மாநில அரசின் முயற்சியில் பட்டா ஆவணங்கள் கிடைக்கப்பெற்றது – திரு.ஜெக்டிப்

தாமான் துன் சர்டோன் பிரிவு மூன்று அடுக்குமாடி குடியிருப்பாளர்களை ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ மற்றும் ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர் சந்தித்தனர்.

பினாங்கில் கடந்த 1960-ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட 3,310 யூனிட் வீடுகள் உள்ளடங்கிய 6 மலிவு விலை அடுக்குமாடி வீடமைப்புத் திட்டத்திற்கு பட்டா ஆவணம் கிடைக்கப்பெறவில்லை. இதில் மிக பழமையான மலிவு விலை அடுக்குமாடி வீடமைப்புத் திட்டமாக மாக் மண்டின் திகழ்கிறது.
பினாங்கு வாழ் மக்கள் பல ஆண்டுகளாக, பட்டா ஆவணம் கிடைக்கப்பெறாமல் தவித்த பொது மக்களுக்கு பினாங்கு மாநில அரசின் முயற்சியில் 3 அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு பட்டா கிடைக்கப்பெறும் என தாமான் துன் சர்டோனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ.
மூன்று வருட கால காலந்தாய்வுக்குப் பின்னர் 595 யூனிட்களை கொண்ட மூன்று வீடமைப்பு திட்டங்களுக்கு பட்டா ஆவணங்கள் கிடைக்கப்பெற்றது. 1978-ஆம் ஆண்டு கட்டப்பட்ட தாமான் துன் சர்டோன் பெராலிஹான் (139 யூனிட்கள்), 1985-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பத்து லஞ்சாங் பொது வீடமைப்புத் திட்டம் (316 யூனிட்கள்), 1995-ஆம் ஆண்டு கட்டப்பட்ட தாமான் துன் சர்டோன் பிரிவு மூன்று பொது வீடமைப்புத் திட்டம்(140 யூனிட்கள்) என 595 மலிவு விலை வீடமைப்புக் குடியிருப்பாளர்களுக்கு பட்டா ஆவணம் வழங்கப்பட்டது என மேலும் விவரித்தார் ஆட்சிக்குழு உறுப்பினர் .
மேலும், 1981-ஆம் ஆண்டு கட்டப்பட்ட தாமான் துன் சர்டோன் வீடமைப்புத் திட்டம் (655 யூனிட்கள்), 1979-ஆம் ஆண்டு கட்டப்பட்ட தாமான் துன் சர்டோன் பிரிவு 1(200 யூனிட்கள்), பிரிவு 11 (920 யூனிட்கள்), மற்றும் 1982-ஆம் ஆண்டு கட்டப்பட்ட மாக் மண்டின் அடுக்குமாடி குடியிருப்பு (620 யூனிட்கள்) என பட்டா ஆவணங்கள் விண்ணப்பம் நிலுவையில் உள்ளது. தொடர்ந்து இவ்வாண்டுக்குள் எஞ்சி இருக்கும் இதர வீடமைப்புத் திட்டங்களுக்கும் மாநில வீடமைப்பு ஆட்சிக்குழுவின் கீழ் நியமிக்கப்பட்ட சிறப்பு குழுவினரின் உதவியுடன் பட்டா ஆவணம் கிடைக்க மாநில அரசு முழு மூச்சுடன் செயல்படும் என மேலும் விவரித்தார் திரு.ஜெக்டிப். பினாங்கில் 59 திட்டங்களில் 16,420 வீடமைப்புகள் பட்டா ஆவணத்திற்கு விண்ணப்பித்துள்ள வேளையில் மேலும் 59 திட்டங்களில் 17,526 குடியிருப்பாளர்கள் அவ்வாறு செய்ய தவறியுள்ளனர்.. எனவே, பொது மக்கள் பட்டா ஆவணம் விண்ணப்பிக்க வீடமைப்பு துறையை நாடுமாறு பரிந்துரைத்தார்.
இச்செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர் மாநில அரசுக்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மாநில வீடமைப்புத் துறையினர் அவ்வப்போது அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வுக் காண்பதை பாராட்டினார்.document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);