மக்கள் இனமத பேதமின்றி அனைத்து இனத்தின் சமயம் மற்றும் கலாச்சாரத்தை மதிக்க வேண்டும் – பேராசிரியர்

பிறை – பிறை தொகுதியின் சமூக முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டுக் கழகமும் பிறை சட்டமன்ற சேவை மையமும் இணைந்து கிறிஸ்துமஸ் திறந்த இல்ல உபசரிப்பை ஏற்பாடு செய்திருந்தனர். சென் இம்பட் & சஸ்தன் தேவாலய வளாகத்தில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டாக நடைபெறும் இந்த கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டத்தில் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி கலந்து சிறப்பித்தார்.

கிறிஸ்துமஸ் திறந்த இல்ல உபசரிப்பில் இடம்பெற்ற படைப்பு

மேலும், சிறப்புரையாற்றிய இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள் அனைத்து இன மக்களும் ஒன்றுமையாக இருந்து இப்பண்டிகையை மேலும் மெருகூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மலேசிய மக்கள் இனமத பேதமின்றி அனைத்து இனத்தின் சமயம் மற்றும் கலாச்சாரத்தை மதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இனவாதத்தை துடைத்தொழித்து அனைத்து இனமும் தோழமை உணர்வுடன் வாழ வேண்டும். இவ்வகையான உணர்வோடு இவ்வாண்டு கிறிஸ்துமல் தினத்தை கொண்டாட வேண்டும் எனவும் அனைவருக்கும் கிறிஸ்துமல் தின வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

பிறை சட்டமன்ற சேவை மையம் அனைத்து இனங்களின் சமய நிகழ்வுகளுக்கு ஆதரவு வழங்கி வருகிறது. அவ்வட்டாரத்தில் எவ்வித சமய நிகழ்வுகளுக்கும் உதவிகள் தேவைப்பட்டால் பிறை சட்டமன்ற சேவை மையத்தை நாடவும்; அவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என பேராசிரியர் நம்பிக்கை தெரிவித்தார்.

அத்தினத்தன்று கலைநிகழ்ச்சியும் நம் நாட்டின் திறன்மிக்க கலைஞர்களின் படைப்புகளும் நிகழ்விற்கு சிறப்பு சேர்த்தன.அங்கு பொதுமக்கள் புற்றீசல்போல திரண்டனர். சுமார் 1000 பேருக்கு உணவு பண்டங்கள் வழங்கப்பட்டன. இதனிடையே, 200 சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான பரிசுப்பையும் பிறை சட்டமன்ற உறுப்பினர் ப.இராமசாமி அவர்களின் பொற்கரத்தால் எடுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி, செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்களான டேவிட் மார்ஷல், ஜெசன் இராஜ், குமரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.