பிப்ரவரி,7 முதல் i-Sejahtera 2026 முதல் கட்ட நிதியுதவி வழங்கப்படும்

Admin
img 20260203 wa0161

ஜார்ச்டவுன் – மாநில அரசு, i-Sejahtera திட்டத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான முதல் கட்டத்தை செயல்படுத்துவதற்காக RM50.93 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது. இந்தத் தொகை பிப்ரவரி,7 முதல் மின்னணு நிதி பரிமாற்றம் (EFT) முறையின் மூலம் பெறுநர்களின் கணக்குகளில் செலுத்தப்படும்.

மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், முதலாம் கட்டத்தைச் செயல்படுத்துவதில் மூத்த குடிமக்கள், இல்லத்தரசிகள், மாற்றுத்திறனாளிகள் (OKU) மற்றும் தனித்து வாழும் தாய்மார்கள் உட்பட 281,135 பெறுநர்கள் நிதியுதவிப் பெறுவார்கள் என்று கூறினார்.

“i-Sejahtera திட்டம், பினாங்கு மாநில அரசாங்கத்தின் மக்கள் நலனுக்கான, குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் வெளிப்பாடாகும், இது மிகவும் இலக்கு மற்றும் கவனம் செலுத்தும் உதவி அணுகுமுறை மூலம் மக்களின் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது.

i-Sejahtera திட்டம், மக்களின் நலனில் அக்கறை கொண்ட பினாங்கு மாநில அரசின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது; குறிப்பாக பாதிப்புக்குள்ளாகும் தரப்பினரின் நலனை பாதுகாக்கும் நோக்கில் இது செயல்படுகிறது.

“இது வெறும் நிதியுதவி மட்டுமல்ல; மாநிலத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு அவர்கள் அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் ஒரு முயற்சியாகும்,” என அவர் கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அந்தச் சந்திப்பில் சமூக நல மேம்பாடு மற்றும் இஸ்லாம் அல்லாதோர் விவகாரம் ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் சியூ கிம், மாநில சமூக நலத்துறை(JKM) இயக்குநர் ரோசிதா இப்ராஹிம் மற்றும் மாநில அரசு செயலாளர் அலுவலகம், மாநில நிதி அலுவலகத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் கருத்து தெரிவித்த சாவ் கொன் இயோவ், இந்த ஆண்டின் முதலாம் கட்டப் பெறுநர்களில், மூத்த குடிமக்கள் பாராட்டுத் திட்டத்தின் கீழ் 211,471 பேர்; குடும்ப மாது திட்டத்தின் கீழ் 42,674 பேர்; மாற்றுத்திறனாளிகள் உதவித் திட்டத்தின் கீழ் 16,694 பேர்; மற்றும் தனித்து வாழும் தாய்மார்கள் உதவித் திட்டத்தின் கீழ் 10,296 பேர் அடங்குவதாக தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இந்த ஆண்டின் முதலாம் கட்டத்திற்கான மொத்த ஒதுக்கீடு, 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சற்றுக் குறைவாக இருப்பதாக தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டில் ரிம56,760,200 ஒதுக்கீட்டில் 290,629 பயனாளர்கள் இருந்தனர். இந்த ஆண்டு ஒதுக்கீடு குறைவாக இருப்பதற்கு, பயனாளர்களின் தரவு புதுப்பிப்பு மற்றும் தகுதி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதே இதன் காரணமாகும். இதன் மூலம், தகுதியானவர்களுக்கு மட்டுமே உதவி சென்றடைய உறுதி செய்யப்படுகிறது.

மேலும், நிதி, பொருளாதார மேம்பாடு மற்றும் நிலம், தகவல்தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான கொன் இயோவ், 2026 ஜனவரி,10க்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் கட்டத்தில் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்தார்.

“பொதுமக்கள் i-Sejahtera என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் (https://isejahtera.penang.gov.my) மூலம் பதிவு செய்யலாம். நிதியுதவி சீராக வழங்கப்படுவதை உறுதிசெய்ய, தங்களின் வங்கி கணக்கு விபரங்களைப் புதுப்பிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

“இந்த ஆண்டில் (முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களை உள்ளடக்கி) மொத்தமாக ரிம56 மில்லியன் வரை செலவாகும் என எதிர்பார்க்கிறோம். இது கடந்த ஆண்டைப் போலவே, மாநிலத்தின் ஆண்டு மொத்த வரவுசெலவுத் திட்டத்தின் ஐந்து சதவீதம் ஆகும்,” என்றார்.