பிந்தாங் பீரு காற்பந்து மன்றத்திற்கு நிதியுதவி

Admin

பிந்தாங் பீரு காற்பந்து மன்றம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் பட்டர்வொர்த் வட்டாரத்தில் செயல்பட்டு வருகிறது. இம்மன்றத்தில் மூவினத்தைச் சார்ந்த காற்பந்து வீரர்களும் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்துகின்றனர் என்பது வெள்ளிடைமலையாகும். 2008ஆம் ஆண்டு மக்கள் கூட்டணி அரசு பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்றிய முதல் இந்த மன்றத்திற்கு நிதியுதவி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். அவ்வகையில் கடந்த ஐந்து ஆண்டு காலக்கட்டத்தில் ரிம 29 000 –ஐ நிதியுதவியாக வழங்கிய பெருமை பினாங்கு மாநில இரண்டாம் முதல்வர் பேராசிரியர் ப இராமசாமி அவர்களுக்கே சேரும். இம்மன்றத்தைச் சிறப்பான முறையில் வழி நடத்த இம்மானியம் பயன்படுத்தப்பட்டது என பிந்தாங் பீரு காற்பந்து மன்றத்தின் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த மே மாதம்  சிங்கப்பூரில் நடந்த ஆசிய இளையோர் காற்பந்து போட்டியில் பிந்தாங் பீரு காற்பந்து வீரர்கள் 3ஆவது இடத்தைக் கைப்பற்றித் தங்களின் விளையாட்டுத் திறமைகளை உலகம் முழுவதும் அறியச் செய்தனர். எனவே, பிந்தாங் பீரு காற்பந்து வீரர்களைப் பாராட்டும் பொருட்டு மன்றத்தின் சார்பாகப் பாராட்டு விருந்து நடத்தப்பட்டது. அவ்விழாவில் பினாங்கு மாநில பெயரைத் தலையோங்கச் செய்த பிந்தாங் பீரு காற்பந்து வீரர்கள் கெளரவிக்கப்பட்டனர். வெற்றி வாகை சூடிய வீரர்களுக்கு நற்சான்றிதழ், வெற்றிக் கிண்ணம் மற்றும் சன்மானம் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு இறுதியில் பேங்காக்கில் நடைபெறவிருக்கும் இளையோருக்கான அனைத்துலகக் காற்பந்து போட்டியில் இம்மன்றத்தைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு வெற்றி மாலை சூடுவர் என இரண்டாம் முதல்வர் நம்பிக்கைத் தெரிவித்தார். மேலும், இம்மன்றம் எதிர்காலத்தில் தலைச்சிறந்த காற்பந்து வீரர்களை உருவாக்குவதற்குத் தாம் உதவிக் கரம் நீட்டத் தயார் என்றும் கூறினார். தம் உரையில் வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பாராட்டுகளையும் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொண்டதோடு விளையாட்டுத் துறையில் பினாங்கு மாநிலப் பெயர் பிரகாசிக்க அயராது பாடுப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இரண்டாம் துணை முதல்வர் ப இராமசாமி,  மன்றக் காப்பாளர் டத்தோ கே. குப்பன், மன்றத் தலைமை நிர்வாகி எம். சுந்தரன், 300 –க்கு மேற்பட்ட காற்பந்து விளையாட்டு மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் விருந்தோம்பலில் கலந்து சிறப்பித்தனர்.