பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தவிர்க்க விழிப்புணர்வு அவசியம்

பத்து உபான் அண்மையில் மத்திய அரசு பொது இடங்களில்  குறிப்பாக உணவகங்களில் புகைப்பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டதை முன்னிட்டு பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் திரு. குமரேசன் அவ்வட்டாரத்தில் இருக்கும் உணவகங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார்.

பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு எதிராக பொதுமக்களிடையே விழிப்புணர்வு மிக அவசியம்‘, என சுங்கை டுவா பெலிதா உணவகத்திற்கு வருகையளித்த போது செய்தியாளர்களிடம் விவரித்தார். உணவகம், சிறுகடைகள், வீதி கடைகளில் அமர்ந்து புகைப்பிடிக்கும் போது சிறியவர் முதல் பெரியவர் வரை சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தை அனைத்து உணவக உரிமையாளர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த விதிமுறைகளை பின்பற்றாத வாடிக்கையாளர்களை உடனடியாக எச்சரிக்க வேண்டும் என பரிந்துரை விடுத்தார்.

புகைப்பிடிப்பவர்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பாராளுமன்ற கூட்டத்தில் இதைப்பற்றி முடிவு எடுக்கும் என்றார். ஆனால், பினாங்கு மாநிலத்தில் ஜார்ச்டவுன் உலக பாரம்பரிய தளத்தில் புகைப்பிடிக்க தடை விதித்துள்ள வேளையில் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டார். 

பத்து உபான் சட்டமன்ற அதிகாரிகள் அவ்வப்போது அனைத்து உணவகங்களுக்கும் அதிரடி சோதனை மேற்கொள்வர் என பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் நம்பிக்கை தெரிவித்தார். அதே தினத்தில், சுபைடா உணவகம், சுங்கை நிபா உணவகம் ஆகியவற்றிற்கு சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் வருகையளித்து “Dilarang Merokok” சுவரொட்டியை எடுத்து வழங்கினார். உணவகங்களில் புகைப்பிடித்தால் அந்நபருக்கு அபராதம் விதிக்கப்படும் என்பது வரவேற்கக்கூடியதாகும்.