பினாங்கு மேம்பாட்டுக் கழகம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை

Admin

பாயான் லெப்பாஸ் – மாநில அரசின் நிறுவமான பினாங்கு மேம்பாட்டுக் கழகம் (பி.டி.சி) தொடர்ந்து வருமானத்தை அதிகரிக்க இந்த ஆண்டு உயர் தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தும்.

மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ், இந்த நடவடிக்கையானது பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் ஆற்றல்மிக்க ‘திட்ட மேலாளர்’ மற்றும் வணிகப் பங்குதாரராக முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறினார்.

“புதிய தொழில்துறை பூங்கா, ‘Linear Waterfront’, ‘Distribution Park’, தொழிலாளர் வீடமைப்புத் திட்டங்கள், சுற்றுச்சூழல் சுற்றுலா, மருத்துவ மையங்கள் மற்றும் பல மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவை இந்த உயர் தாக்கத் திட்டங்களில் அடங்கும்.

“பி.டி.சி இன் பிரதான மேம்பாட்டுத் திட்டங்களின் மூலம், நீண்ட காலத்திற்கு சிறந்த வருமானத்தை ஈட்டித்தரும்,” என்று பினாங்கு மேம்பாட்டுக் கழக 2023 சீனப் புத்தாண்டு கொண்டாட்ட விழாவில் சாவ் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், மாநில அரசு செயலாளர் டத்தோ முகமட் சாயுத்தி பாக்கார்; இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி; மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்; பி.டி.சி தலைமை நிர்வாக அதிகாரி, டத்தோ அஜீஸ் பக்கார்; இன்வெஸ்ட்பினாங்கு தலைமை நிர்வாக அதிகாரி, டத்தோ லூ லீ லியான் மற்றும் பி.டி.சி துறைத் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து சிறப்பித்தனர்.

பி.டி.சி தலைவரான கொன் இயோவ், முதலீட்டாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக குறிப்பாக தொழில்துறை வளர்ச்சியில் ஒரு புதிய உத்தியை மாநில நிறுவனம் செயல்படுத்தி வருவதாக நம்பிக்கை தெரிவித்தார்.

“மேலும், பினாங்கு வாழ் மக்களின் வசதிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் வாழ்க்கைத் தரம் மற்றும் உள்கட்டமைப்பின் தரத்தை மேம்படுத்துவதற்கான கூடுதல் முயற்சியாக தற்போதுள்ள வளர்ச்சிப் பகுதிகளை மேம்படுத்தவும் பி.டி.சி முயற்சிக்கிறது,” என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில், கொன் இயோவ் கடந்த ஆண்டு பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் நிதி நிர்வாகம் ரிம244 மில்லியன் கூடுதல் வருமானத்தைப் பதிவு செய்துள்ளதைப் பாராட்டினார்.

“2022 ஆம் ஆண்டில், பினாங்கு மேம்பாட்டுக் கழக வரவு செல்வு பணப்புழக்க பட்ஜெட்டின் உண்மையான சாதனை 99 சதவிகிதம் ஆகும். அதே நேரத்தில் செலவினச் செயல்திறன் 68 சதவிகிதம் ஆகும். இது ரிம244 மில்லியன் கூடுதல் வருவாய்க்கு வழிவகுத்துள்ளது.

“இதன் மூலம், பி.டி.சி கழகத்தின் நீண்ட கால கடனான ரிம68 மில்லியன், மாநில அரசு கடன் ரிம14 மில்லியன் ஆகியவை
வழங்கப்பட்ட காலவரையறைக்கு முன்னதாகவே செலுத்தியதால் ரிம2.6மில்லியன் வட்டி சேமிப்பைப் பெற்றுள்ளது,” என்று நில மேம்பாடு, பொருளாதாரம் மற்றும் தொலைதொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் விளக்கமளித்தார்.

இதற்கிடையில், அனைத்து பி.டி.சி உறுப்பினர்களும் இந்த ஆண்டு அனைத்து பிரதானத் திட்டங்களும் முழுமையாக வெற்றியடைவதை உறுதி செய்வதில் அதிக நம்பிக்கையுடனும், ஆற்றல் மிக்கவர்களாகவும், உற்சாகமாகவும் இருப்பார்கள் என்று அஜீஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

“பினாங்கு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினை முன்னெடுத்துச் செல்ல ஒரு குழுவாக ஒன்றிணைந்து செல்வதற்கு ஆதரவையும், வழிகாட்டுதலையும், ஊக்கத்தையும் வழங்க முதல்வர் மற்றும் மாநில அரசின் தலைமை நிர்வாகம் மற்றும் பி.டி.சி குழு உறுப்பினர்கள் எப்போதும் எங்களுடன் ஒத்துழைப்பர் ,” என்று அவர் மேலும் கூறினார்.