செபராங் ஜெயா – பொது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பொது உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் சிறந்த முறையில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதில் பினாங்கு மாநில அரசு இணக்கம் கொள்கிறது.

2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட செபராங் ஜெயா பொதுச் சந்தை மற்றும் உணவு வளாக மறுசீரமைப்புத் திட்டம், மாநிலத்தில் பொது வசதிகளை வலுப்படுத்தும் முக்கிய முன்முயற்சி திட்டங்களில் ஒன்றாகும் என முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.
பொதுச் சந்தைகள் வணிக மையங்களாக மட்டுமல்லாமல், உள்ளூர் பொருளாதாரத்தின் இதயமாகவும், சிறு தொழில்முனைவோருக்கான சிறந்த மையங்களாகவும், சமூக உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய சமூக தொடர்பு தளங்களாகவும் விளங்குகின்றன.

30 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்தும், காலத்திற்கேற்ற வசதிகளை வழங்க முடியாத நிலையில் இருந்த பழைய சந்தையை மறுசீரமைப்பு செய்யும் நோக்கில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
“கட்டுமானக் காலத்தில், வர்த்தகர்களின் வருமான ஆதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, லெபோ தெங்கிரி 2 இல் ஒரு தற்காலிக இடத்தில் வர்த்தகர்கள் விற்பனை செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது.
“எனவே, இடமாற்றம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம் செயல்முறை முழுவதும் காட்டப்பட்ட பொறுமை, அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்புக்காக செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி), பினாங்கு மேம்பாட்டுக் கழகம் (பி.டி.சி), ஒப்பந்ததாரர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு மாநில அரசு தனது மிகுந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது,” என்று முதலமைச்சர் செபராங் ஜெயா பொதுச் சந்தை மற்றும் உணவு வளாகத்தை அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா மேற்கொண்டு இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், உள்ளூர் அரசு மற்றும் நகர் & புறநகர் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹெங் மூய் லாய்; செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) மேயர் டத்தோ படெருல் அமின் அப்துல் ஹமீத்; எம்.பி.எஸ்.பி கவுன்சிலர்கள்; எம்.பி.எஸ்.பி மாநகரச் செயலாளர் முகமட் இப்ராஹிம் முகமட் நோர் மற்றும் செபராங் ஜெயா பொதுச் சந்தை மற்றும் உணவு வளாக வியாபாரிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிய பொதுச் சந்தை மற்றும் உணவு வளாகத்தில் தற்போது 253 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஈரப் பொருட்கள் மற்றும் உலர் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அடங்குவதால், இது முறையான, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த திட்டமிடலை பிரதிபலிக்கிறது என சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.
“இந்த வசதிக்கு வியாபாரிகளிடமிருந்து கிடைத்த வரவேற்பு மிகவும் ஊக்கமளிப்பதாக அமைந்தது. பெரும்பாலான கடைகள் 2025 ஏப்ரல்,1 முதல் செயல்படத் தொடங்கியுள்ளன,” என்றும் அவர் கூறினார்.
“இந்த திட்டத்தின் கட்டுமான செலவு சுமார் ரிம20 மில்லியன் ஆகும். மேலும், இது 2024 ஆம் ஆண்டில் முழுமையாக நிறைவடைந்ததன் மூலம் மக்களின் பொருளாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த முதலீடு செய்வதில் எம்.பி.எஸ்.பி உடன் இணைந்து மாநில அரசின் செயல்பாட்டை நிரூபிக்கிறது.
“இந்த முதலீடு மிகவும் வசதியான, சுத்தமான மற்றும் பாதுகாப்பான வணிகச் சூழலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நகரத்தின் வளர்ச்சியையும் உள்ளூர் சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதற்கும் பங்களிக்கிறது.
“இந்தச் சந்தை உரிமம் அல்லாத அங்காடி வணிகர்களுக்கு வணிக இடத்தையும் வழங்குகிறது. இதனால் அவர்கள் வசதியான இடத்தில் சட்ட நடவடிக்கை இல்லாமல் வணிகம் செய்ய முடியும்,” என்று அவர் கூறினார்.
“எதிர்கால மக்கள்தொகை அதிகரிப்பையும், பெரிய அளவிலான வளர்ச்சித் திட்டங்களால் துரிதமாக வளர்ந்து வரும் செபராங் ஜெயா பகுதியையும் கருத்தில் கொண்டு இந்த சந்தை மேம்பாட்டுத் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது,” என அவர் தெரிவித்தார்.
வணிக நெறிமுறைகள், தூய்மை மற்றும் விதிமுறைகள் கடைப்பிடிப்பின் மூலம் வியாபாரிகள் வழங்கப்பட்ட வசதிகளைச் சிறப்பாகப் பயன்படுத்துவார்கள் என மாநில அரசு நம்பிக்கை கொள்வதாக கூறினார்.
இந்த சந்தைக்கு வரும் மக்களின் பழக்கவழக்கங்களில் சுற்றுச்சூழலுக்கு உகந்த சிந்தனை மற்றும் நடைமுறைகளை உருவாக்கும் நோக்கில், வணிகர்கள் பல்வேறு முன்முயற்சிகளை அறிமுகப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உதாரணமாக, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதோ அல்லது தவிர்ப்பதோடு, உணவுக் கழிவுகள் மற்றும் எண்ணெய் கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளைப் பொறுப்புடன் நிர்வகிப்பதை வியாபாரிகள் ஊக்குவிக்கலாம்.
இந்த முயற்சிகள், இந்த சந்தையை ஒரு நிலைத்த, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் மக்களுக்கு நட்பான சூழலாக வளர்வதை உறுதி செய்ய முக்கியமானவை என அறியப்படுகிறது.
இதனிடையே, செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) மேயர் டத்தோ படெருல் அமின் அப்துல் ஹமீத், செபராங் ஜெயா பொதுச் சந்தை மற்றும் உணவு வளாகத்தின் மறுகட்டமைப்பு வியாபாரிகளுக்கும் பயனாளர்களுக்கும் நேரடி பயன்களை அளிப்பதுடன், உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் உந்துசக்தியாக செயல்படுகிறது என்று கூறினார்.