மேக விதைப்பு நடவடிக்கையின் வெற்றி வானிலையைப் பொறுத்தது – முதல்வர்

Admin
  1. ஜார்ச்டவுன் – பினாங்கில் மேக விதைப்பு செயல்பாடு பல்வேறு காரணிகள் குறிப்பாக தற்போதைய வானிலை மற்றும் மேகம் உருவாக்கம் ஆகியவற்றை பொறுத்து
    வருகின்ற ஏப்ரல்,29 முதல் மே,7 வரை திட்டமிடப்பட்டுள்ளது.

பினாங்கில் உள்ள நீர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மேக விதைப்பு பணிகளை இம்மாத இறுதியில் மேற்கொள்வதற்கான முன்மொழிவும் மழை உற்பத்தி செயல்முறையும் வெற்றிக்கரமாக இருப்பதை உறுதிசெய்வது ல் வானிலையை பொறுத்தது என மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் விளக்கமளித்தார்.

“முன்மொழியப்பட்ட மேக விதைப்பு நடவடிக்கைத் தொடர்பான தகவலை ஊடக அறிக்கையின் மூலம் பினாங்கு நீர் விநியோக வாரியத்தின் (பி.பி.ஏ.பி.பி) தலைமை நிர்வாக அதிகாரி கடந்த ஏப்ரல்,25 அன்று தெரிவித்தார்.

“இருப்பினும், இது சம்பந்தப்பட்ட அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள வானிலை நிலையைப் பொறுத்தது. அப்பகுதியில் மேகமூட்டம் இல்லை என்றால், இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது,” என்று மாநில முதல்வர் சாவ் கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

முன்னதாக, பி.பி.ஏ ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் மற்றும் பி.பி.ஏ.பி.பி இன் தலைமை நிர்வாக அதிகாரி, கே.பத்மநாதன் ஓர் ஊடக வெளியீட்டின் மூலம், மலேசிய வானிலை ஆய்வுத் துறை (METMalaysia) ஏப்ரல்,29 முதல் மே,7 வரை முதல் மேக விதைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பரிந்துரைத்துள்ளது, என்றார்.

மலேசிய அரசு ஆகாயப்படை (TUDM) விமானத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையானது ஆயர் ஈத்தாம் அணை மற்றும் தெலுக் பஹாங் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழைப் பொழிந்து அதன் இரண்டு அணைகளையும் நிரப்புவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த மேக விதைப்பு நடவடிக்கைக்கு நிதியளிக்க மாநில அரசு ரிம400,000 பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஏப்ரல், 25 அன்று, ஜனவரி 1, 2023 முதல் ஆயிர் ஈத்தாம் அணை மற்றும் தெலுக் பஹாங் அணையின் கொள்ளளவு முறையே 37.7 சதவீதம் மற்றும் 15.4 சதவீதம் குறைந்துள்ளது.

இது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குறைந்த மழைப்பொழிவு (காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையது) மற்றும் 2023 இல் பினாங்கு மாநிலத்தில் அதிக நீர் தேவையும் இதற்கு முதன்மை காரணமாகும். அதே நேரத்தில், இரண்டு அணைகளும் பாதுகாப்பான அளவுக்கு நீர் நிரப்பப்படும் வரை, பினாங்கு நீர் பயனீட்டாளர்கள் சிக்கனமாகப் பயன்படுத்தி தனது பங்கை ஆற்ற வேண்டும் என்று (பி.பி.ஏ.பி.பி) நம்பிக்கை தெரிவித்தது.

இன்று (ஏப்ரல் 27) மதியம் 2.00 மணி நிலவரப்படி ஆயிர் ஈத்தாம் அணையின் கொள்ளளவு 44.4 சதவீதமாகவும், தெலுக் பஹாங் அணையின் கொள்ளளவு 48.7 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.