பினாங்கின் முக்கிய மேம்பாட்டுத் திட்டங்களில் பி.டி.சி தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் – முதலமைச்சர்

Admin
img 20261119 wa0167

பாயான் லெப்பாஸ் – பினாங்கு மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதுடன், எதிர்கொள்ளவிருக்கும் சவால்களையும் சமாளிக்கும் வகையில், மாநிலத்தின் முக்கிய மேம்பாட்டுத் திட்டங்களில் பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் (பி.டி.சி) நிர்வாகக் குழுவினர் தொடர்ந்து முழுமையான கவனம் செலுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் வலியுறுத்தினார்.

img 20261119 wa0153

தொழில்துறை மேம்பாட்டிற்கான நிலங்களைத் தயார்படுத்துதல், முதலீடுகளை ஈர்ப்பதற்குத் தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் மக்களுக்கான சமூகப் பொறுப்புகளை நிறைவேற்றுதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

“இன்று நடைபெற்ற பி.டி.சி இயக்குநர் வாரியக் கூட்டத்தில், எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ளவிருக்கும் பல்வேறு வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்து விவாதித்தோம்.
img 20261119 wa0163

“எனவே, தொழில்துறை மேம்பாட்டிற்கான நிலங்களைத் தயார்படுத்துதல், அதனுடன் தொடர்புடைய மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுத்தல், முதலீடுகளை ஆதரிக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் நிர்வாகக் குழுவினர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதேவேளையில், பினாங்கு மக்களுக்கான சமூகப் பொறுப்புகளையும் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
f37c55e9 73d9 4851 925c 80b7a35d018e

“பொருளாதார வளர்ச்சியும் உள்கட்டமைப்பு மேம்பாடும் மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதுடன் இணைந்து பயணிப்பதை உறுதிப்படுத்துவதே பினாங்கு2030 தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்,” என்று அவர் கூறினார்.

இன்று பி.டி.சி ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
05dfdcb1 1302 4983 a708 fc90fcae61ae
இந்நிகழ்ச்சியில், வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜூ, வர்த்தகம் மற்றும் சமூக ஒற்றுமை ஆட்சிக்குழு உறுப்பினர் கோ சூன் ஐக், வர்த்தகம், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புறநகர் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரஷிடி ஸினோல், பி.டி.சி தலைமைச் செயல் அதிகாரி டத்தோ அப்துல் லத்தீஃப் அப்துல் அஸீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பேசிய நிதி, பொருளாதார மேம்பாடு, நிலம் மற்றும் தொடர்புத்துறை ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ் கொன் இயோவ், மாநிலத்தின் முக்கிய மேம்பாட்டு நிறுவனமாக விளங்கும் பி.டி.சி, பினாங்கின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதிலும், தொழில்துறையை மேலும் வலுப்படுத்துவதிலும் முக்கியப் பொறுப்பை வகிக்கிறது என்றார்.

பினாங்கின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சாதகமான நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், 2025ஆம் ஆண்டில் மாநிலம் 7.3 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்ததுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ரிம130.3 பில்லியனை எட்டியுள்ளதாகவும் தெரிவித்தார். இது முந்தைய ஆண்டில் பதிவான ரிம121.4 பில்லியனை விட அதிகமாகும்.

“இந்த நேர்மறையான வளர்ச்சி தொடர்ந்து நீடிக்கிறது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மட்டும் பினாங்கு ரிம20.2 பில்லியன் மதிப்பிலான அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் புதிதாக 20,216 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“இந்த வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், ‘Penang International Logistics Aeropark’ (PILA), செபராங் பிறை மத்திய பகுதியில் 1,578 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள புதிய மேம்பாட்டுத் திட்டம், பத்து காவான் தொழிற்பேட்டை 3 (BKIP 3) மற்றும் பண்டார் காசியா தொழில்நுட்பப் பூங்கா உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் திட்டமிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

“அதேவேளையில், பைராம் பகுதியில் அமையவுள்ள பத்து காவான் தொழிற்பேட்டை 2 (BKIP 2) திட்டம் தற்போது திட்டமிடல் கட்டத்தில் உள்ளது. இத்திட்டத்தை பி.டி.சி நேரடியாக மேம்படுத்தவுள்ளது. இதில் Medi-City, பண்டார் காசியாவில் தொழிலாளர்களுக்கான காசியா கார்டன் தங்குமிட வசதி மற்றும் தொழில்துறையின் நீண்டகால நீர்த் தேவையை உறுதிப்படுத்தும் வகையில் நீர் சேமிப்புத் திட்டம் ஆகியவையும் இடம்பெறுகின்றன,” என்று அவர் விளக்கினார்.

பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினரும் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில தரப்பினருக்கு நிறுவன சமூகப் பொறுப்புத் திட்டத்தின் (சி.எஸ்.ஆர்) கீழ் உதவிகளை வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

இதற்கிடையில், பண்டார் காசியாவில் ரிம116 மில்லியன் செலவில் அமைக்கப்படும் காசியா கார்டன் தொழிலாளர் தங்குமிடத் திட்டத்தின் மூலம் 6,750 தொழிலாளர்களுக்கு வசதியான தங்குமிடங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பி.டி.சி ஊழியர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் ஆற்றிவரும் பணிகளுக்கு அவர் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

இந்த நிறுவனத்தின் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுவதற்கு குழு செயல்பாடு, தொழில்முறை அணுகுமுறை மற்றும் நேர்மை ஆகிய பண்புகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இறுதியாக, தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்த பி.டி.சி இந்து சங்கத்திற்கும், பொது மக்களுக்கு உதவும் நோக்கில் சமூகப் பொறுப்புத் திட்டங்களை முன்னெடுத்ததற்கும் அவர் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.