மலேசிய சாதனைப் புத்தகத்தில் பினாங்கு நீலக்கலக்கி சிலம்பம் சங்கம் பதிவு

ஜார்ச்டவுன் – 1975-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட பினாங்கு நீலக்கலக்கி சிலம்பம் சங்கம் பினாங்கில் சிறப்பாக செயல்ப்பட்டு வருவதோடு மூத்தச் சங்கம் என்ற அடிப்படையில் மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.

குச்சி சண்டையை அடிப்படையாகக் கொண்ட இந்த தற்காப்பு கலை ஒரு தனித்துவ மிக்கப் பாரம்பரியம் கலையாகும். இது பாதுகாக்கப்பட வேண்டிய கலை என்பதால் அதனை இந்தக் கழகம் 47 ஆண்டுகளாகப் பராமரித்து வருகிறது.

பினாங்கு நீலக்கலக்கி சிலம்பம் சங்கம் பல சர்வதேச அகப்பக்கங்கள் மற்றும் நாளிதழ்களில் இடம்பெற்றுள்ளன. 14 பிப்ரவரி 2017 அன்று “Nine reasons to visit Penang that have nothing to do with street food” என்ற தலைப்பில் சி.என்.என் இல் இச்சங்கத்தின் பெயர் பட்டியலிட்டது பெருமைக்குரியச் சாதனைகளில் ஒன்றாகும்.

இந்தச் சங்கம் அனைத்துலக ரீதியில் வெளியீடுக் காண கட்டுரைகளை தயாரிப்பதிலும் தீவிரமாக ஈடுபாடுக் கொள்கிறது. உதாரணமாக, மலேசியாவின் தற்காப்பு கலை கட்டுரையான, ‘Martial Art as Intangible Cultural Heritage’ UNESCO ICHCAP இல் வாழும் பாரம்பரிய தொடரில் வெளியிடப்பட்டது.

“இந்தக் கலையைப் பற்றியக் கூடுதல் தகவல்களை அறிவதற்குப் புதிய அகப்பக்க அறிமுகம் துணைபுரிகிறது. இது இச்சங்கத்தை முன்னோக்கிச் செல்ல வழிவகுக்கும்.

“இந்த அகப்பக்கம் தொடங்கப்பட்டதன் மூலம், பினாங்கில் நீலக்கலக்கி சிலம்பம் கலையை மேலும் பரவலாக ஊக்குவிக்கும். இது மறைமுகமாக பினாங்குக்கு அதிக சுற்றுலாப் பயணிகளையும் கலை ஆர்வலர்களையும் ஈர்க்கும்,” என பினாங்கு நீலக்கலக்கி சிலம்பம் சங்க அகப்பக்கத்தைத் துவக்கி வைத்து தமதுரையில் பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பினாங்கு நீலக்கலக்கி சிலம்பம் சங்கமும் தலைமை மாஸ்டரான திரு.அன்பானந்தன்; பினாங்கு மாநில கலாச்சாரம் மற்றும் கலைத்துறை இயக்குனர் ஷபீ பின் சே; GTWHI தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஆங் மிங் சீ; சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சின் கலாச்சார கொள்கைப் பிரிவின் செயலாளர்
டாக்டர் தான் அவாங் பெசார்
மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் பேசுகையில் சாவ், பினாங்கு மாநில பாரம்பரியத்தின் நம்பகத்தன்மையைக் கால ஓட்டத்தில் இழந்துவிடாமல் பேணுவதில் இச்சங்கம் மற்ற தற்காப்புக் கலை அமைப்புகளுடன் ஒத்துழைப்பு நல்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

நீலக்கலக்கி இணையதள வலைப்பக்கத்தை மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ், பேராசிரியர் ப.இராமசாமி மற்றும் பிரதிநிதிகள் ஆகியோர் துவக்கி வைத்தனர்.