மாநில அரசு STEM கல்விக்கு முன்னுரிமை – பேராசிரியர்

Admin

மாச்சாங் புபோக் – பினாங்கு மாநில அரசாங்கம் எப்போதும் மாணவர்களின் கல்விக்கு குறிப்பாக STEM கல்வியில் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) முன்னேற்றம் காண்பதற்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

மனித வளம், கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆட்சிக்குழு உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் இராமசாமி, மாணவர்களிடையே STEM பாடங்களில் குறைந்து வரும் ஆர்வத்தை மேலோங்கச் செய்ய பல ஆண்டுகளாக பல முன்னெடுப்புத் திட்டங்கள் எடுத்து வருவதாகக் கூறினார்.

“நாங்கள் மாணவர்களிடையே STEM கல்வி மீது ஆர்வத்தை வெளிக் கொணரவும், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் கண்டறியவும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.

“இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுக் காணும் பொருட்டு, பினாங்கு STEM திட்டத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இது ஆறு மையங்கள் இணைந்து மாநிலக் கல்வித் துறையுடன் ஒத்துழைக்கும் ஒருங்கிணைப்பு அமைப்பாகச் செயல்படுகிறது.

“பினாங்கு STEM திட்டத்தில் கீழ் பினாங்கு திறன் மேம்பாட்டு மையம் (PSDC), பினாங்கு அறிவியல் கிளஸ்டர், டெக் டோம் பினாங்கு, @CAT, Penang Math Platform, பினாங்கு டிஜிட்டல் நூலகம் ஆகியவை அடங்கும்.

“இந்த அரசு முகமைகள் மாணவர்களுக்கு STEM கற்றலை வழங்குவதில் முன்னணி வகிக்கின்றன.
“இந்த மையங்களின் கீழ் பல STEM பட்டறைகள், நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளை நடத்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் மாணவர்களை தூண்டுவதற்கும், உற்சாகப்படுத்துவதற்கு வழி வகுக்கிறது,” என்று மச்சாங் புபுக்கில் உள்ள வான்கோஹ் எமினண்ட் தங்கும்விடுதியில் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா நிகச்சியை தொடங்கி வைத்த பின்னர் இராமசாமி தனது உரையில் இவ்வாறு கூறினார்.

மேலும் கூறுகைஇல் இராமசாமி, தரமான திறன் மிக்க மனித வளத்தை உருவாக்க STEM கல்வி அவசியமாகும். பினாங்கில் நடப்பு முதலீட்டாளர்களைத் தக்கவைக்கவும், அதேவேளையில் புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கவும், தொழில்துறையின் தேவைக்கேற்ப திறன் மிக்க பட்டாத்தாரிகளை உருவாக்கம் காண்பதும் முக்கியம், என்றார்.

அனைத்து தரப்பினரும் கூட்டு முயற்சியில் ஒன்றிணைந்து செயல்பட்டால் மாணவர்களிடையே STEM கற்றலை ஊக்குவிக்க முடியும், என்றார்.

பினாங்கில் STEM முன்னெடுப்புத் திட்டங்களை வழிநடத்தி திறன் மிக்க மனித வளத்தை உருவாக்க பல பெருநிறுவனங்களின் ஆதரவும் ஒத்துழைப்பையும் வலியுறுத்துவதாகக் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் 2022-ஆம் ஆண்டுக்கான மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் சிறந்த சேவையாற்றிய ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.