பிறை எம்.பி.கே.கே முன்முயற்சியில் ‘வீதி தத்தெடுப்புத் திட்டம்’ அமலாக்கம்

Admin

பிறை – அண்மையில் பிறை கிராம சமூக மேலாண்மை கழக (எம்.பி.கே.கே) முன்முயற்சியின் கீழ் தாமான் செனாங்கின் குடியிருப்புப் பகுதியில் ‘வீதி தத்தெடுப்புத் திட்டம்’ அமலாக்கம் காண்கிறது. இத்திட்டம் பிறை எம்.பி.கே.கே ஏற்பாட்டில் செபராங் பிறை மாநகர் கழக இணை ஆதரவில் நடத்தப்படுகிறது.

மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ சுந்தராஜு, இத்திட்டத்தை வழிநடத்த ஆதரவு அளிக்கும் வகையில் பிறை எம்.பி.கே.கே செயற்குழு உறுப்பினர்களுக்கு நியமனச் சான்றிதழ் வழங்கினார்.

“இத்திட்டத்தின் கீழ் தாமான் செனாங்கின் குடியிருப்பில் அமைந்திருக்கும் 15 வீதிகளில், ஒரு எம்.பி.கே.கே உறுப்பினர் ஒரு வீதி என மேற்பார்வையாளராக நியமிக்கப்படுவர். ஒவ்வொருவரும் அவர்களுக்கென வழங்கப்பட்ட வீதியில் எதிர்நோக்கப்படும் சாலை மற்றும் வடிகால் அமைப்பு, சுற்றுப்புற தூய்மை, மற்றும் பல கூறுகளில் கவனம் செலுத்தப்படும்.

“பொறுப்பேற்ற எம்.பி.கே.கே உறுப்பினர், சம்பந்தப்பட்ட வீதியில் பொது மக்கள் எதிர்நோக்கும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளைக் கண்டறிந்து எம்.பி.கே.கே மூலம் சம்பந்தப்பட்ட துறைகளை அணுகி அதற்கான தீர்வுக் காண்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

“முதல் முறையாக அமலாக்கம் காணும் இந்த வீதி தத்தெடுப்புத் திட்டத்தை பிற குடியிருப்புப் பகுதிகளிலும் செயல்படுத்த முன்மாதிரியாகத் திகழும்.

இத்திட்டத்தின் மூலம் பொது மக்கள் குடியிருப்புப் பகுதித் தூய்மையாகவும் டெங்கி காய்ச்சல் இன்றி சுகாதாரமாகவும் வாழ வழி வகுக்கும் என பிறை எம்.பி.கே.கே தலைவர் ஶ்ரீசங்கர் முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் இவ்வாறு கூறினார்.

“பிறை எம்.பி.கே.கே முன்முயற்சியில் இத்திட்டத்தை வழி நடத்துவதற்குப் பாராட்டுக்கள். இத்திட்டம் சுற்றுச்சூழல் பராமரிப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பை செயல்படுத்த மிக அவசியமாகும்,” என ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஶ்ரீ சுந்தராஜு வலியுறுத்தினார்.

பிறை எம்.பி.கே.கே தலைமைத்துவத்தின் கீழ் விளையாட்டுப் போட்டி, காற்பந்து போட்டி, துப்புரவுப் பணி, இல்லத்தரசிக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டம், டெங்கி விழிப்புணர்வு முகாம் என சமூகநலன் சார்ந்த பல திட்டங்கள் ஏற்று நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.