பி.எஃப்.எஃப் அறக்கட்டளை நிதி நெருக்கடியிலும் திறன் மிக்க மாணவர்களை உருவாக்க இணக்கம்

whatsapp image 2024 03 14 at 1.21.19 pm

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், மாநில அரசாங்கத்தின் திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கு தொழில்துறை நிறுவனங்கள் ஆதரவளிக்க வேண்டும். ஏனெனில், மாநில அரசாங்கத்தின் இந்தத் திட்டத்தின் மூலம் திறன் மிக்க தொழிலாளர்கள் உருவாக்க முடிகிறது. அதோடு, திறன் மிக்க தொழிலாளர்கள் சமூகத்தின் எதிர்காலத் தூண்களாகவும், நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் துணைபுரிகின்றனர்.

மாநில முதலமைச்சர் 2024-ஆம் ஆண்டுக்கான பினாங்கு எதிர்கால அறக்கட்டளையின் ஊக்கத்தொகைக்கான விண்ணப்பங்கள் வருகின்ற ஜூலை,23 முதல் திறக்கப்படும் என செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.

“திறமையான மற்றும் தகுதியான மாணவர்களுக்கு பி.எஃப்.எஃப் ஒரு உயிர்நாடியாகத் திகழ்கிறது. இந்த அறக்கட்டளையின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு முன்னோக்கிச் செல்லவும், பங்களிக்கவும் முக்கிய தொழில்துறை நிறுவனங்கள் முக்கிய பங்களிப்பு வழங்க அழைக்கிறோம். இத்திட்டம் தொடர்ந்து வழிநடத்த அனைத்து தரப்பினரின் கூட்டு முக்கியத்துவத்தை சாவ் எடுத்துரைத்தார்.
whatsapp image 2024 03 14 at 1.21.22 pm

நேஷனல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (NI) மற்றும் உள்ளூர் மேம்பாட்டு நிறுவனமான Hunza Group போன்ற நிறுவனங்களின் கடந்தகால பங்களிப்புகளையும் எடுத்துரைத்தார். 350-க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் (MNCs) மற்றும் 4,000 சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SMEs) உள்ளடக்கிய பினாங்கின் விரிவான வணிக சமூகத்தின் மூலம் அறக்கட்டளையின் நிதியை அதிகரிக்க வலியுறுத்தினார்.

பினாங்கு எதிர்கால அறக்கட்டளை திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆகிறது. இம்மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு வழிவகுக்கவும் திறமைகளை ஈர்ப்பதற்கும் தக்கவைப்பதற்கும் பினாங்கு மாநில அரசாங்கத்தின் முன்முயற்சி திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

“கடந்த 50 ஆண்டுகளில், தொழில்மயமாக்கல் செயல்முறையில் பினாங்கு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. மேலும், உயர்கல்வியைத் தொடரும் சிறந்த மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குவதில் பினாங்கு மாநில அரசு உறுதிபூண்டுள்ளது.

“2015 முதல் 2022 ஆண்டு வரை மொத்தம் 700 மாணவர்கள் அறக்கட்டளை உதவித்தொகையைப் பெற்றுள்ளனர். இதன் மூலம், மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம், கணக்கியல் மற்றும் நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடர உதவிபுரிந்துள்ளது.

“அண்மையில், 2023 ஆண்டுக்கான அறக்கட்டளை தேர்வு செயல்முறையில் பினாங்கு எதிர்கால அறக்கட்டளை உபகாரச் சம்பளம் திட்டத்தின் கீழ் 43 மாணவர்களும், மேலும் எட்டு மாணவர்கள் முத்தியாரா உபகாரச் சம்பளத்தின் கீழும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்,” என்றார்.

“இத்திட்டத்தின் நிதி நிலைத்தன்மையையும் சாவ் எச்சரித்தார். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் உபகாரச் சம்பளம் வழங்கி வருவதால் அதன் நிதியும் படிப்படியாக குறைந்து வருகிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

2023 ஆம் ஆண்டுக்கான உபகாரச் சம்பளம் பெற்றவர்களில் பெஹ் ஜியா லியாங், தஸ்வினா சண்முகநாதன், பெஹ் ஜியா சுவான் மற்றும் மொஹமட் இசுடின் முகமட் ஹதிர் கலந்து கொண்டனர்.

நிபோங் திபாலில் அமைந்துள்ள மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் (யு.எஸ்.எம்) மெக்கானிக்கல் பொறியியல் துறையில் இளங்கலை பயிலும் தஸ்வினா, இந்த அறக்கட்டளையின் உதவித்தொகை தனது வாழ்க்கையை மாற்றிவிட்டது, என்றார்.

“எங்கள் குடும்பச் சுமையை எனது தந்தை மட்டுமே சுமந்து வருகிறார். அண்மையில், அவரது வருமானம் எனது கல்விச் செலவுகளை ஈடுகட்ட முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டது.
“எனது கல்விக் கட்டணத்தைச் செலுத்தவும், எனது வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்கவும் உதவிய பி.எஃப்.எஃப் அறக்கட்டளைக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்,” என்று தஸ்வினா தனது உயர்கல்வி படிப்பு முடித்தவுடன் பினாங்கில் மீண்டும் சேவையாற்ற விரும்புகிறேன்.