மற்றுமொரு தங்கத் திட்டம் அறிமுகம்

Admin

கடந்த தவணையில் நடுநிலையான ஆட்சியை மேற்கொண்ட பினாங்கு மக்கள் கூட்டணி அரசு பொருளாதார அடிப்படையில் மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகப் பல தங்கத் திட்டங்களின் வழி உதவித் தொகைகளை வழங்கியது நாம் அறிந்ததே. அவ்வகையில் இம்முறை வேலை செய்யாத இல்லத்தரசிகளுக்கு அடுத்தாண்டு முதல் ஆண்டுதோறும் 100 ரிங்கிட் உதவித் தொகை வழங்கும் தங்கத் தாய்மார்கள் திட்டம் அறிமுகம் காணவிருக்கிறது.

இத்தவணைக்கான முதல் ஆட்சிக்குழு சந்திப்புக் கூட்டத்தைத் தலைமையேற்ற மாண்புமிகு முதல்வர் உயர்திரு லிம் குவான் எங் அண்மையில் நடைபெற்ற ஓர் அதிகாரப் பூர்வ அறிமுக விருந்து நிகழ்ச்சியின் போது, இவ்வறிவிப்பைச் செய்தார். பினாங்கு இல்லத்தரசிகள் உட்பட அனைத்து மகளிரும் மாநில மாற்றத்திற்கு ஒரு காரணி என்பதை கருத்தில் கொண்டு  இந்த அங்கிகாரம் வழங்கப்படுகிறது என்று முதல்வர் சுட்டிக் காட்டினார். 60 வயதிற்கு உட்பட்ட முழு நேரமாக இல்லத்தரசிகளாகத் திகழும் பெண்கள் 100 ரிங்கிட் உதவித் தொகையைப் பெறத் தகுதியுடையவராகின்றனர். 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாநில அரசு தங்க மூத்த குடிகள் திட்டத்தின் கீழ் 100 ரிங்கிட் வழங்குவதால் அவர்கள் தவிர்க்கப்படுகிறார்கள். மேலும் தனித்து வாழும் தாய்மார்களுக்கும் உதவித் தொகை வழங்கப்படுவதால் அவர்களும் இத்திட்டதில் தவிர்க்கப்படுவார்கள்.

ஆட்சிக்குழு உறுப்பினர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத் துறைத் தலைவர்கள், அரசுத் துறை உயர் அதிகாரிகள், ஊழியர்கள், பினாங்கு நகராண்மைக் கழகம் மற்றும் பினாங்கு செபெராங் ஜெயா தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் யாவும் இவ்வறிமுக விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

இதற்கிடையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தங்க மூத்தகுடிகள் திட்டம், தங்க மாணவர் திட்டம், தங்கக் குழந்தை திட்டம், மாற்றுத் திறனாளிகள் திட்டம் போன்ற மற்ற தங்கத் திட்டங்கள் யாவும் இத்தவணைக்கான ஆட்சியிலும் தொடரப்படும் என்றும் முதல்வர் லிம் கூறினார். அதுமட்டுமல்லாது, தன்னார்வ ரோந்து படையைத் தொடங்கியதன் மூலம் மாநில அரசு அடைந்த வெற்றியைத் தொடர்ந்து, மகளிருக்கென்று ஒரு தனித்துவமிக்க தன்னார்வ படையொன்றையும் தொடங்கவுள்ளதாக முதல்வர் தெரிவித்தார். எனினும் அந்த மகளிர் அணியின் முதன்மை நோக்கத்தை முதல்வர் விரிவாகக் கூறவில்லை. இவ்வணி முதல்வர் அலுவலகத்தின் கீழ் அவரின் நேரடிப் பார்வையில் இயங்கக்கூடியதாய் திகழும் என விளக்கமளித்தார்.