பினாங்கு மாநிலம் அந்நிய நேரடி முதலீட்டில் முதன்மை வகித்து வரலாறு படைத்தது.

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலம் தேசிய ரீதியில் உற்பத்தித் துறையில் மிக உயர்ந்த அந்நிய நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ) அதாவது ரிம15 பில்லியன் பதிவுச்செய்து முதலிடம் வகிக்கிறது. நாட்டின் முன்னணி முதலீட்டு இலக்குகளில் பினாங்கு முதன்மையாகத் திகழ்கிறது.

மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் (மிடா) வெளியிட்ட
2019-ஆம் ஆண்டிற்கான முதலீட்டு அறிக்கையில் அங்கீகரிக்கப்பட்ட 166 திட்டங்கள் அடிப்படையில் இந்த புள்ளிவிபரங்கள் பெறப்பட்டது என மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் தெரிவித்தார்.

“உற்பத்தி துறையில் அங்கீகரிக்கப்பட்ட மொத்த முதலீடு (உள்நாட்டு மற்றும் அந்நிய நேரடி முதலீடு) ரிம16.9 பில்லியன் ஆகும்.

“இந்த ரிம16.9 பில்லியன் முதலீடு பினாங்கின் வரலாற்றிலே மிக உயர்ந்த முதலீடாக சாதனைப் படைக்கிறது. இது அந்நிய முதலீட்டாளர்கள் பினாங்கு சுற்றுச்சூழல் அமைப்பின் மீது கொண்டுள்ள நம்பிக்கையைச் சித்தரிக்கிறது.

“பினாங்கு மாநிலம் இயற்கை வளங்கள் கொண்டிருக்காவிட்டாலும், முதலீட்டாளர்கள் ஈர்க்கும் வகையில் நிபுணத்துவமிக்க மற்றும் திறன் மிக்க மனித மூலதனம் கொண்டிருக்கிறது,” என முகநூல் நேரலையில் மாநில முதல்வர் இவ்வாறு கூறினார்.

முதல்வர் கூறுகையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி துறையில் (கே.டி.என்.கே) சேவைத் துறை 49 விழுக்காடு பதிவுச்செய்து முதலிடத்தையும் அதனை அடுத்து 46 விழுக்காடு உற்பத்தி துறையும் இடம்பெறுகிறது.

“சேவைத் துறையின் பங்களிப்பில் சுற்றுலாத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. சுற்றுலாத் துறையில் உலக பிரசித்திப் பெற்ற அங்காடி உணவுகள்; பொழுது போக்கு; கலை மற்றும் கலாச்சாரம்; எம்.அய்.சி.ஈ துறை(கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்) தங்கும் விடுதிகள்; மற்றும் பல உள்ளடங்கும்.

“பினாங்கில் உள்ள சேவைத் துறையில் சுமார் 300,000 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குகிறது, அவர்களில் பாதி பேர் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளனர்” என்று முதல்வர் கூறினார்.

பினாங்கு இன்ஸ்டிடியூட் மையத்தின் நெருக்கடி மதிப்பீட்டு அறிக்கையில் பினாங்கின் சேவைத் துறையில் 99 விழுக்காடு வணிகங்கள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SME) பிரிவில் உள்ளன.

“இந்த SME பிரிவில் விவசாயம், கட்டுமானம், உற்பத்தி மற்றும் சேவைகளின் நான்கு முக்கிய துறைகளை உள்ளடக்கியது, இத்துறைகள் கோவிட்-19 நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

“இந்த பகுப்பாய்வின்படி மைக்ரொ நிறுவனங்களான கலை, கேளிக்கை, பொழுதுபோக்கு சார்ந்த துறைகள் 74.95விழுக்காடு இருப்பதாகவும், கோவிட்-19ல் அதிகமாக பொருளாதார நெருக்கடி எதிர்நோக்குவதாக புலப்படுகிறது.

எனவே, மாநில அரசு ‘இயல்பான பினாங்கு சுற்றுலா துறை பணிக்குழு’ நியமித்து இத்துறையின் வளர்ச்சிக்கு உறுதியளிக்கிறது.

“இப்பணிக்குழுவிற்கு நான் தலைமை தாங்குவேன், அதே வேளையில் சுற்றுலா, கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய ஆட்சிக்குழு உறுப்பினர் இயோ சூன் இன் துணைத் தலைவராகவும் பினாங்கு அனைத்துலக சுற்றுலாத் துறை செயலாளராகவும் செயல்படும் என குறிப்பிட்டார்.

இந்த கோவிட்-19 தொற்றுநோயால் எதிர்பாராத நிலையில் அனைவரும் பாதிக்கப்பட்டாலும் மாநிலத்தின் பொருளாதாரம் தொடர்ந்து வலுப்பெறுவதை உறுதிச்செய்யும்.

வருகின்ற ஏப்ரல் 25-ஆம் தேதி இயல்பான பினாங்கு சுற்றுலா துறை பணிக்குழுவுடன் சம்பந்தப்பட்ட தொழில்துறை தலைவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்டு இத்துறை எதிர்நோக்கும் ஆரம்பக்கால விளைவுகள் அல்லது பாதுகாப்புக் குறித்து கலந்துரையாடப்படும்.

தற்போது ஒரு வார காலமாக பினாங்கில் கோவிட்-19 தொற்றுநோய் வழக்குகள் பதிவு பெறவில்லை. எனவே, இந்த அடைவுநிலை பெறுவதற்கு முன் வரிசைப் பணியாளர்களின் சேவை, தியாகம், கடமை முக்கிய காரணமாக திகழ்கிறது. மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள், கம்போங் நிர்வாக செயல்முறை கழகங்கள் மற்றும் அரசு சாரா இயக்கங்களின் ஒத்துழைப்பும் இந்த கோவிட்-19 தாக்கத்திலிருந்து விடுப்பட உதவுகிறது என கூறினார்.

மாநில முதல்வர் Ckone அறக்கட்டளை நலச் சங்கத்திடமிருந்து ரிம110,000 மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களைப் பெற்று பினாங்கு மாநில சுகாதாரத் துறையிடம் ஒப்படைத்தார்.

மலேசிய பூமிபுத்ரா குத்தகையாளர் சங்கம் (பினாங்கு) ரிம15,000 மதிப்புள்ள 110 பெட்டி பொருட்கள் மாநில அரசுக்கு வழங்கியுள்ளது.