் சாலையில் அமைந்திருக்கும் தேசிய பதிவகத் துறைக்கு எதிராகப் போர்க்கொடித் தூக்கிக் கண்டனம் தெரிவித்தனர்.

இக்கண்டணக் கூட்டத்தில் கெஅடிலான் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் தலைமையில் அரசு சார்பற்ற இயக்கத்தின் பிரதிநிதி வழக்கறிஞர் லத்தீபா கோயா, கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் இங் வெய் எய்க், கெபுன் பூங்கா சட்ட மன்ற உறுப்பினர் ஜோன்சன் ஓங், பத்து மாவுங் சட்ட மன்ற உறுப்பினர் ரவிந்திரன் குமரேசன், டி.ஆர்.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய பதிவகத் துறை அலுவலகத்தில் கூடிய மக்களை முதலில் காவல் துறையினர் உள்ளே செல்ல அனுமதி வழங்கவில்லை. இதனால் அவ்விடத்தில் சற்று பதற்றம் ஏற்பட்டது. பின்பு பினாங்கு மாநில அரசியல் தலைவர்கள் காவற் துறை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையின் பயனாக அவர்கள் பதிவிலாக்காவிற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பினாங்கு வாழ் இந்திய குடிமக்கள் முறையாக விண்ணப்பம் செய்திருந்தும் மலேசிய குடியுரிமை வழங்கப்படாததன் காரணம் தமக்குப் புலப்படவில்லை என கெஅடிலான் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் மற்றும் அரசு சார்பற்ற இயக்கத்தின் பிரதிநிதி வழக்கறிஞர் லத்தீபா கோயா எடுத்துரைத்தனர்.

நாடற்ற மக்களின் விண்ணப்பங்களைத் தேசிய பதிவகத் துறை அதிகாரிகள் பரிசலிக்க வேண்டும் என மக்கள் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டனர். நாடற்ற மக்களிடமிருந்து பல புகார்கள் பெற்ற பின்னரே தாம் இந்நடவடிக்கையில் ஈடுப்பட்டதாக என்.சுரேந்திரன் குறிப்பிட்டார். சபாவில் குடியேற்றக்காரர்கள் மீது நடக்கும் அரசு விசாரணை ஆணயத்தில் இந்தோனேசியர்கள், பிலிப்பினோக்கள், பாகிஸ்தானியர் ஆகிய வெளிநாட்டவர்களுக்கு உடனடி குடியுரிமை வழங்கியதாக வெளிவந்த தகவல்கள் அவர்களுக்கு மன அதிருப்தியைக் கொடுத்துள்ளது. ஏனெனில் இந்நாட்டிலேயே பிறந்த இந்தியர்களுக்கு மட்டும் அரசாங்கம் குடியுரிமை வழங்குவதில் பல ஆண்டுகளாகப் பரிசலிக்க விரும்பாத போக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கிறது என்றார்.

சிம்பாங் எம்பாட்டைச் சேர்ந்த லெட்சுமி த/பெ பூங்கன் அவர்கள் 67 வயதாகியும் இன்னும் நீள நிற குடியுரிமை பெறாத நிலையில் இருப்பதை எண்ணி மிகவும் வருந்துவதாகக் கூறினார். இவர் அடையாள் அட்டை நீள நிறமாக இருப்பினும் அதில் இடம்பெற்றுள்ள மூன்று சிவப்பு நிற புள்ளிகள் இவர் தலையெழுத்தையே மாற்றவல்லது என்றார். இதனால் மலேசியாவில் பிறந்து ஓட்டு கூட போட உரிமையில்லாமல் இருக்கிறேன் என்று தன் மன வேதனையை அள்ளி இரைத்தார். அதுமட்டுமன்றி மத்திய அரசும் மாநில அரசும் வழங்கும் எந்த உதவிக்கும் இவர்கள் தகுதியானவர்கள் இல்லை என்பதும் வருத்தத்தை அளிக்கிறது. நீல நிற அடையாள அட்டை இல்லாத பெற்றோர்களின் பிள்ளைகளோ பிறப்புப் பத்திரம் எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தியாகேஸ் 14, ஸ்ரீதரன் 12, ஆகாஷ் 8 ஆகிய சகோதரர்கள் இன்னும் பிறப்புப் பத்திரம் எடுக்க முடியாமல் சிரமத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த கண்டனப் போராட்டத்தின் வழி தங்கள் உரிமைக்காகப் போராடும் இவர்களுக்கு ஒரு விடிவெள்ளி பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

DSC_2997

நிரந்தரமில்லா அடையாள அட்டையை வைத்துக் கொண்டு சிரமப்படும்

93 வயதாகிய திருமதி பாக்கியமும் அவரின் 57 வயதாகிய மகள் இராமாயியும்.