பாயா தெருபோங் சிறுவியாபாரிகளுக்கு உதவிக்கரம் வழங்கப்பட்டது.

Admin

பாயா தெருபோங் – அண்மையில் பாயா தெருபோங்கில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சந்தையில் உள்ள சிறுகடை வியாயாரிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் அங்கு “சட்டர்” கதவுகளை பொருத்தித் தருவதாக அச்சந்தைக்கு நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் பாயா தெருபோங் சந்தை வியாபாரிகளின் விண்ணப்பத்திற்கு ஏற்ப அங்கு இந்த உதவி வழங்கப்படுவதாக மேலும் விவரித்தார். அச்சந்தையில் அமைந்துள்ள 111 கடைகளுக்கும் பினாங்கு மேம்பாட்டுக் கழகம், புக்கிட் குளுகோர் நாடாளுமன்றம் மற்றும் பாயா தெருபோங் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரின் நிதி ஒதுகீட்டில் இருந்து இந்த உதவி நல்குவதாகக் குறிப்பிட்டார் நாடாளுமன்ற உறுப்பினரான இராம். இந்த 111 கடைகளுக்கும் “சட்டர்” கதவுகளை பொருத்த ரிம100,000 நிதி செலவிடப்படும் என்றார்.

வருகின்ற ஏப்ரல் 2019-ஆம் ஆண்டு திறக்கப்படவுள்ள பாயா தெருபோங் புதிய சந்தையில் வியாபாரிகள் சுமூகமான முறையில் வியாபாரத்தை மேற்கொள்ள அவர்களுக்கு உதவ தாம் முன்வந்ததாகத் தெரிவித்தார்.

அவ்வட்டாரத்தில் உதவிக் கேட்டு வரும் வியாபாரிகளுக்கு தாம் உதவ தவறியதில்லை என அகம் மகிழ தெரிவித்தார் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் இராம். இச்செய்தியாளர் சந்திப்பில் ஆட்சிக்குழு உறுப்பினரும் பாயா தெருபோங் சட்டமன்ற உறுப்பினருமான இயோ சூன் இன் கலந்து கொண்டார்.