பினாங்கில் தைத்திங்கள் கொண்டாட்டம்

மாநில அளவிலான பொங்கல் கொண்டாட்டத்தில் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி பொங்கல் பானையில் பால் ஊற்றி துவக்கி வைத்தார். (உடன் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் மற்றும் அரசியல் தலைவர்கள்).

உழவர் திருநாள், தமிழர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு என்று அழைக்கப்படும் பொங்கல் விழா இப்போது மலேசியர்களிடையே மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள், அரசு சார்பற்ற இயக்கங்கள், உயர்கல்விக்கூடங்கள், இடைநிலைப் பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகள் ஆகியவற்றைச் சேர்ந்த அனைவரும் தைப்பொங்கலை மிக சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

அவ்வகையில் பினாங்கு மாநில அளவிலான பொங்கல் கொண்டாட்டம் கடந்த 21-ஆம் திகதி ஶ்ரீ அன்னை திரெளபதை அம்மன் ஆலய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. பினாங்கு இந்து அறப்பணி வாரியம், பினாங்கு இந்து சங்கம், அம்மா அறவாரியம், பினாங்கு இராமர் ஆலயம், ஆகிய 21 அரசு சார இயக்கங்கள் இந்தப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு இயக்கங்களும் குழு முறையில் பொங்கல் வைத்தனர்.
மூன்று கரும்புகள் பிரமிட் வடிவில் கட்டப்பட்டு, அதற்கு நடுவில் விறகுகளுக்கு இடையில் அடுக்கி வைக்கப்பட்ட செங்கற்களின் மேல் அலங்கரிக்கப்பட்ட மண் சட்டி வைக்கப்பட்டிருந்தது, ஒவ்வொரு மண்சட்டிக்கு முற்புறம் வண்ண அரிசி மாவில் கோலங்கள் இடப்பட்டு அவ்விடமே வண்ணமயமாகக் காட்சியளித்தது. மாவிலை, தோரணங்கள் கட்டப்பட்டு அம்மன் ஆலயம் இந்து பாரம்பரியத்தை வெளிபடுத்தி நின்றது. அதோடு, அந்நிகழ்வை மேலும் சிறப்பிக்கும் வகையில் இந்தியர்களின் பாரம்பரிய நடனங்களான மயிலாட்டம், ஒல்லி ஆட்டம், பரதநாட்டியம், கோலாட்டம் போன்ற அம்சங்கள் இடம்பெற்றன. வரவேற்புரையாற்றிய பினாங்கு இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப இராமசாமி, இந்த ஆண்டு தைப்பூச விழாவின் போது தங்க இதத்தில் முருகப்பெருமான் வேல் கொண்டுவரப்படும் எனக் கூறினார். ‘தங்க ரதம்’ மக்கள் இரதம் என புகழாறம் சூட்டினார். தங்கம் மற்றும் வெள்ளி இரதம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்த வண்ணமாக இருந்தாலும் தைப்பூச இரத ஊர்வலம் சுமூகமாக நடைபெறும் என வாக்குறுதி அளித்தார்.

பொங்கல் விழா பங்கேற்பாளர்கள்

இப்பொங்கல் கொண்டாட்டத்தில் வாழ்த்து உரையாற்றிய மாநில முதல்வர் இந்து அறப்பணி வாரியம் வெற்றி கரமாக வழிநடத்தப்படுவதாகக் கூறினார். பினாங்கு நம்பிக்கை கூட்டணி அரசு ஒவ்வொரு ஆண்டும் அறப்பணி வாரியத்திற்கு ரிம1.1 லட்சம் மானியம் வழங்குவதாக எடுத்துரைத்தார். மேலும் பத்து காவான் பெருநிலப்பகுதியில் டிசைன் வில்லேஜ், தொழிற்பேட்டைகள் நிர்மானிப்பு, ஈக்கியா வருகை துரித வளர்ச்சியைக் கொண்டு வருவதாக மக்களுக்குத் தெளிவுப்படுத்தினார்.
மேலும், இந்தத் தைத்திங்கள் கொண்டாட்டம் பிறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் பிறை ஸ்ரீ செல்வ விநாயகர் பரிபாலான சபா இணைந்து நடத்திய பொங்கல் பெருவிழா ஜனவரி 14 அன்று மிகவும் சிறப்பாக நடந்தேறியது. பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ப. இராமசாமி இவ்விழாவில் கலந்து சிறப்பித்தார்.
மேலும் பினாங்கு இந்து தர்ம மாமன்றம் ஏற்பாட்டில் இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியில் பொங்கல் விழா மிக கோலகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ கலந்து கொண்டார். பாரம்பரியம் சார்ந்த பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

இராம கிருஷ்ணா தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ.

அனைத்து கொண்டாட்டங்களிலும் பினாங்கு மாநில அனைத்து இனத்தையும் சார்ந்த அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு தத்தம் தங்களின் ஆதரவை வழங்கி பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்தும் தெரிவித்தனர்.