பினாங்கின் அடையாளமாகத் திகழும் பயணப்படகு சேவை மேம்படுத்தப்பட வேண்டும்

Admin

ஜார்ச்டவுன் – 1894-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட பினாங்கு பயணப்படகு சேவை முத்துத் தீவின் அடையாளச் சின்னமாகத் திகழ்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பெருநிலம் மற்றும் தீவுப்பகுதிக்குச் செல்வதற்கு பாலத்திற்கு அடுத்த நிலையில் இப்பயணப்படகு மாற்றுவழியாகப் பயன்படுத்தப்படுகிறது. மலேசியாவின் மிகப் பழமையான பயணப்படகு சேவையாகவும் மாநிலத்தின் சுற்றுலாத்துறைக்கு அடையாளமாகவும் இடம்பெறுகிறது.

நூற்றாண்டு தொன்மைமிக்க இப்பயணப்படகு சேவையை பள்ளி மாணவர்கள், வேலை செய்பவர்கள், பெரியவர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர்கள் ஜார்ச்டவுன் (பங்காலான் ராஜா துன் உடா பயணப்படகு நிலையம்) இருந்து பட்டர்வொர்த்-க்கு (பங்காலான் சுல்தான் அப்துல் ஹலிம் பயணப்படகு நிலையம்) இருவழிப் பயணத்திற்காகப் பயன்படுத்துகின்றனர்.

இந்தப் பயணப்படகு சேவையை சிலர் தினமும் தனது வாழ்நாளில் ஒரு முறைதான் பயன்படுத்துகின்றனர் என்றால் மிகையாகாது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் இடையே பிரபலமாக விளங்கும் இச்சேவை குறித்து முத்துச் செய்திகள் நாளிதழ் நிருபர்கள் நேற்று (மார்ச்,18) பங்காலான் ராஜா துன் உடா பயணப்படகு நிலையத்திற்கு நேரடியாகச் சென்று பொது மக்களிடையே கருத்துகள் கேட்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொண்டனர்.

 

மூத்தகுடிமக்கள் பொ.சரோஜா, 61

“மூத்தகுடிமக்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் பயணப்படகு ஏறுவதற்கு சிறப்பு காத்திருக்கும் இடம் இருக்கும் வேளையில் அவர்கள் அப்படகை விட்டு வெளியேறும் போதும் பாதுகாப்பு கருதி சிறப்பு வழி அமைக்க வேண்டும்”.

“இப்பயணப்படகு சேவை அட்டவணையில் குறித்த நேரத்திற்கு ஏற்ப வருவதை உறுதிப்படுத்த வேண்டும், இதன் மூலம் மாணவர்கள் மற்றும் வேலை செய்பவர்கள் காலம் தாமதம் இன்றி செல்ல முடியும்,” என்றார்.

 

வாடகைக்கார் ஓட்டுநர் கோவிந்தசாமி, 74

“பயணப்படகு ஏறுவதற்கும் இறங்கிப் பின்பும் நீண்ட தூரம் நடந்த பிறகே பொதுப் போக்குவரத்து அல்லது வாகன நிறுத்தும் இடத்தை வந்தடைய முடியும். இச்சூழல் வயோதிகள் மற்றும் நோயாளிகளுக்கு மிகுந்த சவாலாக இருப்பதால் எதிர்காலத்தில் ‘escalators’ மின்படிகள் பொருத்த வேண்டும்,” என தெரிவித்தார்.

 

 

 

 


இல்லத்தரசி, ல.ஞானமணி, 39

“பயணப்படகில் பயணிக்கும் பொது மக்கள் உணவு உட்கொள்ள சிறு சிற்றுண்டிச்சாலை அமைக்க வேண்டும். மூத்தகுடிமக்கள் மற்றும் மாணவர்கள் பலகாரம் உட்கொள்ள விரும்புவர்,” என்றார்.

 

 

சென்ரல் கல்லூரி மாணவர்கள் மு.திவ்யாஷினி மற்றும் ப.தீபா (இடமிருந்து வலம்)

“நாங்கள் இருவரும் அடிக்கடி இப்பயணப்படகு சேவையைப் பயன்படுத்துகிறோம். இது வரை சிறப்பான சேவை வழங்குவதாக கருதுகிறோம். இருப்பினும் பயணப்படகில் இருக்கைகள் அதிகரிக்க வேண்டும்.” அனைத்து வயதினருக்கும் ஏற்றப்படி பொது வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.