பினாங்கு மாநில அரசு கோவிட்19-ஐ எதிர்நோக்க பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம்- முதல்வர்

ஜார்ச்டவுன் – “நமது நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இன்று முதல் அமலுக்கு வருவதால் பொது மக்கள் அதன் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் அனைவரும் ஒன்றிணைந்து கோவிட்-19 நுண்ணுயிர் கிருமி நோயின் பரவலைத் தடுக்க இயலும். இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைப் பின்பற்ற அனைவரின் ஒத்துழைப்பு குறிப்பாக ஒவ்வொரு குடிமக்களும் தியாகம் செய்வதன் வாயிலாக இந்த ஆணையின் நோக்கத்தை அடைய வழிவகுக்க முடியும்.

“மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் ஒத்துழைப்புடன் தொடர்ந்து பணிப்புரிந்து மாநில மக்களின் நல்வாழ்வுக்காகப் போராடுவோம்,” என மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் பினாங்கு மாநில பொது மருத்துவமனைக்கு தன்னிலை பாதுகாப்பு உபகரணங்கள் (அறுவை சிகிச்சை அங்கி) வழங்கும் நிகழ்வில் இவ்வாறு கூறினார்.
மாநில முதல்வர் கோவிட்-19 நோய் பரவலை தடுக்க அல்லும் பகலும் பணியில் ஈடுப்பட்டு வரும் பொது மருத்துவமனை ஊழியர்களின் பாதுகாப்புக்காக 10 பெட்டி தன்னிலை பாதுகாப்பு உபகரணங்களை பினாங்கு பொது மருத்துவமனை தலைமை துணை இயக்குநர் திரு சுரேந்திரனிடம் வழங்கினார்.

சுகாதாரத் துறை மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கவில்லை; இருப்பினும் மாநில சுகாதாரத் துறை சிறப்புடன் செயல்படுவதற்கு மாநில அரசு உதவிகள் நல்கும். மேலும், இந்த நோய் பரவலை தடுக்க பணியில் ஈடுப்பட்டிருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் பாராட்டுகள் தெரிவித்தார்.

மாநில அரசு நேற்று சிறப்பு சந்திப்புக் கூட்டம் கோவிட்19-ஐ வழிநடத்தி சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அதில் பொது சுகாதார விவகாரங்கள், கோவிட்19-ஐ எதிர்நோக்கும் திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக முதல்வர் விளக்கமளித்தார்.

தற்போது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கத்தைத் தொடர்ந்து பொது மக்களிடைய பல பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் பொறுமை காக்க வேண்டும். மேலும் மாநில அரசின் ‘பினாங்கில் கோவிட் 19-ஐ எதிர்ப்போம்’ என்ற பிரச்சாரம் மூலம் பொது மக்கள் www.facebook.com/penanglawancovid19 எனும் முகநூல் பக்கத்தை அனுகி தகவல்கள் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த பிரச்சாரத்தின் அடுத்த கட்டமாக ‘பினாங்கில் கோவிட் 19-ஐ எதிர்ப்போம்’ எனும் வலைத்தளம் நாளை அதிகாரப்பூர்வத் தொடக்க விழாக் காணும் என்றார். பொது மக்கள் நாளை முதல் இந்த அகப்பக்கத்தை ‘www.PenangLawanCovid19.com’ அணுகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அண்மையில் பிரதமர் டான்ஶ்ரீ மொஹிடின் யாசின் தலைமையிலான தேசிய அவசர கவுன்சில் கூட்டத்திற்கு சிலாங்கூர், கெடா, நெகிரி செம்பிலான், பினாங்கு மற்றும் சபா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மந்திரி பெசார் மற்றும் மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்காமல் நடத்தப்பட்டது.

இது குறித்து தேசிய செயலாளர் டத்தோ ஶ்ரீ மொஹமட் ஜுகி அலி அழைப்பு விடுக்காததற்கு அறிக்கையில் மன்னிப்புத் தெரிவித்தார். மேலும், இக்கூட்டத்தில் கலந்து கொள்ள சிலாங்கூர், கெடா, நெகிரி செம்பிலான், பினாங்கு மற்றும் சபா மாநிலங்களுக்கான மாநில மேம்பாட்டு இயக்குநர்களுக்கு மட்டுமே அழைக்கப்பட்டதாக மேலும் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் கோவிட் -19 குறித்த சிறப்புக் கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு அனைத்து முதலமைச்சர்களுக்கும் மந்திரி பெசாருக்கும் அழைப்பு விடுக்க உத்தரவு பிறப்பித்ததாக மொஹட் ஜுகி அறிவிப்பில் குறிப்பிட்டார்.

கோவிட் -19 அவசர சந்திப்புக் கூட்டத்திற்கு அழைப்பிதழ் விடுக்காத தொடர்பாக தலைமைச் செயலாளரின் மன்னிப்பு குறித்து முதல்வரின் கருத்தை பத்திரிகையாளர் கோரியிருந்தார்.

“இது பினாங்கு மற்றும் அதன் மக்களின் எதிர்காலம்; இது மலேசியாவின் எதிர்காலம் குறித்த விவகாரம், அரசியல் பிரச்சினை அல்ல.

“இந்த கோவிட்19-ஐ எதிர்நோக்கும் போராட்டத்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன்,” என முதல்வர் இவ்வாறு பதிலளித்தார்.