பண்டார் காசியாவின் முதல் பொதுச் சந்தை ரிம68.7 மில்லியன் செலவில் நிர்மாணிப்பு – முதல்வர்

Admin

ஜார்ச்டவுன் – மாநில அரசாங்க நிறுவனமான, பினாங்கு மேம்பாட்டுக் கழகம்(பி.டி.சி), ரிம68.7 மில்லியன் செலவில் பண்டார் காசியாவில் முதல் பொதுச் சந்தை கட்டுமானத் திட்டத்தை செயல்படுத்துகிறது.

பி.டி.சி இன் 7.69 ஏக்கர் நிலப்பரப்பில் பொதுச் சந்தை மற்றும் அங்காடி வளாகம் நிர்மாணிக்கப்படும் என்றும் 2025 ஆம் ஆண்டில் முழுமையாக நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து இவ்வாறு கூறினார்.

இது பண்டார் காசியாவில் கட்டப்படும் முதல் பொதுச் சந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

“7.69 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படும் இந்தப் பொதுச் சந்தையில் 82 லோட் அங்காடிக் கடைகள்; 32 கடைகள்; 20 மூடப்பட்ட கடைகள்; 78 திறந்தவெளி அங்காடி வளாகம், 753 வாகன நிறுத்துமிடம் மற்றும் பல பொது வசதிகளும் இதில் இடம்பெறும்.

“இது பத்து காவான் தொகுதியில் குறிப்பாக பண்டார் காசியாவில் நீண்ட காலமாக திட்டமிடப்பட்டத் திட்டமாகும்.

“இத்திட்டம் செயல்படுத்துவதன் மூலம் இப்பகுதியில் இருக்கும் அங்காடிக் கடைகளை ஓரங்கே அமைக்கத் துணைபுரியும். மேலும், பண்டார் காசியா துரித வளர்ச்சி அடைந்து வரும் தொழிற்துறை பேட்டை மற்றும் நவீன நகரமாகும்.

“எனவே, இந்தப் பொதுச் சந்தை அமைப்பதன் மூலம் அவர்கள் அங்கு வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்படுவர்,” என்று பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் கூறினார்.

செபராங் பிறை மாநகர் கழகம்(எம்.பி.எஸ்.பி) இப்பகுதியில் அதிகரித்து வரும் உரிமம் அற்ற அங்காடிக் கடைகள் குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அமலாக்க அதிகாரிகள் அங்காடி வியாபாரிகளை சரியான முறையில் கையாள வேண்டும். அதேவேளையில், அவர்களின் வியாபாரம் பாதிக்காத வகையில் மாற்று இடம் அல்லது வசதிகள் அமைக்க உத்தேசிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பண்டார் காசியா மேம்பாட்டுப் பெருந்திட்டமானது வீட்டுவசதி, வணிகம், கலப்பு மேம்பாடு, தொழில்துறை, பொழுதுபோக்கு, உள்கட்டமைப்பு மற்றும் பிற பொது வசதிகளை உள்ளடக்கியது. தற்போது
அதன் வளர்ச்சியின் முக்கிய
அம்சமாக இந்துப் பொதுச் சந்தை மேம்பாட்டுத் திட்டம் அமைகிறது.

பத்து காவான் தொகுதியில் போக்குவரத்து நெரிசல் உட்பட பல சாவல்கள் எதிர்நோக்குவதாக
தேர்தல் பிரச்சாரத்தின் போது அறியப்பட்டதாக முதல்வர் கூறினார். ஒவ்வொரு சவால்களும் தீர்வுக் காண முற்படுவதாக முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார்.

பண்டார் காசியாவில் நிர்மாணிக்கப்படும் பொதுச் சந்தை பினாங்கு மாநிலத்தின் 60வது பொதுச் சந்தை ஆகும். இது இந்த வட்டாரத்தில் வாழும் பொது மக்கள் மற்றும்
சூரியா 1 அடுக்குமாடிக் குடியிருப்பு உட்பட அனைவரும் ஒரு நற்செய்தி என மாநில உள்ளாட்சி, வீட்டு வசதி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ கூறினார்.

இந்நிகழ்ச்சியில், புக்கிட் தம்புன் மாநில சட்டமன்ற உறுப்பினர், கோ சூன் ஐக்; செபராங் பிறை மாநகர் கழக மேயர் (எம்.பி.எஸ்.பி), டத்தோ அசார் அர்ஷாத்; பி.டி.சி தலைமை நிர்வாக அதிகாரி, டத்தோ அஜீஸ் பக்கார்; பினாங்கு பொதுப்பணித்துறை இயக்குனர், Ir. அஹ்மத் நட்ஸ்ரி அப்துல் மஜித் மற்றும் தொடர்புடைய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், சூரியா 1 பத்து காவான் அடுக்குமாடி குடியிருப்புகளின் மேம்பாட்டுத் திட்ட நிறைவு மற்றும் இணக்கச் சான்றிதழுக்கான (சிசிசி) எம்.பி.எஸ்.பி இன் வாக்குறுதிகளில்
ஒன்று பொதுச் சந்தைத் கட்டுமானம் திட்டம் என்று அஜீஸ் கூறினார்.

“இத்திட்டம் நிறைவு பெற்றவுடன், இந்தப் பொதுச் சந்தை மற்றும் வணிகக் கட்டிடம் உரிமை மற்றும் நிர்வாகத்தின் நோக்கத்திற்காக எம்.பி.எஸ்.பி-யிடம் ஒப்படைக்கப்படும்,” என்று அவர் கூறினார்.