பி.டி.சி இரத்த தானம் முகாமிற்கு பொது மக்களிடையே அதிக வரவேற்பு

Admin

ஜார்ச்டவுன்- மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் கடந்த 2007-ஆம் ஆண்டு தொடங்கி இரத்த தானம் முகாமை நடத்தி வரும் பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் (பி.டி.சி) உன்னத முயற்சிக்கு பாராட்டுத் தெரிவித்தார்.


இரத்த தானம் முகாம் வழிநடத்துவதன் மூலம் மருத்துவமனைகளில் இரத்த வங்கியை நிரப்ப முடியும். தற்போது பினாங்கு மருத்துவமனையின் இரத்த வங்கியின் இருப்பு குறைவாக இருப்பதையும் முதல்வர் சுட்டிக்காட்டினார்.

” இன்றைய நிகழ்ச்சிக்கு பொது மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்றது. ஏனெனில், மதியம் மணி 1.00 வரை ஏறக்குறைய 73 பேர்கள் இரத்த தானம் செய்துள்ளனர்.

” மாநில அரசு மருத்துவமனைகளில் இரத்த வங்கியின் இருப்பு குறைவாக இருப்பதால் இது போன்ற முகாம்கள் வங்கியை நிரப்புவதோடு நோயாளிகளின் தேவைக்கு ஏற்ப பயனளிக்க முடிகிறது.

“எனவே, பி.டி.சி-க்கு பாராட்டு தெரிவிப்பதோடு பினாங்கு மருத்துவமனையில் இரத்த வங்கியை நிரப்புவதற்கான அழைப்பினை ஏற்று வருகையளித்த அனைத்து நன்கொடையாளர்களுக்கும் மிக்க நன்றி” என கொம்தார், 3வது மாடியில் நடைபெற்ற இத்திட்டத்தைப் பார்வையிட்ட பின்னர் முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் முதல்வர் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுலா, கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் இயோ சூன் ஹின்; கொம்தார் சட்டமன்ற உறுப்பினர், தே லாய் ஹெங்; மாநில நிதி துறை அதிகாரி, டத்தோ சாருல் பஹியா அபு; பிசிடி தலைமை நிர்வாக இயக்குநர் டத்தோ முகமட். பஜீத் அப்துல் கஹார் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த இரத்த தானம் முகாம் பி.டி.சி, மாநில அரசு விளையாட்டு மற்றும் சமூகநலன் கழகம், பினாங்கு மருத்துவமனை மற்றும் செபராங் ஜெயா மருத்துவனை இணை ஏற்பாட்டில் நடைபெற்றது.

கடந்த 14 வருடங்களாக தொடர்ந்து நடத்தி வரும் இந்த இரத்த தானம் முகாம்
பி.டி.சி-யின்
பெருநிறுவன சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக திகழ்வதாக முகமட் பஜித் கூறினார்.

இந்த திட்டத்தை வருகின்ற காலங்களிலும் தொடர்ந்து நடத்த எண்ணம் கொண்டுள்ளதாக கூறினார்.

“இது மிகவும் ஊக்கமளிக்கும் திட்டமாக அமைகிறது. ஏனெனில் இத்திட்டம் இரத்தம் தேவைப்படுவர்களுக்கு உதவுவதோடு, பி.டி.சி ஊழியர்களுக்கும் சமூகத்திற்கும் இடையிலான உறவை வலுப்படுத்துகிறது, என்றார்.

“கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு 60 பேர்கள் மட்டுமே இரத்த தானம் செய்த வேளையில், இன்று இதுவரை 73 பேர்கள் இரத்த தானம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது என மேலும் தெரிவித்தார்.