பினாங்கு அனைத்துலக அறிவியல் கண்காட்சி, STEM கல்விக்கு வழிகாட்டி

img 20251030 wa0079

ஜார்ச்டவுன் – 13-வது ஆண்டாக நடைபெறும் பினாங்கு அனைத்துலக அறிவியல் கண்காட்சி (PISF), மலேசியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கான முக்கியமான கண்காட்சியாகத் திகழ்கிறது.

இந்தக் கண்காட்சி, அறிவியலின் மீது உள்ள ஆர்வத்தைப் படைப்பாற்றலாக மாற்றும் ஒரு மேடையாகவும், இளையோருக்கு அறிவியல் என்பது ஒரு பாடமாக மட்டுமல்லாது, எதிர்காலத்தை வடிவமைக்கும் சக்திவாய்ந்த கருவி என உணர்த்தும் இடமாகவும் அமைகிறது.
whatsapp image 2025 10 30 at 3.08.30 pm (1)

மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், இந்தக் கண்காட்சி நம் இளைஞர்களிடையே அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) மீது ஆர்வத்தை உருவாக்குவதை முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது, என்றார்.

“மேலும், தொழில் மற்றும் கல்வித் துறைகளின் ஒத்துழைப்பில் நிஜ உலக கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்துவது மற்றும் குழுப்பணி, சிக்கல் தீர்க்கும் திறன் மற்றும் கற்பனை ஊக்குவிக்கும் நேரடி திட்டங்கள் மூலம் மாணவர்கள் சாதனைகளைக் கொண்டாடுவதும் அதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்,” என இன்று பினாங்கு சயின்ஸ் கிளஸ்டரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

img 20251030 wa0069

இந்த ஆண்டு நடைபெறும் கண்காட்சியில் 73 நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஆதரவைப் பெற்றுள்ளது என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் .

இது தொழில், கல்வித்துறை மற்றும் சமூகத்திற்கு இடையே பினாங்கின் வலுவான ஒத்துழைப்பின் தெளிவான பிரதிபலிப்பாகும்.

பினாங்கு அனைத்துலக அறிவியல் கண்காட்சி 2025 வருகின்ற நவம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் SPICE அரங்கில் நடைபெறும் என அறியப்படுகிறது.

“இளைய தலைமுறைக்கு சிப் வடிவமைப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் எதிர்கால முன்னேற்றத்திற்கான தூணாக பினாங்கு அனைத்துலக அறிவியல் விழா (PISF) முக்கிய பங்கு வகிக்கிறது.

“இந்தக் கண்காட்சியில் காணப்படும் திட்டங்கள் வெறும் பள்ளித் திட்டங்கள் அல்ல; அவை பினாங்கின் எதிர்கால தொழில்கள், தொடக்க நிறுவனங்கள் மற்றும் புத்தாக்க முயற்சிகளுக்கான முன்மாதிரிகளாகும்,” என்று சாவ் தெரிவித்துள்ளார்.

“பினாங்கு2030 தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, இந்தக் கண்காட்சி நிலையான மற்றும் உள்ளடக்கிய முன்னேற்றத்தின் அடையாளமாகத் திகழ்கிறது.

மாணவர்கள் இக்கண்காட்சியில் கலந்து கொண்டு தைரியமாக கேள்விகளைக் கேட்கவும், சவால்களை எதிர்கொள்ளவும், அவர்களின் கற்பனை ஆற்றலை மேம்படுத்தவும், ஊக்குவித்தார்.

“எங்கள் தொழில்துறை கூட்டாளர்களின் ஒத்துழைப்பு, வகுப்பறைகளுக்கும் வாரிய அறைகளுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டு, எதிர்காலத்தை முன்னோக்கி இயக்கும் திறமைகளை உருவாக்குவதற்கு வழிவகுக்கிறது,” என்று சாவ் கூறினார்.

இதற்கிடையில், PSC தலைவரான இரண்டாம் துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் டியோ, மாநில அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையை முன்னெடுத்துச் செயல்படுவதாகப் பகிர்ந்து கொண்டார்.

பினாங்கு அறிவியல் கிளஸ்டர் (PSF) தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஓய் பெங் ஈ, இந்த அமைப்பு வழி நடத்தப்படும் AI (செயற்கை நுண்ணறிவு) திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் கூய் அவர்களும் கலந்து கொண்டார்.

இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இக்கண்காட்சியில் பள்ளிகள், ஆதரவற்ற இல்லங்கள், சமூகக் குழுக்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 40,000 முதல் 60,000 பேர் வரை பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.