பினாங்கில் வடிக்கால், உள்கட்டமைப்புத் திட்டங்கள் நிர்வகிக்க ஒருங்கிணைப்புக் குழு

Admin

 

ஜார்ச்டவுன் – கடந்த 2019 ஆம் ஆண்டு
வடிக்கால் மற்றும் உள்கட்டமைப்புப் பிரச்சனைகளை நிர்வகிப்பதற்காக உள்கட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது என்று பினாங்கு போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் சாய்ரில் கீர் ஜோஹாரி விளக்கினார்.

“பினாங்கில் உள்கட்டமைப்பு மற்றும் வடிக்கால் அமைப்புத் திட்டங்கள் சீராக நிறைவேற்றப்படுவதை உறுதிச் செய்வதற்காக மாநில அமைப்புகள் மற்றும் துறைகளுடன் இணைந்து செயல்பட இந்தக் குழு உருவாக்கப்பட்டது.

“மேம்பாட்டுத் திட்டங்கள் சீராக நடைபெறுவதை உறுதி செய்யவும் , சரியான பராமரிப்பு மற்றும் செலவுகளை நிர்வகிப்பதை ஊக்குவிக்கவும் இக்குழு செயல்பாடுக் காண்கிறது.

“துணை மாநிலச் செயலாளர் (மேம்பாடு), ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மாநிலப் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு (BPEN), மாநில நிதி அலுவலகம், மாநில நிலம் மற்றும் சுரங்க அலுவலகம், பொதுப்பணித் துறை மற்றும் மாநில வடிக்கால் மற்றும் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் ஆகியோர்
இந்த உள்கட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினர்களாக இடம்பெறுகின்றனர்,” என்று தஞ்சோங் பூங்கா சட்டமன்ற உறுப்பினர் சாய்ரில் இன்று பினாங்கு சட்டமன்றத்தில் லீ சுன் கிட் (புலாவ் தீக்கூஸ்) கேட்டக் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.

உள்கட்டமைப்பு மற்றும் வடிக்கால் அமைப்புத் திட்டங்களின் பராமரிப்பு, ஒருவருக்கொருவர் நல்ல உறவை வளர்ப்பது மற்றும் தொடர்புடைய சிக்கல்களை திறம்பட செயல்பாடுக் காண இக்குழுவின் பொறுப்பாகும் என்று சாய்ரில் கூறினார்.

இந்த மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடுகள் மத்திய அரசு, மாநில அரசு அல்லது உள்ளாட்சி மன்றங்களால் நிதியளிக்கப்படும் என்று அவர் கூறினார்.

இது தொடர்பாகக் கூறுகையில், மாநிலத்தில் சாலைகள், வடிக்கால் மேம்பாடு, மரங்கள் மற்றும் நிலப்பரப்புகளை பராமரிப்பதற்கான வழிகாட்டுதல்களை மாநில அரசு ஏற்கனவே நிர்ணயித்துள்ளது என்று சாய்ரில் மேலும் கூறினார்.