மலேசியாவிலே தமிழ்ப்பள்ளிகளுக்கு வருடாந்திர மானியம் வழங்கும் முதல் மாநிலமாக பினாங்கு திகழ்கிறது

Admin

செபராங் பிறை – மலேசியாவிலே தமிழ்ப்பள்ளிகளுக்கு வருடாந்திர மானியம் வழங்கும் முதல் மாநிலமாக பினாங்கு அரசாங்கம் திகழ்கிறது.

பினாங்கு மாநில அரசாங்கம் கடந்த 15 ஆண்டுகளாக இந்தியர் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல முன்னெடுப்புத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

பினாங்கு இந்தியர்களுடன் பிரதமர் எனும் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட
பராமரிப்பு அரசாங்க மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் இவ்வாறு உரையாற்றினார்.

“கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் இதுவரை 28 தமிழ்ப்பள்ளிகளுக்கும் ரிம25 மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இந்நிதி ஒதுக்கீடு மூலம் தமிழ்க்கல்வி வளர்ச்சி மட்டுமின்றி உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் துணைபுரிகிறது. ஒவ்வொரு பள்ளிகளிலும் 21-ஆம் நூற்றாண்டு வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

“தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகளில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான அறிவியல் போட்டிகளில் பல சாதனைகள் படைத்துள்ளன.

“மாநில அரசாங்கம், மதப் பின்னணி மற்றும் இனத்தைப் பொருட்படுத்தாமல் நமது குழந்தைகளின் கல்வி மற்றும் மனித வள வளர்ச்சிக்கான பொறுப்பை ஒருபோதும் தட்டிக்கழிக்கவில்லை,” என்று சாவ் கூறினார்.

பினாங்கில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் எதிர்கொள்ளும் நிலப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் மாநில அரசு எப்போதும் தமது உறுதிபாட்டைக் காண்பிக்கிறது.

அசாட் தமிழ்ப்பள்ளி முதல் அண்மையில் இராஜாஜி தமிழ்ப்பள்ளிக்கு ரிம29 மில்லியன் மதிப்பிலான நிலத்தைக் கையகப்படுத்தியது, குறிப்பிடத்தக்கது.

அசாட் தமிழ்ப்பள்ளி, பத்து காவான் தமிழ்ப்பள்ளி, வால்டோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி, சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி, இராஜாஜி தமிழ்ப்பள்ளி ஆகியவை பினாங்கு மாநில அரசாங்க நிர்வாகத்திடம் இருந்து நிலம் பெற்ற தமிழ்ப்பள்ளிகள் பட்டியலில் ஆகும்.

மேலும், மாநில அரசாங்கம் தாமான் பாகானில் 29வது தமிழ்ப்பள்ளி அமைக்க நிலம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தை (PHEB) நிறுவிய ஒரே மாநிலம் பினாங்கு ஆகும். இந்து அறப்பணி வாரியத்தின் சாதனைகள் இந்த மாநிலத்தில் உள்ள இந்து சமூகம் அல்லது கோவில்கள் மற்றும் மத நிறுவனங்கள் தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்க ஒரு தொடக்க புள்ளியாக மாறியுள்ளது என்பது பாராட்டக்குரியது.

“இந்திய சமூகத்திற்கு ஒரு மலேசிய குடிமகனின் அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அதில் அவர்களின் நல்வாழ்வு, குடியுரிமை, கல்வி, பொருளாதாரம் என அனைத்து கூறுகளுக்கும் அடங்கும்,” என முன்னாள் இரண்டாம் துணை முதலமைச்சர் பேராசிரியர் ப.இராமசாமி கேட்டுக்கொண்டார்.

“அனைத்து இன மக்களின் உரிமைகளுக்கும் முன்னுரிமை அளித்தல் எனும் ஒற்றுமை அரசாங்காத்தின் அடிப்படை கொள்கைக்கு ஏற்ப செயல்பட வேண்டும்.

“ஏழ்மை நிலையில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு உடனடி உதவிகள் வழங்குதல்; சிறந்த தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வி கூடங்களில் கல்வி கற்க வாய்ப்பு அளித்தல் ஆகிய அம்சங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது,” என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது பேரூரையில் இவ்வாறு கூறினார்