பினாங்கில் சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகத் தடை வருகின்ற 2024 ஜனவரி , 10 முதல் 14 வரை திட்டமிடப்பட்டுள்ளது.
அந்தக் காலகட்டத்தில், பினாங்கு நீர் விநியோக வாரியம் (PBAPP) சுங்கை டுவா நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு (LRA) அருகில் நீர் கசிவு ஏற்பட்டு கொண்டிருக்கும் பிரதான சுத்திகரிக்கப்பட்ட நீர் குழாயில் இரண்டு 1,200 மில்லிமீட்டர் (மிமீ) வால்வுகளை மாற்றியமைக்க வேண்டியுள்ளது. எனவே, மாநிலம் முழுவதிலும் உள்ள 22 இடங்களில் குழாய்களை மேம்படுத்துதல் மற்றும் தடுப்பு பராமரிப்பு ஆகியவையும் இதில் அடங்கும்.
இதற்கிடையில், PBAPP தலைமை நிர்வாக அதிகாரி கே.பத்மநாதன் கூறுகையில், எதிர்காலத்தில் இம்மாநிலத்தின் சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோக அமைப்பு சிறந்த முறையில் செயல்பட உத்தரவாதம் அளிக்கப்படுவதை உறுதிசெய்ய இந்த தற்செயல் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும், என்றார்.
அதன்படி, திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடையினால் ஏற்படும் சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், அந்தந்த வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டிகள் நிரம்பி இருப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து உள்நாட்டு மற்றும் வணிகப் பயனீட்டாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இன்று முத்துச் செய்திகள் நாளிதழ் நிருபர்கள், சம்பந்தப்பட்ட தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்து நீர் விநியோக தடைகளைச் சமாளிப்பதற்கான முன்னெடுப்புத் திட்டங்கள் குறித்து கருத்துக்கள் பெறப்பட்டது.
இதற்கிடையில், பினாங்கு மாநகர் கழக (MBPP) மேயர் டத்தோ இராஜேந்திரன் உடன் டத்தோ கெராமாட் உட்பட தீவில் திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடைகளைச் சமாளிப்பதற்கான முன்னெடுப்புத் திட்டங்கள் தொடர்பாக தனது தரப்பு கலந்துரையாடல்கள் நடத்தியதாக டத்தோ கெராமாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் இரண்டாம் துணை முதலமைச்சருமான ஜக்தீப் சிங் டியோ கூறினார்.
“எம்.பி.பி.பி மொத்தம் 75 தண்ணீர் தொட்டிகளை வழங்கும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது, அதில் மற்ற ஒன்பது மாநிலங்களில் இருந்து திரட்டப்படும் வெளிப்புற நீர் தொட்டிகள் இடம்பெறவில்லை.
“பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரண்டு வகையான தண்ணீர் தொட்டிகள் வைக்கப்படும், அதாவது குறிப்பாக குடிப்பதற்கான தண்ணீர் தொட்டிகள்; மற்றொன்று, குளித்தல், துவைத்தல் போன்ற அன்றாட தேவைகளுக்கு வைக்கப்படும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எம்.பி.பி.பி வழங்கும் ஒவ்வொரு நடமாடும் தொட்டியும் டத்தோ கெராமாட் தொகுதி உட்பட 5,600 கன லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்கும்.
“மிக முக்கியமான விஷயம், இந்த காலகட்டத்தில், எம்.பி.பி.பி இன் மேற்பார்வையின் கீழ் உள்ள வணிக வளாகங்கள் வழக்கம் போல் செயல்படுவதை உறுதி செய்யப்படும். இது டத்தோ கெராமாட் தொகுதியும் உள்ளடங்கும்.
“எம்.பி.பி.பி இல் வழங்கப்பட்ட தொட்டியில் இருந்து நீர் ஆதாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவதோடு, அனைத்து பயனீட்டாளர்களும் முன்கூட்டியே தயாரிப்புகளை மேற்கொள்வதற்கு நாங்கள் தொடர்ந்து தகவல்களை வழங்குவோம்,” என்று மனித மூலதன மேம்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் விளக்கமளித்தார்.
இதனிடையே, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் தொடர்பு கொண்டபோது அத்தொகுதி மக்களுக்கு உதவும் நோக்கில் அங்குள்ள 8 எம்.பி.கே.கே உடன் இணைந்து 8 முக்கிய இடங்களை அடையாளம் கண்டுள்ளதாக குறிப்பிட்டார். ஒவ்வொரு இடத்திலும் 1000லிட்டர் நிரப்பக்கூடிய தண்ணீர் தொட்டியை 8 இடங்களில் 30 தண்ணீர் தொட்டி வைக்கப்படும், என்றார்.
இதனை அவ்வட்டார மக்கள் குடிப்பதற்கும் உணவுக்கும் உபயோகிக்காமல் மற்ற அன்றாட தேவைகளை பூர்த்திச் செய்ய பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
அதுமட்டுமின்றி, பெரிய கொள்கலன் லோரியினையும் (40,000 லிட்டர் நீர்) மற்றும் 13,000 லிட்டர் நிரப்ப கூடிய தண்ணீர் தொட்டிகளையும் ஜிரான் ரெசிடென்சி மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார். நீர் பற்றாக்குறை பிரச்சனையை எதிர்நோக்கும் மக்கள் குறிப்பிடப்பட்ட இடங்களில் நீரை பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும், குடிநீர் மற்றும் சமைப்பதற்கான நீரை முன்கூட்டியே சேமித்து வைக்க வேண்டும் என பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் பொதுமக்களை வலியுறுத்தினார்.
பத்து உபான் சட்டமன்ற சேவை மையம் வருகின்ற ஜனவரி 10-14 முதல் ஏற்படும் தண்ணீர் நெருக்கடிக்குத் தயாராவதற்காக இத்தொகுதியின் கீழ் அனைத்து செயல்படும் எம்.பி.கே.கே,
JPWK மற்றும் JBPP உடன் ஒருங்கிணைப்புக் கூட்டத்தை நடத்தியதாக அதன் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் கூறினார்.
பொது மக்களுக்குத் தேவையான உதவிகள் வழங்க அவரது சேவை மையம் எப்பொழுதும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.