மளிகைக் கடைகளில் மலிவு & போலி மதுபான விற்பனையைக் கையாள வேண்டும்  – டேவிட்

செபராங் பிறை – செபராங் பிறையைச் சுற்றியுள்ள அனைத்து மளிகைக் கடைகளிலும் மலிவு மற்றும் போலி மதுபான விற்பனையைத் தடுக்கும் முயற்சிகள் தொடர வேண்டும்.

செபராங் பிறை மாநகர் கழக (எம்.பி.எஸ்.பி) கவுன்சிலர் டேவிட் மார்ஷல், அக்கழக வளாகத்தில் நடைபெற்ற கழக சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு  செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

அவரது கூற்றுப்படி, கடந்த 2016ஆம் ஆண்டு முதல், முன்னாள் உள்ளாட்சி, போக்குவரத்து மேலாண்மை மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினரும் நடப்பு முதல்வருமான சாவ் கொன் யாவ் உடன் இவ்விவகாரம் தொடர்பாக இரண்டு சந்திப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன,  என்றார்.

“எம்.பி.எஸ்.பி அமலாக்கத்தின் கீழ் மலிவு மற்றும் போலி மதுபானங்கள் மளிகைக் கடைகளில் விற்க  அனுமதி கிடையாது. இது போன்ற கடுமையான நிபந்தனைகள் மற்றும் கொள்கைகள் எம்.பி.எஸ்.பி-யில் நடைமுறை காண்கிறது.

“மேலும், இந்த பரிந்துரையை மாநில அரசு மட்டத்திலும் கொண்டு வரப்பட்டது, ஏற்கனவே இது தொடர்பான இரண்டு சந்திப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் அவர்களும் கொள்கை ரீதியாக ஒப்புக்கொண்டார்.
ஆயினும், இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் ஆய்வுக்காக  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

“கோலாலம்பூர் ஊராட்சி மன்றம்  செயல்படுத்திய ஒட்டுமொத்த மதுபான விற்பனைத் தடையைப் போல்  செபராங் பிறை வட்டாரத்தில் நாங்கள் செயல்படுத்த விரும்பவில்லை. மாறாக,  மதுபானம் விற்க அனுமதிக்கப்படும் பிரத்யேக வளாகங்களில் மட்டுமே விற்கப்பட வேண்டும். அதிலும், மளிகைக் கடைகளில் விற்கப்படுவதை நாங்கள் முற்றிலும் விரும்பவில்லை.

“இதன் மூலம், கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மிகவும் துரிதமாக செயல்படுத்த முடியும்,” என்றார்.

“மேலும், மதுபானம் விற்பனை செய்ய பிரத்யேக வளாகங்களை மட்டுமே அனுமதிப்பதன் மூலம், குறைந்த வருமானம் உள்ள குடும்பங்கள் (பி40) மற்றும் பள்ளி மாணவர்களிடையே மலிவு மற்றும் போலி மதுபானங்களை அணுகுவதை மேலும் கட்டுப்படுத்த முடியும் என்று டேவிட் நம்பிக்கை தெரிவித்தார்.

“எம்.பி.எஸ்.பி மட்டத்தில் எங்களின் இந்தப் பரிந்துரையின்  மூலம் பொது மக்களின் நல்வாழ்வு மற்றும் ஒழுக்கத்தை  பேணுவதோடு, மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கற்பிப்பதாகும்,” என்று அவர் விளக்கமளித்தார்.

இதனிடையே, இக்கொள்கை பினாங்கு2030 இலக்கினை அடைய ஒரு மையக்கல்லாக திகழும்.