பினாங்கு மாநில சுதந்திர தினக் கொண்டாட்டம்

மாநில ஆளுநர்  மலேசிய இராணுவப் படை அணிவகுப்பிற்கு மரியாதை செலுத்தினார்.
மாநில ஆளுநர் மலேசிய இராணுவப் படை அணிவகுப்பிற்கு மரியாதை செலுத்தினார்.

நாட்டின் 59-வது சுதந்திர தின விழா பினாங்கு மாநிலத்தில் மிக விமரிசையாக பல்வேறு கோலகலமான வரவேற்புகளுடன் கொண்டாடப்பட்டது. இவ்விழா, பாடாங் கோத்தா லாமாவில் கொண்டாடப்பட்டது. நாட்டு பற்றைப் புலப்படுத்தும் வகையில் ஏறக்குறைய 5,000-க்கும் மேற்பட்ட பல்லின மக்கள் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.
மாநில சுதந்திர தின அணிவகுப்பில் குழு முறையில் வலம் வந்த 6,379 பங்கேற்பாளர்கள் மாநில அரசு, தனியார் நிறுவனம், அரசு சாரா இயக்கம், உயர்க்கல்வி மையம், பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி 296 வாகனங்களும் இடம்பெற்றன. அணிவகுப்பில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் தேசிய கொடி மற்றும் மாநில கொடியை கையில் ஏந்தி தங்களின் தேசப் பக்தியைச் சித்தரித்தனர். பினாங்கு மாநிலம் தூய்மையாகவும் பசுமையாகவும் காட்சியளிப்பதற்கு துணைபுரியும் பினாங்கு செபராங் பிறை நகராண்மைக் கழக ஊழியர்கள் மட்டுமின்றி அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களும் அணிவகுப்பில் இடம்பெற்றது.

பினாங்கு மாநில ஆளுநர் துன் அப்துல் ரஹமான், அவரின் துணைவியார் மதிப்பிற்குரிய மஜிமோர் சாரிப், மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், அவரது துணைவியார் பேட்டி சியூ, மாநில முதலாம் துணை முதல்வர் டத்தோ முகமது ரஷிட் பின் ஹஸ்னோன், மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். மாநில ஆளுநரின் வருகையைத் தொடர்ந்து இராணுவப் படையினர் அரச மரியாதைச் செலுத்தினர்.

கலை, கலாச்சார மற்றும் பாரம்பரிய அணிவகுப்பு
கலை, கலாச்சார மற்றும் பாரம்பரிய அணிவகுப்பு

மலேசிய நாட்டை சார்ந்த மூவின மக்களைப் பிரதிபலிக்கும் வகையில் பாரம்பரிய நடனம் நடைபெற்றது. மேலும், தேசிய பண், மாநில பண் தொடர்ந்து நடைபெற்ற அணிவகுப்பில் பார்வையாளர்களைக் கவர்ந்தனர். பினாங்கு மாநில அரசு “ஒரே உள்ளம் ஒரே உணர்வு” என்ற கூட்டரசு அரசின் கருப்பொருளைப் பயன்படுத்தி இவ்வாண்டுக்கான சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.